கோவை கலிக்கநாயக்கன்பாளையம் பகுதியில் மகாராஜன் என்பவர் இருசக்கர வாகன விற்பனை ஷோரூம் நடத்தி வருகிறார். இவரது மனைவி திவ்யா. சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த மகாராஜன், கட்சியின் பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் கட்சிப் பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இதனிடையே த.வெ.க-வின் வேடபட்டி நகரச் செயலாளர் பிரகாஷ், மகாராஜனின் ஷோரூமில் இருந்து பணம் கொடுத்து இருசக்கர வாகனம் ஒன்றை வாங்கியுள்ளார். அப்போது, மகாராஜனுக்கு கட்சியில் இளைஞரணி பொறுப்பாளர் பதவி வழங்குவதாகக் கூறி, அவரிடம் ஒரு லட்சம் ரூபாய் பணத்தை பிரகாஷ் பெற்றதாகக் கூறப்படுகிறது.
ஆனால், பணம் பெற்றுக்கொண்ட பிறகும் கட்சியில் எந்தப் பொறுப்பும் வழங்கப்படாததால், தான் கொடுத்த பணத்தைத் திருப்பித் தருமாறு மகாராஜன் கேட்டுள்ளார். இதற்கு பிரகாஷ் தரப்பில் உரிய பதில் அளிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனிடையே, தான் வாங்கிய இருசக்கர வாகனத்தின் பதிவுப் பணிகளுக்காக அந்த வாகனத்தை மகாராஜனின் ஷோரூமில் பிரகாஷ் ஒப்படைத்துள்ளார்.
அப்போது, பதவி கொடுப்பதாக ஏற்கெனவே பெற்ற பணத்தைத் திருப்பிக் கொடுத்தால் மட்டுமே வாகனத்தை ஒப்படைக்க முடியும் என மகாராஜன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் இரு தரப்பினருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது.