Tamilnadu
oi-Vigneshkumar
கரூர்: இன்று கரூரில் தவெக சார்பில் மக்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜய், திமுகவையும் அதிமுகவையும் கடுமையாக விமர்சித்துப் பேசினார். அதேநேரம் இந்த உரையில் அவர் மத்திய பாஜக அரசுக்கு எதிராகவும் ஒரே ஒரே இடத்தில் குறிப்பிட்டுப் பேசினார். விஜய் பாஜகவை எதிர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் வரும் நிலையில், ஒரு இடத்தில் பாஜகவுக்கு எதிராக விஜய் பேசியிருக்கிறார்.
தமிழ்நாட்டில் தேர்தல் பிரச்சாரம் நடந்து கொண்டிருந்த போது, கடந்தாண்டு செப்டம்பர் மாதம் கரூரில் மோசமான துயரம் நடந்தது. அப்போது விஜய் வேலுச்சாமிபுரத்தில் திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக 41 பேர் உயிரிழந்திருந்தனர். இதற்கிடையே அந்த விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு அரசு வேலை கொடுக்கும் நிகழ்வு மற்றும் கரூர் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க முதல்வர் விஜய் கரூர் சென்றிருந்தார்.

திமுக மீது பாய்ச்சல்
முதற்கட்டமாக மக்கள் சந்திப்பு கூட்டம் நடந்த நிலையில், அதில் கலந்து கொண்டு விஜய் பேசினார். இந்த பேச்சில் முழுக்க முழுக்க அவர் திமுகவையே விமர்சித்துப் பேசியிருந்தார். குறிப்பாகக் கரூர் விவகாரம் தொடர்பாக அன்றைய முதல்வர் ஸ்டாலின், சட்டசபையிலேயே குழப்பத்தை ஏற்படுத்தியதாகச் சாடினார். மேலும், தான் 5 நிமிடம் பேசியதற்கே கொளத்தூரில் கொத்து பரோட்டோ போட்டுவிட்டார்கள் என்றும் சாடினார்.
திமுகவை தீய சக்தி என விமர்சித்த அவர், கடந்த திமுக ஆட்சியில் காலி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றுவது போல தொடர்ந்து நிதியைக் கொட்டினார்கள் என்றும் அந்த நிதி எங்கு போனது எனத் தெரியவில்லை என்பது போலவும் குறிப்பிட்டார். மேலும், அண்ணா பிறந்தநாளில் தாய்மாமன் தங்க மோதிர திட்டம் என்றும் குறிப்பிட்டார். அவரது இந்த பேச்சில் ஒரே ஒரு முறை மட்டுமே மத்திய அரசு குறித்துப் பேசினார்.
மத்திய அரசு
அங்கு அவர், “மத்திய அரசு டிலிமெடெஷன் மசோதாவை மீண்டும் கொண்டு வரப்போவதாக ஒரு பேச்சு அடிபடுகிறது. யார் என்ன டிலிமெடெஷன் கொண்டு வந்தாலும் அதைத் தமிழ்நாடு ஏற்காது. நமக்கான இடத்தை யாரும் பறிக்க முடியாது. பறிக்கவும் விட மாட்டோம்.
இப்படி இருக்கும்போது, தீய சக்தி திமுக எங்குப் போய் நிற்கிறது.. யார் கதவை தட்டி கொண்டு இருக்கிறது என்பது உங்களுக்கே தெரியும். இந்த தீய சக்தியும் தீர்ந்து போன சக்தியும் வேறு வேறு இல்லை. இருவரும் கூட்டு களவாணிகள். எங்களுக்குள் ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்பதை நிரூபிக்க முடியுமா.. வரப்போகும் இடைத்தேர்தலில் அதை நிரூபிக்கச் சொல்லுங்கள்” என்றார்.
திமுக விமர்சனம்
விஜய்யைப் பொறுத்தவரை அவர் மத்திய அரசை எதிர்ப்பதில்லை என்ற விமர்சனத்தை திமுக தொடர்ந்து வைத்து வருகிறது. மத்திய அரசின் பல விஷயங்களுக்கு தவெக அரசு ஓகே சொல்வதாகவும் போராடிப் பெற்ற பல உரிமைகளை தவெகவால் தமிழ்நாடு இழக்கும் ஆபத்து இருப்பதாகவும் தொடர்ந்து விமர்சித்து வருகிறது. இந்தச் சூழலில் தான் மத்திய அரசுக்கு எதிராக விஜய் பேசியிருக்கிறார்.
ஒரே ஒரு இடம்
அடுத்த வாரம் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கும் நிலையில், அதில் டிலிமிட்டெஷன் எனப்படும் தொகுதி மறுவரையை மசோதாவை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதில் தவெக என்ன நிலைப்பாடு எடுக்கப் போகிறது என்ற கேள்வி இருந்த நிலையில், அதை எதிர்ப்பதாக விஜய் பேசியுள்ளார். அதேநேரம் தனது ஒட்டுமொத்த உரையில் விஜய் இந்த ஒரு இடத்தில் மட்டுமே மத்திய அரசு பற்றி பேசியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

