மும்பையில், திருமண உறவுக்குள்ளும் பெண்களின் சம்மதம் மற்றும் பாதுகாப்பு குறித்த சட்ட விவாதத்தை முன்னிறுத்தும் வகையில், Red Dot Foundation சார்பில் ‘Infinite Saree’ என்ற பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, 4 கிலோமீட்டர் நீளமுள்ள பிரமாண்ட புடவை செப்டம்பர் 1-ம் தேதி மும்பை Royal Opera House-ல் அறிமுகப்படுத்தப்பட்டது.
சம்மதத்தின் அடையாளம்: ‘Infinite Saree’
Red Dot Foundation உலகின் மிக நீளமான புடவை எனக் குறிப்பிடும் இந்த ‘Infinite Saree’-ஐ பிரபல வடிவமைப்பாளர் நிவேதிதா சபூ உருவாக்கியுள்ளார். நூற்றுக்கணக்கானவர்களின் கையெழுத்துகளைத் தாங்கியிருக்கும் இந்தப் புடவை, திருமண பாலியல் வன்முறை தொடர்பான சட்ட விதிவிலக்கை (Marital Rape Exception) நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கும் ஒரு பொதுப் பிரசாரத்தின் குறியீடாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
அடிப்படை மனித உரிமை
இந்த முயற்சியை முன்னெடுத்துள்ள Red Dot Foundation-ன் இணை நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி சுப்ரீத் கே. சிங், திருமணத்துடன் ஒரு பெண்ணின் சம்மத உரிமை முடிந்துவிடுவதில்லை என்றும், சம்மதம் என்பது திருமண உரிமையாக அல்லாமல் ஒவ்வொரு பெண்ணின் அடிப்படை மனித உரிமையாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும் அழுத்தமாக வலியுறுத்தியுள்ளார்.