International
oi-Vigneshkumar
பெர்லின்: வேலைக்குச் செல்ல முடியாத அளவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டாலும் சரி, ஒரு நாள் மட்டுமே விடுப்பு எடுத்தாலும் சரி அதற்கு மருத்துவரின் மருத்துவச் சான்றிதழ் கட்டாயம் என்ற புதிய விதியை அமல்படுத்த ஜெர்மனி அரசு பரிசீலித்து வருகிறது. நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கில் அந்நாட்டு அரசு 24 சீர்திருத்தங்களைக் கொண்டு வரும் நிலையில், இது பேசுபொருள் ஆகியுள்ளது.
நம்ம ஊரில் எல்லாம் sick leave என்று ஒன்று இருக்கும். உடம்பு சரி இல்லை என்றாலும் sick leave தான், வேறு பிளான் இருந்தாலும் சிக் லீவ் தான் எடுப்பார்கள். இதற்கு ஊழியர்களிடம் கேட்டால் மற்ற காரணம் சொன்னால் லீவ் தர மாட்டார்கள் என்பதே பதிலாக இருக்கும். நம்ம ஊர் என இல்லை பல்வேறு நாடுகளிலும் இதே கதை தான்!

ஜெர்மனி
அதேநேரம் இப்போது ஜெர்மனியில் நடைமுறையில் உள்ள விதிகளின்படி, ஊழியர்கள் உடல்நலக்குறைவு காரணமாக மூன்று நாட்கள் வரை மருத்துவரின் சான்றிதழ் இல்லாமலேயே விடுப்பு எடுக்க முடியும். அது மட்டுமல்லாமல், சில சூழ்நிலைகளில் மருத்துவரிடம் தொலைப்பேசி மூலம் ஆலோசனை பெற்று, ஒரு வாரம் வரை மருத்துவ விடுப்புக்கான சான்றிதழையும் பெற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த நடைமுறையை மாற்றி, முதல் நாளிலிருந்தே மருத்துவரின் சான்றிதழைக் கட்டாயமாக்க அரசு திட்டமிட்டுள்ளது.
பிரதமர் பிரெட்ரிக் மெர்ஸ் தலைமையிலான அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. கொரோனா காலத்திற்குப் பிறகு ஊழியர்கள் எடுக்கும் சிக் லீவ் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகக் கூறுகிறது. இதனால் தொழில் நிறுவனங்களின் உற்பத்தித் திறன் குறைவதுடன், ஜெர்மனியின் போட்டித்திறனும் பாதிக்கப்படுவதாக அரசு கருதுகிறது. எனவே, தேவையற்ற மருத்துவ விடுப்புகளைக் கட்டுப்படுத்தவும், பணியிடங்களில் ஒழுங்கை மேம்படுத்தவும் இந்த மாற்றம் உதவும் என்று அதிகாரிகள் நம்புகின்றனர்.
மருத்துவ சான்றிதழ்
இந்த திட்டம் அமலுக்கு வந்தால், காய்ச்சல், சளி அல்லது உடல்நலக்குறைவு போன்ற காரணங்களால் ஒரு நாள் விடுப்பு எடுத்தாலும், ஊழியர்கள் மருத்துவரைச் சந்தித்து சான்றிதழ் பெற வேண்டிய கட்டாயம் ஏற்படும். இதன் மூலம் விடுப்பு முறையைத் தெளிவாக மாறுவதாகவும் தவறான முறையில் விடுப்பு எடுப்பதையும் குறைக்க முடியும் என்று அரசு விளக்கமளித்துள்ளது.
ஆனால் இந்த யோசனைக்குத் தொழிற்சங்கங்கள் மற்றும் மருத்துவ அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. சாதாரண காய்ச்சல் அல்லது சிறிய உடல்நல பிரச்சினைக்குக்கூட அனைவரும் மருத்துவரைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டால், மருத்துவமனைகள் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என அவர்கள் எச்சரிக்கின்றனர். மேலும், ஏற்கனவே ஒர்க் பிரஷரில் இருக்கும் மருத்துவர்களுக்கு இது கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
ஒரு நாள் லீவ்!
தொழிலாளர் சங்கத்தினரும் இந்த திட்டம் குறித்து கவலை தெரிவித்துள்ளனர். ஊழியர்கள் உடல்நலக்குறைவு ஏற்பட்ட முதல் நாளிலேயே மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய சூழல் உருவானால், ஓய்வெடுக்க வேண்டிய நேரத்தில் கூட அவர்கள் மருத்துவச் சான்றிதழுக்காக அலைக்கழிக்கப்படுவார்கள் என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். குறிப்பாக கிராமப்புறங்களில் வசிப்பவர்கள் அல்லது மருத்துவரை உடனடியாகச் சந்திக்க முடியாதவர்கள் அதிக சிரமத்தைச் சந்திக்க நேரிடும் என்றும் கூறப்படுகிறது.
மாற்றங்கள்
மருத்துவ விடுப்பு விதியில் மாற்றம் மட்டுமல்லாமல், குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு வரிச் சலுகைகள், ஓய்வூதிய முறையில் மாற்றங்கள், தொழில் நிறுவனங்களுக்கான நிர்வாக நடைமுறைகளை எளிமைப்படுத்துதல், முதலீடுகளை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்தங்களையும் ஜெர்மனி அரசு அறிவித்துள்ளது. மொத்தம் 34 அம்சங்களைக் கொண்ட இந்த திட்டம், கடந்த சில ஆண்டுகளாகப் பொருளாதார வளர்ச்சியில் மந்தமாக இருக்கும் ஜெர்மனியை மீண்டும் வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு வருவதற்கான முயற்சியாகக் கருதப்படுகிறது.
இந்த பரிந்துரைகள் இன்னும் சட்டமாக அமலுக்கு வரவில்லை. தொழிற்சங்கங்கள், மருத்துவ அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளின் கருத்துகளைக் கேட்ட பிறகே இறுதி முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், ஒரு நாள் மருத்துவ விடுப்புக்குக்கூட மருத்துவர் சான்றிதழ் கட்டாயமாக்கும் திட்டம், ஜெர்மனியில் இப்போது பேசுபொருளாகியுள்ளது.