வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்டங்களில் 2023-24, 2024-25 மற்றும் 2025-26-ம் ஆண்டுகளில் பொதுத் தேர்வுகளில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 100 சதவீத தேர்ச்சிபெற்ற பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்குப் பாராட்டு விழா, காட்பாடியில் உள்ள வி.ஐ.டி பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.
வி.ஐ.டி வேந்தர் கோ.விசுவநாதன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக பள்ளிக்கல்வி மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் ராஜ்மோகன் கலந்துகொண்டு தலைமை ஆசிரியர்களுக்குப் பாராட்டு சான்றிதழை வழங்கினார்.
100-க்கு 100 சதவீதம் தேர்ச்சிபெற்ற 341 பள்ளிகளைச் சேர்ந்த தலைமை ஆசிரியர்களுக்கு ரூ.52 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
விழாவில் பேசிய வி.ஐ.டி வேந்தர் கோ.விசுவநாதன், “பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பு (ஓ.இ.சி.டி) நாடுகள் நடத்திய சர்வேத மாணவர் மதிப்பீட்டு தர வரிசையில் இந்தியா 2009-ல் கலந்து கொண்டது. இதில், 73 நாடுகள் பங்கேற்றன. இந்தியா 72-வது இடம் பிடித்தது.
இந்த மாணவர் தர வரிசை போட்டியில் இந்தியா பங்கேற்பது இல்லை. அந்தப் போட்டியில் பங்கேற்கும் சூழலை உருவாக்க வேண்டும். அதேபோல, அரசுப் பள்ளிகளில் எண்ணிக்கையிலே அதிகம் இருந்தாலும் தரத்தையும் உயர்த்துவதற்கு வேண்டிய நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும்.

கடந்த 10 ஆண்டு காலத்தில், இந்தியா முழுவதும் 94,000 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. 51,000 தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டிருக்கின்றன. தமிழ்நாட்டிலும் அதே நிலைமைதான். 246 பள்ளிகள் மூடப்பட்டிருக்கின்றன. அதற்குக் காரணம் மாணவர்கள் இல்லாததுதான். 1,204 பள்ளிகளில் மாணவர் சேர்க்கை இல்லை. அரசுப் பள்ளிகளையும் தனியார் பள்ளிக்குச் சமமாக செய்ய வேண்டுமானால், `என்ன செய்ய வேண்டும்?’ என்பதை அமைச்சர் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்தியாவில் ஆண்டுதோறும் 1,260 மணி நேரம் பள்ளி நேரமாக உள்ளது. தென்கொரியாவில் 2,640 மணி நேரம். சீனாவில் 2,940 மணி நேரம் பள்ளிகள் நடைபெறுகின்றன. சீனா, கொரியா, ஜப்பான், சிங்கப்பூர், பின்லாந்து நாடுகள் கல்விக்கு அதிகம் முக்கியத்துவம் தருகின்றன.
அந்த நாடுகளோடு போட்டிப் போடுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை ஒரு குழு அனுப்பி ஆய்வு செய்திட வேண்டும். கல்விக்குக் கூடுதலாகச் செலவிட வேண்டும். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீத அளவுக்கு கல்விக்குச் செலவிட வேண்டும்’’ என்றார்.
இதையடுத்து பேசிய அமைச்சர் ராஜ்மோகன், “நாடு முழுவதும் கடந்த 10 ஆண்டுகளில் 94,000 பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக வேந்தர் விசுவநாதன் குறிப்பிட்டார். தமிழகத்திலும் 200-க்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடப்பட்டுள்ளன என்பது உண்மைதான். த.வெ.க அரசு பொறுப்பேற்று 6 மாதங்களில் ஓர் அரசு பள்ளியைக்கூட மூடவில்லை; மாணவர் சேர்க்கை குறைந்த அரசுப் பள்ளிகளையும் மூட மாட்டோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
மூலை, முடுக்கு, மலைச் சிகரங்களில் மனிதக் காலடி படுவதற்கே சங்கடப்படக்கூடிய முடுக்குகளில் யாரோ ஓர் ஏழை வீட்டுக் குழந்தையும் படிக்க வேண்டும் என்பதற்காக ஒற்றை ஆசிரியரை வைத்துக்கொண்டு ஒரு பள்ளிக்கூடம் காத்திருக்கிறது. அந்த ஒரு மாணவனுக்காக அரசுப் பள்ளிகளை நாங்கள் மூட மாட்டோம்; மூட விட மாட்டோம்.

அதற்குப் பதிலாக மாணவர் சேர்க்கையை அதிகரிக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்துக் குழந்தைகளும் வெற்றிபெற வேண்டும் என நினைப்பது ஆசிரியர்தான். கற்றலில் புதிய அணுகுமுறைகளைப் புகுத்தி வருகிறோம். கல்வியை நோக்கி, மாணவர்கள் என்ற நிலையில் இருந்து மாணவர்களை நோக்கி கல்வி என்ற நிலைக்கு கல்வியை நகர்த்தி வருகிறோம். கதைகள் வழியாக கணிதம் கற்று தருகிறோம். மாணவர்களுக்குக் கற்றலை மேம்படுத்த பாடத்திட்டத்தையும் மேம்படுத்தி வருகிறோம்.
கல்வித்துறை என்பது முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மாணவர்களை நோக்கி, ஆசிரியர்களுக்குத் தேவைப்படுகிற அங்கீகாரத்தை நோக்கி, தனியார் பள்ளிகளை விட கற்றல் வழியே மகிழ்ச்சி அடைந்து சந்தோஷமான குழந்தைகளை உருவாக்கும் நோக்கில் அரசுப் பள்ளிகளை மாற்றிக்கொண்டிருக்கிறோம்.
நடப்பாண்டில் பள்ளிக்கல்விக்காக ரூ.44,527 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. பள்ளி நிறைவு திட்டத்தின் கீழ் 3,734 அரசு பள்ளிகளை மேம்படுத்தப்படுத்த ரூ.2,132 கோடி மதிப்பில் திட்டமிடப்பட்டுள்ளன. 10,000 அரசுப் பள்ளிகளில் தூய்மை குடிநீர், கழிப்பறை பராமரிப்பு மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்த சூப்பர் கிளீன், சூப்பர் கேம்பஸ் திட்டத்துக்காக ரூ.139 கோடி ஒதுக்கப்பட்டுள்ளன’’ என்றார்.