கொதிக்கும் நீரில் பசை நீக்கம்!
அடுத்ததாகப் பட்டுக்கூடுகளைச் சமைக்கும் செயல்முறை (Cocoon Cooking) நடைபெறுகிறது.
“பட்டுக்கூட்டில் இயற்கையாகவே செரிசின் (Sericin) என்ற பசைத்தன்மை கொண்ட பொருள் இருக்கும். அதை மென்மையாக்குவதற்காகப் பட்டுக்கூடுகள் சூடான நீரிலும், பின்னர் வெதுவெதுப்பான நீரிலும் மாற்றப்படுகின்றன” என்று அலுவலர் விளக்கினார்.
இதன் மூலம் பட்டுக்கூட்டில் இருந்து பட்டு இழையைப் பிரித்தெடுப்பது எளிதாகிறது.
பட்டு இழை… நூலாகிறது!
அடுத்த முக்கியமான கட்டம் பட்டு இழையை நூலாகச் சுற்றும் செயல்முறை (Reeling).
எம்.ஆர்.எம். அலகு (MRM Unit) இயந்திரங்களின் உதவியுடன் பட்டுக்கூட்டிலிருந்து கிடைக்கும் நுண்ணிய பட்டு இழைகள் ஒன்றாகச் சேர்க்கப்பட்டு, நீண்ட மூலப் பட்டு நூலாக (Raw Silk) மாற்றப்படுகின்றன.
“பல நுண்ணிய பட்டு இழைகளை ஒன்றாகச் சேர்த்துத்தான் தொடர்ச்சியான நூல் உருவாக்கப்படுகிறது” என்று அலுவலர் இந்தச் செயல்முறையை விளக்கினார்.
அதன்பிறகு, மறுச்சுற்று செயல்முறை (Re-reeling) மூலம் நூலில் இருக்கும் சீரற்ற தன்மைகள் நீக்கப்பட்டு, பெரிய தரப்படுத்தப்பட்ட உருள் (Standard Reel) வடிவங்களுக்கு மாற்றப்படுகிறது.
நூலுக்கும் இருக்கிறது ‘மேக்கிங்’!
பட்டு நூல் கிடைத்துவிட்டாலும், அது நேரடியாகத் தறிக்குச் செல்வதில்லை.
முதலில் நூலைச் சுற்றும் செயல்முறை (Winding) மூலம் பெரிய ஹாங்க் (Hank) வடிவிலுள்ள நூல் சிறிய பாபின் (Bobbin) களுக்கு மாற்றப்படுகிறது.
அடுத்து, இரட்டையாக்கும் செயல்முறை (Doubling) நடைபெறுகிறது. மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட பாபின்களில் இருந்து வரும் நூல்கள் ஒன்றாக இணைக்கப்பட்டு, தேவையான பருமனுக்குக் கொண்டு வரப்படுகின்றன.
பின்னர் நூலை முறுக்கும் செயல்முறை (Twisting) நடைபெறுகிறது.
“இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பட்டுநூல் இழைகளை ஒன்றாகச் சுழற்றுவதன் மூலம் நூலின் வலிமை அதிகரிக்கப்படுகிறது. இதன் மூலம் கிடைக்கும் நூல்கள் ‘முறுக்கப்பட்ட பட்டு’ (Thrown Silk) என அழைக்கப்படுகின்றன” என்று அலுவலர் விளக்கினார்.