கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் புதுகுடியிருப்பைச் சேர்ந்தவர் எழுத்தாளர் பிரபு தர்மராஜ் (42). குமரி மாவட்ட வட்டார வழக்கில் எள்ளல் தொனியில் கருத்துகளைப் பதிவு செய்வதில் வல்லவர். அரேபியாவுக்குப் போன தீக்கொளுத்தி ஆவரான், கசவாளி காவியம், ஆதிக்குடி மக்களும் ஆல்கஹாலும், இராணி இல்லம், கோலப்பனின் அடவுகள், சக்ரவர்த்தி திரையரங்கம், மில்லரின் மின்கம்பம், களிறும் பிடியும் பின்னே நானும், சூ காக்கா, ஜாப் மார்சியா உள்ளிட்ட பல்வேறு புத்தகங்களை எழுதியுள்ளார். அவரது படைப்புகள் சிரிக்கவும், சிந்திக்கவும் வைப்பவை. ஆனந்த விகடன் உள்ளிட்ட பல்வேறு இதழ்களிலும், நாளிதழ்களிலும் நகைச்சுவை கதைகள் எழுதி மக்கள் கவனத்தைப் பெற்றவர். இன்று மாலை வீட்டில் இருந்த சமயத்தில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாகப் புத்தேரி பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனாலும் அவரைக் காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டது. அவரது உடல் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

பிரபு தர்மராஜிக்கு சைமா என்ற மனைவியும் ஒரு மகளும் உள்ளனர்.
இதழ்கள், நாளிதழ்கள், புத்தகங்கள் எழுதுவது மட்டுமல்லாது சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இயங்கி வந்தார் பிரபு தர்மராஜ். தற்கால அரசியல், சமூக நிகழ்வுகளை நகைச்சுவையாக வெளிப்படுத்தி அவர் பதிவிடும் பல கருத்துகள் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றன. நகைச்சுவை, பகடி எழுத்தாளராக அறியப்பட்ட பிரபு தர்மராஜ் தமிழகத்தின் முக்கிய எழுத்தாளர்களுடன் நட்பு பாராட்டி வந்தார்.