கடகத்தில் குரு – செவ்வாய் சேர்க்கை: இந்த கிரகச் சேர்க்கையால் எந்தெந்த ராசிகளுக்கு ராஜ யோகம்?

Spread the love

மேஷம்:

உங்கள் ராசிக்கு 4-ம் இடத்துக்குச் செவ்வாய் வந்திருப்பது, ஓரளவு நன்மையான பலன்களையே தரும். நான்கில் இருக்கும் குருவுடன் சேர்ந்து அமர்ந்துள்ளதால், எதிர்பாராத சில ஆதாயங்கள் உண்டாகும். எனினும் இந்தக் காலகட்டத்தில் புதிய முயற்சிகள், அதிரடி முடிவுகளைத் தள்ளிப்போடுவது அவசியம். அதேபோல் சொத்து வாங்குவது விற்பதிலும் அதீத கவனம் தேவை. தாய்ப் பத்திரங்களை ஒரு முறைக்குப் பலமுறை சரிபாருங்கள். பொருளாதார நிலையில் எவ்வித பாதிப்பும் இல்லை.

பரிகாரம்: செவ்வாய் கிழமைகளில் நவகிரக செவ்வாய் பகவானுக்குச் சிவப்பு வஸ்திரம் சாத்தி, தீபமேற்றி வழிபடுங்கள்.

குரு பகவான்

ரிஷபம்: உங்கள் ராசிக்கு 3-ம் இடத்தில் அமர்ந்துள்ளார் செவ்வாய். அவர், குரு பகவானுடன் இணைவதால், இல்லத்தில் சுபகாரியங்கள் கூடி வரும். தடைகள் விலகும். காரிய முன்னேற்றங்கள் உண்டு. பண வரவு திருப்தி தரும். பொதுவிழாக்கள், வைபவங்களில் கலந்து கொள்வீர்கள். சமூகத்தில் மதிப்பு கூடும். இந்தக் காலகட்டங்களில் நீங்கள் அதிரடியாய் சில முடிவுகளை எடுப்பீர்கள். இதனால் சில நேரம் உங்களுக்கு யோக பலன்கள் ஸித்திக்கும். ஆனாலும் சில நேரம், தீர்க்கமுடியாத பிரச்னைகளில் தள்ளிவிடவும் வாய்ப்பு உண்டு. ஆகவே, நன்கு ஆலோசித்துத் தீர்க்கமான முடிவுகள் எடுப்பது நல்லது. இளைய சகோதர வகையில் நன்மை உண்டு.

பரிகாரம்: ஒருமுறை வைத்தீஸ்வரன்கோவிலுக்குச் சென்று வைத்தீஸ்வரர்-தையல் நாயகியை வழிபடுங்கள். முருகப்பெருமான், செவ்வாய் பகவானை அர்ச்சனை செய்து வணங்குங்கள்; இன்னல்கள் விலகும்.

மிதுனம்: உங்கள் ராசிக்கு 2-ம் இடத்தில் கடகத்தில் குருவுடன் சேர்ந்து அமர்ந்துள்ளார் செவ்வாய் பகவான். ராசிக்கு 2-ம் இடத்தில் செவ்வாய் அமர்வதால், குடும்பத்தில் மங்கல காரியங்கள் கூடிவரும். தடைகள் நீங்கி காரியங்களில் சாதகமான பலன்கள் ஏற்படும். வீட்டிலும் வெளியிலும் உங்கள் சொல்லுக்கு மதிப்பு கிடைக்கும். பிள்ளைகள் உங்களின் சொற்படி நடப்பார்கள். அவர்களுக்கான கல்வி, உத்தியோகம், தொழில் போன்றவற்றிலும் உங்கள் ஆலோசனைகள் நல்ல முன்னேற்றத்தை உண்டாக்கும்.

பரிகாரம்:செவ்வாய்க் கிழமைகளில் சஷ்டிக் கவசம் படித்து முருகப்பெருமானை வழிபடுங்கள். குருவருளும் அங்காரகனின் திருவருளும் பூரணமாகக் கிடைக்கும்.

கடகம்: ஏற்கெனவே ஜன்ம குரு நடைபெறுகிறது. இப்போது செவ்வாய் பகவானும் உங்கள் ராசியில் வந்து அமர்ந்திருக்கிறார். ஆகவே, எதிலும் வேகமும் அவசரப்போக்கும் கூடாது. நிதானித்துச் செயல்படுவது அவசியம். பேச்சிலும் கவனம் வேண்டும். வீட்டில் வாழ்க்கைத் துணைவருடன் சின்னச் சின்ன விவாதங்கள் வந்து போகும். பிரச்னைகள் பெரிதாகாமால் பார்த்துக்கொள்ளுங்கள். அதேபோல் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்தவேண்டும். லாகிரி வஸ்துக்களைத் தவிர்த்துவிடுங்கள். உரிய நேரத்தில் உணவு எடுத்துக்கொள்ளுங்கள். தியானம், யோகா போன்ற பயிற்சிகள் மூலம் மனதை மலர்ச்சியாக வைத்துக்கொள்ளுங்கள்.

