ஆதிச்சநல்லூர் மண்ணில் புதைந்த வரலாறுகள் இன்று வரை உலகை வியக்க வைப்பதைபோல ஏராளமான கிராமங்கள் தங்களது பழம்பெருமையை சுமந்து நிற்கின்றன. அப்படிப்பட்ட வரலாற்றின் அழியாச் சுவடாய் நிற்கிறது இராமநாதபுரம் மாவட்டத்தின் நரிப்பையூர் ஊராட்சி. இந்த ஊருக்கு ‘சம்புமாநகர்‘ என்ற மற்றொரு பெயரும் உள்ளது. “சம்பு” என்பது வடமொழியில் நரியைக் குறிக்கும் சொல்லாகும். மேலும், “நரிப்பையூர்” என்ற பெயருக்கு நரிகள் நிறைந்த அழகிய ஊர் என்ற பொருளும் கூறப்படுகிறது.

முதல் கடல் நீர் குடிநீராக்கும் திட்டம் – நவீன மாற்றம்
பல தொல்லியல் சுவடுகளை தன்னுள் புதைத்து வைத்திருந்தாலும், நரிப்பையூரை உலகம் அறிய வைத்தது கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்தான். தமிழ்நாட்டில் ஆரம்ப காலத்திலேயே கடல் நீரை குடிநீராக்கும் முயற்சி தொடங்கப்பட்ட முக்கிய இடங்களில் ஒன்றாக இந்த ஊர் திகழ்கிறது. 1999ஆம் ஆண்டு இங்கு பெரிய அளவிலான Desalination Plant அமைக்கப்பட்டது. தினமும் சுமார் 3.8 மில்லியன் லிட்டர் குடிநீர் தயாரிக்கும் திறன் கொண்ட இந்த திட்டம், கடற்கரை மக்களின் வாழ்க்கையில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தியது. இந்த நரிப்பையூர் தொல்லியல் தகவல்கள், இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே. ராஜகுரு அவர்களின் ஆய்வின் மூலம் பெறப்பட்டவை. 18.11.2018 அன்று நரிப்பையூரில் நடைபெற்ற பத்தாம் மரபுநடை நிகழ்வில், இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் சார்பில் இவை ஆய்வு செய்து வெளியிடப்பட்டன.

இது குறித்து அவர் கூறுகையில்,
“இன்று போல மாவட்டம், தாலுகா என்ற எல்லைகள் இல்லாத காலத்தில் நிலங்கள் வளநாடு, நாடு என்ற பெயர்களில் பிரிக்கப்பட்டு ஆட்சி செய்யப்பட்டன. அந்த பழைமையான ஆட்சிமுறையின் சுவடாக, நரிப்பையூரும் ‘உலகுசிந்தாமணி வளநாடு‘ என்ற பகுதிக்குள் இருந்தது என்பதை பொ.ஆ.பி 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சாயல்குடி சிவன் கோயில் கல்வெட்டு இன்று வரை நினைவூட்டுகிறது. தமிழ்நாட்டின் பழைமையான மரபுகளில் குறிப்பிடத்தக்க ஒன்று நடுகல் நட்டு வீரர்களை வழிபடும் வழக்கம். சங்க இலக்கியங்களில், குறிப்பாக புறநானூறு கூறும் புறத்திணைகள் தமிழரின் போரியல் வாழ்க்கையையும் வீர மரபையும் வெளிப்படுத்துகின்றன. அவற்றில் இடம்பெறும் பல போர் முறைகளில், புறமுதுகு காட்டாமல் வீரமரணம் அடைந்தவர்களுக்கு நினைவாக நடுகற்கள் நிறுவப்பட்டன. இந்த நடுகற்கள் வெறும் நினைவுச்சின்னங்களாக மட்டுமல்லாமல், வீரத்தைப் போற்றும் சமூக அடையாளங்களாகவும் விளங்கின.

மொட்டைப் பள்ளிவாசல்
நரிப்பையூரில் உள்ள “மொட்டைப் பள்ளிவாசல்” கடற்கரைப் பகுதியின் பழைமையான இஸ்லாமிய மரபையும் வணிகத் தொடர்புகளையும் வெளிப்படுத்தும் வரலாற்று சின்னமாகும். மினாரா இல்லாததால் இதற்கு இந்த பெயர் ஏற்பட்டது. கட்டடத்தின் உள்ளமைப்பில் தொழுகை மண்டபம், அர்த்த மண்டபம் மற்றும் முன் மண்டபம் என மூன்று பகுதிகள் தெளிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இது வழிபாட்டு ஒழுங்கையும் சமூக அமைப்பையும் காட்டுகிறது. ஒலி பெருக்கி இல்லாத காலத்தில், வில் வடிவ மாடம் இமாமின் உரை மற்றும் தொழுகை வழிநடத்தலுக்காக பயன்படுத்தப்பட்டது. இது அந்தக் கால தொழில்நுட்ப தேவைக்கு ஏற்ப உருவாக்கப்பட்ட அமைப்பாகும். தூண்களில் உள்ள தாமரைப் பொதிகையுடன் கூடிய அலங்காரங்கள், திராவிட – இஸ்லாமிய கட்டடக்கலையின் கலவைத் தன்மையை வெளிப்படுத்துகின்றன.

கடல் தான் இராமநாதபுரத்தின் பழைய வரலாற்றை எழுதிச் சென்றது. சங்க காலம் முதலே மருங்கூர்ப்பட்டினம், அழகன்குளம், தொண்டி, கீழக்கரை, இராமேஸ்வரம் போன்ற துறைமுகங்கள் வழியாக உலக வாணிகம் இங்கு உயிர்ப்புடன் இருந்தது. இந்த கடல் வழிப் பயணங்களே மதங்களையும் கொண்டு வந்தன. சமணம், பௌத்தம், சைவம் என பல மரபுகள் இப்பகுதியில் வளர்ந்தன. வணிகத்தின் நிழலில் கோயில்கள் எழுந்தன; பழையவை காக்கப்பட்டன. பாண்டியர் காலத்தில் கடற்கரை ஊர்கள் ஆன்மிக மையங்களாகவும் மாறின. அந்த வரலாற்றின் தடயமாகவே நரிப்பையூரில் தெற்கு கடற்கரையும் வெட்டுக்காடும் பகுதியில் இரண்டு சிவன் கோயில்கள் இன்று மண்ணுக்குள் மறைந்தபடி நிற்கின்றன.

பாடு என்னும் சொல் பொதுவாக மீன்பிடி தளங்களை குறிக்கும். அவ்வகையில் தெற்கு நரிப்பையூர் கடற்கரையில் துறைப்பாடு, சொக்கன்பாடு, எருக்கலாம்பாடு, பள்ளிவாசல்பாடு ஆகிய பகுதிகள் உள்ளன. நரிப்பையூரின் கடற்கரை ஒரு பெரிய கதை போல ‘பாடு’ என்ற பெயர்களால் பிரிந்து கிடக்கிறது. துறைப்பாடு கடல் தொழிலின் அடையாளமாகவும், பள்ளிவாசல்பாடு ஒரு தர்ஹாவுடன் ஆன்மிகச் சுவடாகவும் நிற்கிறது. எருக்கலாம்பாடு அதன் இயற்கைச் சூழலால் பெயர் பெற்றது. இந்தக் கதையின் மையத்தில் சொக்கன்பாடு ஒரு மறைந்த அத்தியாயம் போல உள்ளது. மண்ணுக்குள் கிடைத்த தூண்கள், கொடுங்கை போன்ற அடையாளங்கள் அந்த இடம் ஒரு கட்டடமாக இருந்திருக்கலாம் என சொல்கின்றன. ‘L’ வடிவ நில அமைப்பும் அதையே மேலும் உறுதிப்படுத்துகிறது.

இத்தனை ஆய்வுகள், முயற்சிகள், வெளிப்பாடுகள் இருந்தும்கூட, அந்தச் சின்னங்களை பாதுகாக்க முடியாத நிலை என்பது மிகவும் வருத்தம் தருகிறது. முறையான பாதுகாப்பு இல்லாததால் மாலையடிகளில் ஒன்று இடிந்து விழுந்திருப்பது, நம் வரலாற்று சின்னங்களை நாம் இழந்துவிடுகிறோமோ என்ற கவலையை ஏற்படுத்துகிறது. இவ்வாறான மரபுச்சின்னங்களை பாதுகாப்பதும், அவற்றின் மதிப்பை எதிர்கால தலைமுறைக்கு கொண்டு செல்வதும் நம் அனைவரின் பொறுப்பாகும்” என்று பேசி முடித்தார் ராஜகுரு.
– தர்ஷினி.சி