சிறார் இலக்கியத்துக்காக சாகித்ய அகாடமி விருது வாங்கியவர் எழுத்தாளர் யூமா வாசுகி. சுமார் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிகை, பதிப்பகம் சார்ந்து இயங்கி வருகிறவர். இவரின் இயற்பெயர் தி.மாரிமுத்து
2019ம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய சிறப்பாசிரியர்களுக்கான தேர்வு எழுதி, பட்டுக்கோட்டை அருகேயுள்ள செண்டங்காடு அரசு உயர்நிலைப் பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணியில் சேர்ந்தார். பணியில் சேரும் போதே அவருக்கு வயது ஐம்பதைக் கடந்து விட்டது.
கடந்த இரு தினங்களுக்கு முன் அதாவது ஜூன் 30 இவருக்குப் பணி ஓய்வு.

ஆனால் பள்ளிகளில் ஆசிரியர்கள் ஜூன் மாதம் ஓய்வு பெற்றால், அடுத்த கல்வியாண்டு வரை பணி நீட்டிப்பு பெறலாம் என கல்வித்துறையில் அரசாணை இருப்பதைச் சுட்டிக் காட்டி தனக்கு பணி நீட்டிப்புக் கேட்டிருக்கிறார்.
ஆனால் அவரது கோரிக்கை நிராகரிக்கப் பட்டு விட்டதாம்.
இது குறித்துச் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்த அவரிடம் பேசினோம்.
’’அரசில் இருக்கும் விதிமுறையைத்தான் சுட்டிக் காட்டி கேட்டேன். தவிர ஐந்தரை ஆண்டுகளே சர்வீஸில் இருந்ததாலும் மேலும் ஒரு ஆண்டு பணி புரியலாமென்றும் நினைத்தேன்.. தலைமை ஆசிரியரிடம் பரிந்துரைக் கடிதம் பெற்றே நீட்டிப்புக்கு விண்ணப்பித்தேன்.
ஆனால் என் கோரிக்கையை நிராகரித்து கடிதம் தந்த திருவாரூர் முதன்மைக் கல்வி அதிகாரி சுகப்ரியா பொறுப்பின்மையோடும் என்னை அவமானப் படுத்தியும் உத்தரவு தந்திருக்கிறார். அரசு விதியை அவர் பார்க்கவில்லை.