எல்லை மீறிய அமைச்சர்… மீண்டும் மீண்டும் நீக்கப்பட்ட பேச்சு.. இதுக்கு இல்லையா சார் ஒரு END? – Kumudam

Spread the love

அமுதன் கொலை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கொண்டு வந்த கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்றது. அப்போது, மாணவர் கொலைக்கு பின்னணியில் போதைப்பொருள் விவகாரம் இருப்பதாக உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டியதுடன், சட்டம்-ஒழுங்கு தொடர்பாகவும் அரசை விமர்சித்தார்.

இதற்கு பதிலளித்த தவெக அமைச்சர் நிர்மல் குமார், திமுக ஆட்சிக் காலத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்ததாகக் குற்றம்சாட்டினார். மேலும், போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்குடன் முதலமைச்சர் குடும்பத்தினருக்கு தொடர்பு இருந்ததாகவும் அவர் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இதனைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்தார். போதைப்பொருள் விவகாரங்களில் முந்தைய திமுக அரசு எடுத்த நடவடிக்கைகளை அவர் சுட்டிக்காட்டியதுடன், தவெக அமைச்சர்கள் மீதான சர்ச்சைகள் குறித்தும் கேள்வி எழுப்பினார்.

விவாதம் சூடுபிடித்த நிலையில், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா குறுக்கிட்டு பேசினார். அவரது பேச்சில் இடம்பெற்ற சில கருத்துகள் அவையின் கண்ணியத்துக்கும் விதிகளுக்கும் மாறாக இருப்பதாகக் கூறி, சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரன் தலையிட்டார். தொடர்ந்து, அந்தப் பகுதிகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்குமாறு உத்தரவிட்டார்.

இதன் மூலம் இந்தக் கூட்டத்தொடரில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் பேச்சு அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படுவது மீண்டும் கவனம் பெற்றுள்ளது. ஏற்கனவே அவரது பேச்சுகள் தொடர்பாக அவைக்குறிப்பில் இருந்து பகுதிகள் நீக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மீண்டும் அதே நிலை ஏற்பட்டுள்ளது.

அமுதன் கொலை போன்ற முக்கியமான விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டிய சட்டப்பேரவையில், பிரச்னையின் மையத்தைவிட ஆளும் தரப்பு – எதிர்க்கட்சி இடையிலான வார்த்தைப் போர் முக்கியத்துவம் பெறுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ஒரே அமைச்சரின் பேச்சு தொடர்ந்து அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படுவது தொடர்பாகவும் அரசியல் வட்டாரத்தில் கேள்விகள் எழுந்துள்ளன.

“எல்லை மீறும் பேச்சு… அவைக்குறிப்பில் இருந்து நீக்கம்… மீண்டும் அதே கதை… இதற்கு எப்போது END?” என்ற கேள்வியும் தற்போது பேசுபொருளாகியுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *