வெளியே கொண்டுவரப்பட்ட குழந்தைகளுக்கு போலந்து கிறிஸ்தவர்கள் போல போலி அடையாள அட்டைகள் தயாரிக்கப்பட்டு, கத்தோலிக்க ஆதரவற்றோர் இல்லங்கள், கான்வென்ட்கள் மற்றும் தத்துக்கொடுக்கும் குடும்பங்களிடம் அவர்கள் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டனர்.
போர் முடிந்த பிறகு, இந்த குழந்தைகள் தங்கள் உண்மையான குடும்பத்தையும், தங்களின் சுய அடையாளத்தையும் இழந்துவிடக் கூடாது என்பதில் ஐரீனா மிகத் தெளிவாக இருந்தார். எனவே, ஒவ்வொரு குழந்தையின் உண்மையான யூதப் பெயரையும், தற்போதைய கிறிஸ்தவப் பெயரையும், அவர்கள் எங்கு மறைத்து வைக்கப்பட்டுள்ளனர் என்ற முகவரியையும் மெல்லிய டிஸ்யூ தாள்களில் எழுதி, அவற்றை சிறிய கண்ணாடி ஜாடிகளில் அடைத்தார்.
அந்த ஜாடிகளை, நாசிப் படைகளின் முகாமுக்கு எதிரே இருந்த ஒரு நண்பரின் தோட்டத்தில் இருந்த ஆப்பிள் மரத்தின் அடியில் ரகசியமாகப் புதைத்து வைத்தார்.

அக்டோபர் 20, 1943 அன்று, ஐரீனாவின் ரகசியச் செயல்கள் நாசிப் போலீசான கெஸ்டாபோவுக்குத் தெரிந்துவிட்டது. அவரைப் பிடித்து `பாவியாக்’ என்ற கொடூரமான சிறையில் அடைத்தனர். கொடூரமாகச் சித்திரவதை செய்யப்பட்டார். அவரது கால்கள் மற்றும் கைகள் முறிக்கப்பட்டன. ஆனால், இத்தனை சித்திரவதைகளை அனுபவித்தும், ஒரு குழந்தையின் பெயரையோ அல்லது தனக்கு உதவியவர்கள் பற்றிய சிறு தகவலையோ கூட அவர் வாய்திறந்து சொல்லவில்லை.
ஆத்திரமடைந்த நாசிகள் அவருக்கு மரண தண்டனை விதித்தனர். அவர் சுட்டுக்கொல்லப்படுவதற்கு சற்று முன்பு, `செகோடா’ ரகசிய அமைப்பு நாசிப் படை காவலர்களுக்கு பெருமளவு லஞ்சம் கொடுத்து, ஐரீனாவைத் தப்பிக்க வைத்தது. அதன் பிறகு போர் முடியும் வரை தலைமறைவாகவே வாழ்ந்தார்.