Tamilnadu
oi-Vignesh Selvaraj
ராமநாதபுரம்: விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்தில் வன்முறை காட்சிகள் அதிகளவில் இடம்பெற்றுள்ளதால் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே பார்க்கும் வகையில் சென்சார் போர்டில் ஏ சான்றிதழ் வழங்கப்பட்டது. ஏ சான்று வழங்கப்பட்ட படத்துக்கு தனது 2 மைனர் குழந்தைகளை அமைச்சர் ராஜீவ் அழைத்துச் சென்று படம் பார்த்ததால் சர்ச்சை எழுந்துள்ளது.
மருத்துவரான அமைச்சர் ராஜீவ், சட்ட விதிகளை மீறி, ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்ட படத்துக்கு தனது குழந்தைகளை அழைத்துச் சென்றதற்கு குழந்தை உரிமை ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

முதல்வரும் தவெக தலைவருமான விஜய்யின் கடைசிப் படமான ஜனநாயகன் இன்று திரையரங்குகளில் வெளியானது. கடந்த ஜனவரி 9 ஆம் தேதி பொங்கலையொட்டி ஜனநாயகன் திரைப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க தணிக்கை வாரியம் தெரிவித்திருந்தது. இதனை நீக்க படக்குழு முன்வராத நிலையில், தணிக்கைச் சான்றிதழ் கிடைக்கதால், படம் சிக்கலில் மாட்டி வெளியீடு தள்ளிப்போனது.
இதற்கிடையே, முதல்வர் வேட்பாளராக தேர்தல் பணிகளில் விஜய் தீவிரம் காட்டியதால், ஜனநாயகன் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டது. தேர்தலுக்கு முன்பாக ஜனநாயகன் படம் முழுமையாக இணையத்தில் சட்ட விரோதமாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், ஜனநாயகன் படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டது.
விஜய்க்கு 18 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் மற்றும் குடும்ப ரசிகர்கள் அதிகம் என்பதால், படத்துக்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டது சலசலப்பை ஏற்படுத்தியது. ஜனநாயகன் படத்தில் அதிகளவிலான ரத்தம் தெறிக்கும் வன்முறை காட்சிகள் இருப்பதால் ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. வழக்கமாக விஜய் படங்களை காண குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கூட்டம் கூட்டமாக தியேட்டருக்கு வருவார்கள்.
விஜய்க்கு அதிகளவிலான குட்டி ரசிகர்கள் இருக்கின்றனர். இந்நிலையில், ஜனநாயகன் படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதால் சிறுவர்கள், சிறுமிகள் தியேட்டர்களில் இந்தப் படத்தை பார்க்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தவெக அமைச்சர் ஒருவரே, தனது மைனர் குழந்தைகளை அழைத்துச் சென்று திரையரங்கில் ஜனநாயகன் படம் பார்த்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் ராஜீவ் தனது குடும்பத்தினருடன் இன்று முதல் நாள் ‘ஜனநாயகன்’ படம் பார்த்துள்ளார்.’A’ சான்றிதழ் வழங்கப்பட்ட ‘ஜனநாயகன்’ படத்திற்கு விதிகளை மீறி தனது 2 குழந்தைகளுடன் பார்த்துள்ளார் தவெக அமைச்சர் ராஜீவ். சட்ட விதிக்கு புறம்பாக ‘ஏ’ சான்றிதழ் வங்கப்பட்ட படத்துக்கு குழந்தைகளை படம் பார்க்க அழைத்துச் சென்ற அமைச்சருக்கும், அனுமதித்த தியேட்டர் நிர்வாகத்திற்கும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.