எல்லாவற்றுக்குமான செயலியாக மாறும் X: `2036-ல் பணம் முக்கியத்துவத்தை இழக்கும்’ – எலான் மஸ்க் கணிப்பு | Elon Musk expands X into US banking

Spread the love

சமூக ஊடக தளமான X-ஐ வெறும் தகவல் பரிமாற்ற தளமாக அல்லாமல், அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து சேவைகளையும் வழங்கும் “எல்லாவற்றிற்குமான செயலி’ ஆக மாற்ற வேண்டும் என்பது எலான் மஸ்க்கின் நீண்டகால இலக்காக இருந்து வருகிறது. அந்த இலக்கை நோக்கி முக்கிய முன்னேற்றமாக, X Money என்ற வங்கிச் சேவையை அமெரிக்காவில் பிரீமியம் மற்றும் பிரீமியம்+ சந்தாதாரர்களுக்காக X அறிமுகப்படுத்தியுள்ளது.

ஆரம்பத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான உயர்மட்ட பயனர்களுக்கு மட்டும் சோதனை அடிப்படையில் வழங்கப்பட்ட இந்தச் சேவை, தற்போது அனைத்து கட்டணச் சந்தாதாரர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

X Money மூலம் பயனர்கள் செயலியை விட்டு வெளியேறாமல் வைப்புத்தொகைகளை வைத்திருக்கவும், பிற பயனர்களுக்கு பணம் அனுப்பவும், கட்டணங்களைச் செலுத்தவும், வங்கிப் பரிமாற்றங்களை மேற்கொள்ளவும், காசோலைகளை அஞ்சல் மூலம் அனுப்பவும் முடியும். சமூக ஊடக தளத்திலேயே முழுமையான நிதிச் சேவைகளை வழங்கும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.

பயனர்களின் வைப்புத்தொகைகள் நியூ ஜெர்சியைத் தலைமையிடமாகக் கொண்ட Cross River Bank-இல் வைக்கப்படுகின்றன. இந்த வைப்புகளுக்கு அமெரிக்காவின் Federal Deposit Insurance Corporation (FDIC) மூலம் 250,000 டாலர் வரை காப்பீடு வழங்கப்படுகிறது. மேலும், வைப்புத்தொகைகளுக்கு ஆண்டுக்கு 6 சதவிகிதம் வரை வருமானம் வழங்கப்படும் என்றும் X Money தெரிவித்துள்ளது. பிரீமியம்+ சந்தாதாரர்கள் நேரடியாக அதிகபட்ச வட்டி விகிதத்தைப் பெற முடியும். அதேவேளையில், பிரீமியம் பயனர்கள் குறிப்பிட்ட நேரடி வைப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்த பின்னரே அந்தச் சலுகையைப் பெற முடியும்.

சீனாவின் WeChat செயலியைப் போன்று தகவல் பரிமாற்றம், பொருள்கள் வாங்குதல், பணப் பரிவர்த்தனை உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் ஒரே தளத்தில் வழங்கும் செயலியாக X-ஐ மாற்ற வேண்டும் என்பதே மஸ்க்கின் நோக்கமாகும். PayPal-இன் Venmo, Block நிறுவனத்தின் Cash App மற்றும் SoFi போன்ற டிஜிட்டல் கட்டணச் செயலிகளுடன் போட்டியிடும் வகையில் X Money வடிவமைக்கப்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *