ஆனால் பேராசைக்குழியில் மீள முடியாத படி கால் பதித்த காரியம் ஆழ்கடலில் தள்ளியது. ஏலச்சீட்டு தொடங்கி நடத்தியதில் கையில் பணம் தாறுமாறாக கணக்கு இல்லாமல்புழங்கியது.அனாவசிய ஆடம்பர செலவுகள் கைமீறிப் போனது. மச்சான், மாப்பிள்ளை,மாமன் ,அண்ணன், தம்பி என உறவு வட்டாரம் பெருகியது. காற்றில் பறப்பது போல் ஒரு மாயை இருந்தது.
இதெல்லாம் ஒரு ரெண்டுவருஷம் மட்டுமே செழுமையான நிறைவை தந்தது. சீட்டு முடியும் போது தான் சீட்டுக்காரர்களுக்கு பணத்தை திருப்பித் தர முடியாமல் முழி பிதுங்கியது. குடியிருந்த வீடு, நிலம் எல்லாம் கைமாறிப் போனது. நகைகள்,கையிருப்புப் பணம் எல்லாம் காலி.ஈசல் கூட்டம் போல் சுற்றி இருந்த கூட்டம் மாயமானது.
நிர்க்கதியாக நின்று திவால் நோட்டிஸ் எல்லாம் தரும் நிலைக்கு தள்ளப்பட்டதும் தான் தன்னிலை புரிந்தது காசிநாதனுக்கு. தெரிந்தவர்கள் முகத்தை பார்க்க முடியாமலும், கடன் காரர்கள் ஏச்சுக்கு பயந்தும் வேறு பக்கம் வீடு மாறினார்கள். கொஞ்ச நாளைக்கு பிறகு இவர்கள் இருப்பிடம் தெரிந்தவர்கள் வந்து தொல்லை படுத்தினர். அண்ணன் தம்பிகள் எல்லாரும் இருந்தும் யாரும் காசிநாதனை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. விசாலாட்சியின் உடன் பிறந்தோரும் கண்டு கொள்ளவில்லை.
ஒருநாள் காசிநாதன் வீட்டில்இல்லாத போது வந்த கடன்காரர்கள் சுற்றிஇருந்த மக்கள் வேடிக்கை பார்க்கிற மாதிரி பேசி விட்டு சென்றனர். காசிநாதன் வந்ததும் விசாலாட்சியின் அழுகை அதிகமானது. வாழ்வதை விட சாவதே மேல் என முடிவெடுத்தனர்.
பள்ளி சென்ற ரூபாவதியை அழைத்து வர சென்ற காசிநாதன் குழந்தை விரும்பிய எல்லாமே வாங்கித் தந்தார். ரூபாவுக்கு ரொம்ப ரொம்ப ஆச்சரியம், எப்பவும் ஏதாவது கேட்டால் பலமுறை யோசிச்சு ,கேட்டதில் அஞ்சு பெர்சண்ட் மட்டுமே வாங்கித் தரும் அப்பா இன்னைக்கு எப்படி எல்லாமே வாங்கி கொடுத்தார் என்று சந்தேகத்துடனே வீடு வந்தாள்.
வீட்டிலிருந்த அம்மாவின் முகம் அழுதழுது வீங்கி இருந்தது. ஹோட்டலில் இருந்து வாங்கி வந்த உணவை மூவரும் உண்டனர்.பிறகு மூன்று டம்ளர் சர்பத் கொண்டு வரப்பட்டது. எதுக்கும்மா இப்பப்போய் ஜுஸ் வச்சிருக்கீங்க என்ற மகளிடம் பேசாமல் நாங்க ரெண்டுபேரும் குடிச்சதும் நீயும் குடிச்சுக்கோ என்றாள் விசாலாட்சி.
முதல்லே எப்பவும் நாந்தான் சாப்பிடுவேன் இன்னைக்கென்ன எல்லாமே புதுசா இருக்குது, புதுசா நடக்குது,முதல்லே நாந்தான் குடிப்பேன் என்று டம்ளரை எடுத்தாள் ரூபா.. உடனே டம்ளரை பாய்ந்து பிடுங்கினர் இருவரும்.
“நான்தான் முதலில் குடிப்பேன்” என்று விசாலாட்சியும்,”
இல்லையில்லை,எல்லா விதப் பிரச்னையும் என்னால் தான் வந்தது அதனாலே நாந்தான் குடிப்பேன்”, என்று காசிநாதனும் மல்லுக்கட்டினர்..
இருவர் கண்களில்இருந்தும் கண்ணீர் நிற்காமல் வழிந்தோடியது..
ரூபாவுக்கு ஒன்றும் விளங்கவில்லை. ஆனாலும் தப்பாக ஏதோ நடக்கப்போகிறது என்று மட்டும் உணர முடிந்தது.என்ன நினைத்தாளோ தெரியவில்லை பட்டென்று மூன்று டமளர்களையும் தட்டி கீழே சாய்த்துவிட்டாள். திடீரென நடந்த இந்த நிகழ்வால் செய்வதறியாது திகைத்த தாயும் தந்தையும் இப்போது மகளை சேர்த்து அணைத்துக்கொண்டு கதறிஅழுதனர்.ரூபாவுக்கும் அழுகை பீறிட்டு வந்தது..
“என்னப்பா! என்னாச்சு? சினிமால வர்ற மாதிரி நாமெல்லாம் விஷ ஜூஸ் குடிச்சு
செத்துப்போக போறமா?!சொல்லுப்பா, நீயாவது உண்மை சொல்லும்மா” என்று கேட்டபடி அழுதாள்.
இனியும் மறைக்கமுடியாது என்று உணர்ந்த காசிநாதனும் விசாலாட்சியும் கடன் பிரச்னை அது தொடர்பான தொல்லைகள், சிரமங்கள்,அவமானங்கள் பற்றி முடிந்த மட்டும் சொன்னார்கள்.
லூசாப்பா நீங்கல்லாம்? கடனெல்லாம் தீர்க்க முடியாத பிரச்னையா? எதுக்குப்பா இப்படி பண்ணீங்க, நான்கூட பயந்து போய்ட்டேன்.
காசிநாதனும்விசாலாட்சியும் மகள் பேச்சுக்களுக்கு திடுக்கிட்டு நிமிர்ந்தனர்.
yeah and every problem has a solution, ஆமாம்மா , எங்க மிஸ் சொல்லிருக்காங்கம்மா. இன்னைக்கு கூட கடன் வாங்கி கணக்கு போடறதைப்பத்தி தான் சொல்லி குடுத்தாங்க. ஏழைங்க மட்டுமல்ல எல்லாருமே கடன் வாங்கி வாழ்றவங்க தாம்பா. ஏன்? நாடே கடன் வாங்கித்தான் காலத்தை ஓட்டறதா நியூஸ் சொல்லுது.இன்னும் சொல்லப்போனால்சின்னக் குழந்தை முதல் கொண்டு பெரியவர்கள் வரை எல்லார் தலையிலும் நாட்டின் கடன்சுமை அழுத்தறதா சொல்லிக்கறாங்க தெரியுமாம்மா?!என்றாள் ரூபா.
கடனைப் பற்றி இந்த சின்னப்பொண்ணுக்கு இத்தனை விஷயங்கள் தெரியுமா என்பது போல் இருவரும் வியந்து பார்த்தனர்.
“இன்னான்னு சொல்றம்ப்பா , கடன் அன்பை முறிக்கும் அப்படீன்னு தான் நிறைய எடத்துல எழுதி இருக்கு.கடன் உயிரைப் பறிக்கும் அப்படீன்னு எங்கயும் யாரும் எழுதலை.நாம சாகவேண்டிய அளவுக்கு இப்ப எந்தத் தப்பும் பண்ணலை இல்லையாம்மா, இல்லையாப்பா!, என்று கேட்டாள்.
இருவரும் தலை குனிந்தபடி தலையாட்டினர். ஏதோ கீதை உபதேசம் கேட்டது போலிருந்தது. மனதுக்குள் ஒரு மாறுபட்ட வானவில்லின் வர்ண ஜாலம் வெளிச்சம் காட்டியது. கிரகணம் விலகிய சூரிய சந்திர தோரணம் ஆடியது போல் தோன்றியது.
“எனக்கு தேவைக்கு மேல் எதுவும் வாங்க வேண்டாம்பா. சிக்கனமாய் இருப்போம் அம்மா. வருங்காலத்தில் வரவேண்டிய சொத்து பாகத்தை இப்பவே கேளுங்கப்பா. ஏதாவதொரு விடிவு பிறக்கும். எனக்கு நம்பிக்கை இருக்கு,”பெரிய மனுக்ஷி போல் பேசிய ரூபாவைப் பார்த்து இருவரும் பிரமித்துப்போயினர்.
அண்ணன் தம்பி பகைப் போராட்டத்துடன் கிடைத்த தொகையை கொண்டு பெரிய கடன்களை அடைத்தார் காசிநாதன். சிறு கடன்களுக்கு கால அவகாசம் பெற்றனர். கிடைத்த வேலைகளை ஏற்றத்தாழ்வு பார்க்காமல் சந்தோக்ஷமாக செய்தனர். உறவுப்பாலம் உடைந்தாலும் நம்பிக்கை எனும் கயிறு பற்றி முன்னேறினர் .
ரூபாவின் வழிகாட்டுதல் படியே குடும்பம் சென்றது.ஆண்டுகள் செல்லச் செல்ல கடன் சுமை குறைந்தது.இதனிடையில் ரூபாவுக்கு கல்லூரித்தோழன்
கைலாஷுடன் ஏற்பட்ட நட்பு காதலாக மாறியது.விசாலாட்சிக்கு புற்றுநோய் தாக்குதலால் இறப்பு நேரிட்டது.
வீட்டிற்கு ஒரே வாரிசு என்பதாலும் காதலுக்கு ஜாதி தடையாக இல்லாததாலும் கைலாக்ஷின் பிடிவாதம் வென்றது. தொழில் அதிபராக இருந்த கைலாக்ஷின் குடும்பம் காசிநாதனுக்கு எந்த செலவும் வைக்காமல் எந்த சிரமமும் கெடுக்காமல் கல்யாணத்தை பிரமாண்டமாக நடத்தினர்.
இதோ இப்போது இரு பிள்ளைங்களுக்கு தாயான ரூபாவதி குடும்பத் தொழில் வளர்ச்சிக்கும் உறுதுணையாக காலூன்றி விட்டாள். காசிநாதன் தனியாக இருந்தாலும் மகளின் முன்னேற்றத்தில் மட்டற்ற மகிழ்ச்சி கொண்டு விட்டார்.
தன் சிறுபிள்ளைத்தனமான முடிவால் வெளிவந்த பெரும் கொல்லுஞ்சொல்லை மகள் உதிர்த்த ஒரு வெல்லுஞ்சொல் முறியடித்ததை மனதார உணர்ந்து எடுத்து வைக்கும் அடிகளில் கவனம் செலுத்துகிறார் காசிநாதன்.உதறிய உறவுகள் வந்து ஒட்டிக் கொண்டாலும் தாமரை இலைத் தண்ணீராக இருக்க பழகிக் கொண்டார்.
பேத்தி கல்லூரி கல்விக்குள் நுழைய பேரன் உயர் கல்விக்காக இன்று வெளிநாடு செல்லப் போகிறான்.காசிநாதனின் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் தினம் விசாலாட்சி புன்னகையுடன் பொன்மொழி கருத்துகளை உதிர்த்துக் கொண்டிருக்கிறாள்.
-அனுப்புநர்
நீலவேணி தேவராஜன்