Tamilnadu
oi-Pavithra Mani
மதுராந்தகம்: மதுராந்கம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. தவெக, திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட்கள், நாம் தமிழர் என 5 முனை போட்டி நிலவுகிறது. மதுராந்தகத்தில் உள்ள வாக்குச்சாவடி மையத்திற்கு கட்சி துண்டு கரைவேட்டியுடன் ஒருவர் வாக்களிக்க வந்தார். விதிகள்படி கட்சி அடையாளத்துடன் வாக்குச்சாவடி மையம் செல்ல அனுமதியில்லை. அவரை காவல்துறையினர் தடுத்ததால் கோபமடைந்தார். அவர் சகட்டுமேனிக்கு வார்த்தையை விட்டு காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
மதுராந்தகத்தில் காலை 6.30 மணியளவில் அதிமுக பிரமுகர் ஒருவர் கட்சி துண்டு, கரைவேட்டியுடன் வாக்களிப்பதற்காக வாக்குச்சாவடி மையத்திற்கு சென்றார். அவரிடம் காவல்துறையினர்,”மணி 6.30 தான் ஆகிறது. 7 மணிக்கு தான் வாக்குப்பதிவு தொடங்கும். வெயிட் பண்ணுங்க” என்றார். அதை கேட்காமல் அவர், “நான் உள்ளே சென்று பார்க்க வேண்டும்” என கேட்டுள்ளார். அதற்கு காவல்துறையினர், “நீங்க வாக்குச்சாவடி முகவரா” என்று கேள்வி எழுப்பினர்.

ரூல்சே இல்லை
அதற்கு அவர், “நான் எம்ஜிஆர் மன்ற துணை தலைவர். நான் தான் பொறுப்பாளர்” என்று வாக்குச்சாவடி மையத்திற்குள் செல்ல முயற்சித்தார். அப்போது கட்சி துண்டு, “கரைவேட்டியுடன் வாக்குச்சாவடி மையத்திற்குள் வரக்கூடாது” என காவல்துறையினரும், தேர்தல் அதிகாரிகளும் கூறினர். அதற்கு அதிமுக நிர்வாகி, “கட்சி துண்டு ஏன் போடக்கூடாதா. ஏன் போடக்கூடாது. எனக்கு உரிமை இல்லையா. அப்படி ஒரு ரூல்சே கிடையாது. ஏன் கரை வேட்டியை அவுத்து போட்டு போகணுமா” என வாக்குவாதம் செய்தார்.
காவல்துறையினர் வேறு துணி மாற்றிவிட்டு வாங்க என்று கூறினர். அதை கேட்காமல் அவர் மீண்டும், “கட்சிக்காரன்னா எப்படி இருப்பான். இல்லாததை எல்லாம் சொல்லாதீங்க. கட்சிக்காரன் எப்படி இருப்பான் சொல்லுங்க. என்னத்துக்கு விட மாட்டிங்க” என்றார். பிறகு அவரிடம் அதிமுக கட்சி துண்டை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். அதன் பிறகு அவர் சட்டையில் செல்போனுடன் வாக்குச்சாவடி மையத்திற்குள் சென்றார். “சார் போன் எடுத்துட்டு போக கூடாது” என்று காவல்துறையினர் கேட்டனர்.
டென்ஷன் வேண்டாம்
அதற்கு அந்த நபர், “நீங்க பண்ணறது தான் டார்ச்சர் இப்ப. நான் பாட்டுக்கு வந்துட்டு போயிட்டே இருப்பேன். இங்க எந்த பிரச்சனையுமே வராது. நீங்க தான் பிரச்சனை செய்கிறீர்கள். எனக்கு டென்ஷன் ஆகுது. எங்க ஊரில் முதல் ஓட்டு போடுவதே நான். எம்ஜிஆர் கட்டிப்பிடித்த நபர் நான். ஒரு பெரிய மனுசனை இப்படியே நடத்துவீங்க” என்று கூறினார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.