“கட்சி எப்போ ஆரம்பிக்கிறீங்க?” – ரஜினி ஸ்டைலில் சிரித்த தனுஷ்… அரசியல் என்ட்ரிக்கு இப்படியொரு பதிலா? – Kumudam

Spread the love

தேசிய விருது… மகன்களுடன் வைரல் புகைப்படம்… இதையெல்லாம் தாண்டி, தனுஷிடம் செய்தியாளர்கள் கேட்ட ஒரே ஒரு கேள்விதான் இப்போது இணையத்தில் ஹாட் டாபிக்!

“சார்… கட்சி எப்போ ஆரம்பிக்கப் போறீங்க?”

கேள்வியைக் கேட்டதும் தனுஷ் கொடுத்த ரியாக்‌ஷன் பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. பதில் சொல்லாமல், ரஜினிகாந்த் பாணியில் “ஹா… ஹா… ஹா…” என சிரித்துவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டார் தனுஷ்.

அவ்வளவுதான்… தனுஷின் அரசியல் என்ட்ரி குறித்த பேச்சு மீண்டும் சூடுபிடித்துவிட்டது.

சமீப காலமாக தனுஷின் செயல்பாடுகளை உற்றுக் கவனிப்பவர்கள், அவரது ரசிகர் மன்ற நடவடிக்கைகள் மீண்டும் வேகம் எடுத்திருப்பதை சுட்டிக்காட்டி வருகின்றனர். ரசிகர்கள் மூலமாக சமூகப் பணிகள் மேற்கொள்ளப்படுவதும், பழைய ரசிகர் மன்ற கட்டமைப்புகள் மீண்டும் செயல்பாட்டுக்கு வருவதும் இந்தப் பேச்சுக்கு கூடுதல் தீனி போட்டிருக்கிறது.

இதற்கிடையே, அவரது ரசிகர் அமைப்பு தொடர்பான கொடி அறிமுகம் தனுஷின் அரசியல் ஆர்வம் குறித்த விவாதத்தை அதிகப்படுத்தின.

அதிலும், தமிழ்நாடு அரசியலில் விஜயின் அரசியல் பயணம் தீவிரமடைந்துள்ள சூழலில், தனுஷின் ரசிகர் மன்ற செயல்பாடுகளில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் கவனிக்கப்படாமல் போகவில்லை. ஆனால், “அரசியலுக்கு வருகிறீர்களா?” என்ற கேள்விக்கு தனுஷ் இதுவரை எந்த நேரடியான அறிவிப்பையும் வெளியிடவில்லை.

இந்த நிலையில்தான், தேசிய திரைப்பட விருது விழாவுக்குப் பிறகு செய்தியாளர்கள் நேரடியாகவே அரசியல் கேள்வியை முன்வைத்திருக்கிறார்கள்.

செப்டம்பர் 22-ம் தேதி நடைபெற்ற 22-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் தனுஷுக்கு இரண்டு விருதுகள் கிடைத்தன. ‘கேப்டன் மில்லர்’ படத்துக்காக சிறப்பு நடிகருக்கான விருதும், ‘ராயன்’ படத்துக்காக சிறந்த தமிழ் திரைப்படத்துக்கான விருதும் அவருக்கு வழங்கப்பட்டது. 

விருது பெற்ற மகிழ்ச்சியில் மகன்கள் யாத்ரா, லிங்காவுடன் தனுஷ் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார். விருதைவிட மகன்கள்தான் தன் கவனத்தை திருடிவிட்டார்கள் என்ற ஜாலியான தொனியில் அவர் பதிவிட்டிருந்தது ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது.

ஒருபக்கம் இந்த குடும்ப தருணங்கள் வைரலாகிக் கொண்டிருக்க… மறுபக்கம், “கட்சி எப்போ?” என்ற கேள்வி தனுஷை அரசியல் விவாதத்துக்குள் மீண்டும் அழைத்து வந்திருக்கிறது.

சினிமா நிகழ்ச்சிகளில் ரஜினிகாந்தின் சில பாணிகளை தனுஷ் பின்பற்றுவதாக ஏற்கெனவே சமூக வலைதளங்களில் கிண்டல் மற்றும் விமர்சனங்கள் இருக்கின்றன. இப்போது அரசியல் கேள்விக்கும் ரஜினி பாணியில் சிரிப்பை மட்டும் பதிலாக கொடுத்திருப்பது, அந்த விவாதத்தை இன்னும் அதிகப்படுத்தியுள்ளது.

Actor Dhanush Dhanush

சிரித்தது மட்டும் ஏன்?, அது அரசியலுக்கான சிக்னலா? இல்லை… கேள்வியைத் தவிர்க்கும் ஸ்டைலா? என ரசிகர்கள் தங்களுக்குத் தோன்றியபடி அர்த்தம் கற்பிக்க ஆரம்பித்துவிட்டனர். 

அதனால், தனுஷின் அந்த சிரிப்புக்குள் அரசியல் இருக்கிறதா… இல்லை வழக்கமான தனுஷ் ஸ்டைல் ரியாக்‌ஷனா? என்பதற்கு அவரே பதில் சொல்லும் வரை, அவரது ரசிகர்களின் எதிர்பார்ப்பு மட்டும் தொடரும். 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *