ஆர்.எஸ்.எஸ்-ன் எதிர்பார்ப்பு என்ன?
அறக்கட்டளையின் நிர்வாகக் குளறுபடிகள் குறித்துப் பேசிய ஹோசபாலே, “இந்தக் கண்டனத்திற்குரிய சம்பவத்தை ஓர் அசாதாரணமான விஷயமாகக் கருதி, கோயில் நிர்வாகத்திலும் மேலாண்மையிலும் உள்ள அனைத்துக் குறைபாடுகளையும் களைய ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை உரிய, பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று ஒட்டுமொத்த இந்து சமுதாயமும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் எதிர்பார்க்கிறது. அப்போதுதான் பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை தொடரும். தற்போது நிலவி வரும் குழப்பங்களுக்கும் நிச்சயமற்ற தன்மைக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

“சதித் திட்டம்… பொறுமை அவசியம்!”
இதேவேளையில், இந்த விவகாரத்தை வைத்து அரசியல் மற்றும் மதரீதியான விமர்சனங்கள் எழுவதைச் சுட்டிக்காட்டிய தத்தாத்ரேயா ஹோசபாலே, “இந்த துரதிஷ்டவசமான சம்பவத்தைப் பயன்படுத்தி, இந்து தர்மத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்த “இந்து எதிர்ப்பு மற்றும் தேச விரோத சக்திகள்’ முயன்று வருகின்றன. இந்தச் சதித் திட்டங்களை முறியடிக்க, இந்த இக்கட்டான தருணத்தில் ஒட்டுமொத்த இந்து சமுதாயமும் தேவையான பொறுமையையும் கட்டுப்பாட்டையும் கடைப்பிடிக்க வேண்டும்” எனக் கூறியிருக்கிறார்.
உண்டியல் பணம் கையாடல் விவகாரத்தில் முன்னாள் அறக்கட்டளை நிர்வாகி சம்பத் ராய் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் இந்த அறிக்கை அயோத்தி விவகாரத்தில் முக்கியத்துவம் பெறுகிறது.