பரிகாரம்:குலதெய்வத்தைச் சிக்கென பிடித்துக்கொள்ளுங்கள். மாதம் ஒருமுறையேனும் படையல் இட்டு வழிபடுங்கள். அதன் மூலம் மனத் தைரியமும் தன்னம்பிக்கையும் பிறக்கும்.

சிம்மம்: 12-ல் செவ்வாய் அமர்ந்து குரு பகவானுடன் இணைந்து பலன் வழங்குகிறார். ஆகவே, வீண் விரயங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. குறிப்பாக சொத்து வாங்குவதிலும் விற்பதிலும் கவனம் தேவை. சகோதர வகையிலும் செலவுகள் ஏற்படலாம். செலவு களைச் சுபச் செலவுகளாக மாற்றிக்கொள்வது சிறப்பு. மற்றபடி தொழில், உத்தியோகத்தில் நற்பலன்கள் உண்டாகும். நினைத்த காரியங்களில் சிற்சில தடங்கல்கள் செலவுகள் ஏற்பட்டாலும் முடிவு சுபமாகும்.

பரிகாரம்:செவ்வாய்க் கிழமைகளில் அம்மன் வழிபாடு நன்மை தரும். இயன்றால் குடும்பத்துடன் அமர்ந்து அபிராமி அந்தாதி படித்து வழிபடலாம். அருகிலுள்ள கோயிலில் அம்பாள் சந்நிதியில் நெய் விளக்கு ஏற்றி வழிபட்டு வாருங்கள்; மகிழ்ச்சி பெருகும்.

கன்னி: ராசிக்கு லாப ஸ்தானமாகிய 11-ம் இடத்துக்கு வந்து குருபகவானுடன் சேர்ந்து அமர்ந்திருக்கிறார் செவ்வாய் பகவான். இதுவரையிலும் நேர்ந்த பின்னடைவுகள் விலகும். எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். நீங்கள் கையில் எடுக்கும் சில நற்காரியங்களில் நற்பலன்கள் ஸித்திக்கும். தொழில் தொடங்குவது, புதிய கிளைகள் தொடங்குவது, சுபகாரியங்களுக்கான பேச்சுகளை ஆரம்பித்தல் ஆகியவற்றை மேற்கொள்ளலாம்.

பரிகாரம்: அங்காரஹ சதுர்த்தி அன்று பிள்ளையாருக்கு அறுகம்புல் சாத்தி, மோதகம் படைத்து வழிபடுங்கள். முன்னேற்றம் உண்டாகும்.

செவ்வாய் பகவான்

துலாம்: ராசிக்கு 10-ம் வீட்டில் குரு இருக்கிறார். அவருடன் செவ்வாயும் இணைந்துள்ளார். இதுவரையிலும் இருந்துவந்த சிறு சிறு சிரமங்கள் இப்போது மட்டுப்படும். எனினும் சகல காரியங்களிலும் சற்றுக் கவனத்துடன் செயல்படவேண்டும். ஏதேனும் ஒரு வகையில் பணம் வரும். கடன் கேட்ட இடங்களிலும் கடன் தொகை கிடைக்கும். ஆனால், அவசியமா என்று யோசித்துச் செயல்படுங்கள். மற்றபடி குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். சுப காரியங்களிலும் தொழில் அணுகுமுறைகளிலும் முன்னேற்றம் உண்டாகும். அதேநேரம் தக்கபடி ஆலோசித்துச் செயல்படுங்கள். அதேபோல் அரசுக்காரியங்களில் கவனம் அவசியம்.

பரிகாரம்: வியாழக் கிழமைகளில் நவகிரக குருவுக்கு தீபம் ஏற்றி வழிபடுங் கள். சாதுக்களுக்கு அன்னதானம் செய்யுங்கள். சிரமங்கள் குறைந்து சந்தோஷம் பெருகும்.

விருச்சிகம்: உங்கள் ராசிநாதனான செவ்வாய் பாக்கியஸ்தானத்தில் குருவுடன் இணைந்திருப்பது, உங்களுக்குச் சில நன்மைகளைக் கொடுக்கும். சகோதரர் வகையில் லாபம் உண்டு. இதுவரையிலும் உங்களுக்குள் இருந்து கவலைகளைக் கொடுத்த – பெரிய நோய் இருப்பது போன்ற பிரம்மை நீங்கும். ஆரோக்கியம் மேம்படும். உங்களில் சிலருக்கு விலையுயர்ந்த நகைகள் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். அதற்கேற்ப பணம் கிடைக்கும். தகுந்த வகைகளில் சேமிக்கப் பாருங்கள். சொத்து வாங்குவது அல்லது விற்பது தொடர்பான முயற்சிகள் நன்மை பயக்கும்.

பரிகாரம்:நீங்கள் பிரதோஷ வழிபாட்டுக்கு அபிஷேக திரவியங்கள் வாங்கிக் கொடுக்கலாம்.

தனுசு: செவ்வாய் 8-ம் இடத்தில் மறைகிறார். குருவின் சேர்க்கை குறைகளைச் சமன் செய்யும் என்றாலும், செயல்களில் அவசரம் கூடாது. நிதானித்து, பலமுறை யோசித்து ஒரு காரியத்தில் இறங்கவேண்டும். அதேபோல், நீங்கள் எதிர்பார்த்த நேரத்தில் எதிர்பார்த்த இடத்தில் பணம் கிடைப்பது கடினமாகும். பணம், விலையுயர்ந்த பொருள்களைக் கையாள்வதில் கவனம் வேண்டும். ஆரோக்கியத்திலும் அலட்சியம் கூடாது. அலர்ஜி தரும் உணவுப் பொருள்களைத் அறவே தவிர்த்துவிடுங்கள். எந்தக் காரியத்திலும் புதிய நபர்களை நம்பி இறங்க வேண்டாம். முக்கியமான விஷயங்களில், வீட்டுப் பெரியவர்களின் ஆலோசனைப்படி செயலாற்றுங்கள். ஜாமின் கையெழுத்துப் போடுவதைத் தவிர்ப்பது நல்லது.

பரிகாரம்:வியாழக் கிழமைகளில் குருவுக்கு கொண்டைக்கடலைச் சமர்ப்பித்தும் நவகிரக செவ்வாய்க்குத் தீபம் ஏற்றியும் வழிபடுங்கள்; ஏற்றம் உண்டாகும்.

மகரம்: உங்கள் ராசிக்கு 7-ம் இடத்துக்கு வந்து, குருபகவானுடன் இணைந்து அமர்கிறார் செவ்வாய். கல்யாண வயதில் உள்ள அன்பர்களுக்கு, கல்யாணப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகும். பிள்ளைகளின் சுபகாரியங்கள் தொடர்பான விஷயங்களிலும் நல்லதொரு முன்னேற்றம் தென்படும். எதிர்பார்த்தபடி பண வரவு உண்டு. வீட்டிலும் வெளியிலும் செல்வம், செல்வாக்கு அதிகரிக்கும். கணவன் – மனைவிக்கு இடையே நல்லதொரு புரிதலும் இணக்கமும் உண்டாகும்.

பரிகாரம்: வீட்டில் தினமும் பாம்பன் ஸ்வாமிகள் அருளிய குமாரஸ்தவம் படித்து வழிபடுவது சிறப்பு. முருகனுக்குச் சர்க்கரைப் பொங்கல் படைத்து, பக்தர்களுக்க்கு விநியோகியுங்கள்; நல்லன எல்லாம் கைகூடும்.

கும்பம்: உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தில் குருபகவானுடன் சேர்ந்து அமர்ந்துள்ளார் செவ்வாய். ஆகவே, எந்தவொரு காரியத்திலும் நிதானம் அவசியம். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செயல்படக்கூடாது. எல்லாவற்றிலும் இனம் புரியாதபடி இறுக்கமான சூழல் உண்டாகும். எதன் பொருட்டும் புதியவர்களை நம்பவேண்டாம். பிறர் பேசுவதையும் பொருட் படுத்தவேண்டாம். தானுண்டு தன் வேலையுண்டு எனும்படி இருக்கவேண்டிய காலம் இது. அதேநேரம், 2-ம் வீட்டில் குருவின் பார்வை விழுவதால் வீட்டில் நிம்மதி பெருகும்.

பரிகாரம்: மகா சுதர்சனரை தொடர்ந்து வழிபட்டு வாருங்கள். சனிக் கிழமைகளில் பெருமாள் தரிசனம் நன்மை அளிக்கும்.

மீனம்: ராசிக்கு 5-ம் இடமாகிய பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் வந்து அமர்ந்து, குருபகவானுடன் இணைந்து பலன் தரப் போகிறார் செவ்வாய். பூர்விகச் சொத்து வந்து சேரும். தந்தை வழியில் பணம் வரும். பிள்ளைகள் உங்கள் எண்ணப்படி நடப்பார்கள். அவர்களின் வேலை, மேற்படிப்பு தொடர்பான விஷயங்கள் நல்லபடியே அமையும். உங்கள் ஆரோக்கியம் மேம்படும். இதுவரை இருந்து வந்த சிறு சிறு பிரச்னைகள் அனைத்தும் விலகும். பணி, சுயதொழில் அனைத்திலும் உற்சாகமாக செயல்படுவீர்கள். நீங்கள் நினைத்தது நடக்கும். எனினும் பாதச் சனி தொடர்வதால், அனைத்து விவகாரங்களிலும் சற்று நிதானத்துடன் செயல்படுங்கள். புதிய முயற்சிகளில் வீட்டுப் பெரியோர்களைக் கலந்து ஆலோசியுங்கள்.

பரிகாரம்: வேல் வழிபாடு உங்களுக்கு நன்மை சேர்க்கும். இயன்றால், குடும்பத்துடன் வேல்மாறல் பாராயணம் செய்து வழிபடலாம்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *