International
oi-Halley Karthik
மாஸ்கோ: சமீபத்தில் ரஷ்யாவில் பிளேக் நோய் பாதிப்பால் இளம் ஆய்வாளர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. ஆய்வகத்தில் இருந்து லீக்கான பிளேக் வைரஸால் அவர் உயிரிழந்தார். எனவே இந்த வைரஸ் ரஷ்யா முழுவதும் பரவி.. உலகத்திற்கு பெரிய அச்சுறுத்தலாக மாறும் என்று பேசப்பட்டு வந்த நிலையில் இது குறித்து உலக சுகாதார அமைப்பு சற்று நிம்மதியான செய்தியை கொடுத்திருக்கிறது.
அதாவது இந்த வைரஸ் ரஷ்யாவுக்குள் பரவுவதற்கான வாய்ப்பு மிகக் குறைவு என உலக சுகாதார அமைப்பின் செய்தி தொடர்பாளர் கிறிஸ்டியன் லிண்ட்மேயர் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த பெண்ணுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு நடத்தப்பட்ட சோதனைகளில் ஆபத்தான நோய்க்கிருமிகள் ஏதும் கண்டறியப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதிகாரப்பூர்வமாக ரஷ்யா பிளேக் பாதிப்பை மறுத்தாலும்.. இந்த விபத்து ஏற்பட்ட பகுதிக்கு அருகில் உள்ள மற்ற பகுதிகளில் கடுமையான பாதுகாப்பு மற்றும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
உயிரிழந்த பெண்ணுடன் காண்டாக்டில் இருந்த ஆய்வக ஊழியர்கள், மருத்துவர்கள் உட்பட சுமார் 200 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். 5க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு நோயாளிகளை உறவினர்கள் சந்திக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த விஷயத்தில் அமெரிக்கா உதவ முன்வந்திருப்பது சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்திருக்கிறது. அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ கூறுகையில், “இந்த விவகாரத்தை அமெரிக்கா மிக உன்னிப்பாக கவனித்து வருகிறது. மேலும் மரணம் மற்றும் பிளேக் கசிவு குறித்த முழுமையான உண்மைகளையும் விரிவான விவரங்களையும் உலக நாடுகளுக்கு ரஷ்ய வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளர். மறுபுறம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்த பிளேக் விவகாரம் ரஷ்யாவுக்கு பெரிய பிரச்சனை என குறிப்பிட்டு.. இந்த கட்டான சூழ்நிலை எதிர்கொள்ள ரஷ்யாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க அமெரிக்க நிர்வாகம் தயாராக உள்ளதாக அறிவித்துள்ளார்.
இதையெல்லாம் பார்க்கும்போது.. நம்ம டிரம்பா இது? என்று அவரது சொந்த கட்சியினரே ஆச்சரியப்படுகிறார்களாம். ரஷ்யாவின் சுகாதார பாதுகாப்பு அமைப்பின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், வதந்திகளை நம்ப வேண்டாம் என்று மக்களை கேட்டுக் கொண்டுள்ளார். பாதிப்பு ஏற்பட்ட பகுதியில் நிலைமை சீராகவும், நிலையாகவும் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் மத்திய சைபிரியாவின் இர்குட்ஸ்க் நகரில் உள்ள பிளேக் ஆராய்ச்சி நிறுவனத்தில், ஆபத்தான பிளேக் வைரஸ் கொண்ட கண்ணாடி குப்பியை இளம் பெண் ஆராய்ச்சியாளர் ஒருவர் தவறுதலாக உடைத்துவிட்டார். அதிலிருந்து வெளியான வைரஸ் தாக்கி அவர் உயிரிழந்தார். இதையடுத்து இந்த வைரஸ் ரஷ்யா முழுவதும் பரவி.. அப்படியே மொத்த உலகத்தையும் பாதிக்கும் என்று பேசப்பட்டு வந்த நிலையில் WHO குட் நியூஸ் தெரிவித்திருக்கிறது.
ஆய்வகத்தில் வைரஸ் லீக் ஆனதால் பிளேக் பாதிப்பு ஏற்பட்டு இளம் ஆய்வாளர் உயிரிழந்ததாக சொல்லப்பட்டு வந்த நிலையில், காரணம் கண்டறியப்படாத தீவிர நிமோனியா காய்ச்சலால் தான் அந்த ஆய்வாளர் உயிரிழந்தார் என்றும், அவரது உடலில் கிருமிகள் இல்லை என்றும் ரஷ்யா கூறியிருக்கிறது. எது எப்படி இருப்பினும் ரஷ்யாவுக்குள்ளேயும் அல்லது வெளியேயும் பிளேக் பாதிப்பு பரவாது என்று உலக சுகாதார அமைப்பு கூறி இருப்பது சற்று நிம்மதியை ஏற்படுத்தி இருக்கிறது.