இரவு நேரங்களில் நகரத்தின் வானளாவிய கட்டடங்கள், செல்போன் கோபுரங்கள், தொழிற்சாலை புகைபோக்கிகள் போன்றவற்றின் உச்சியில் சிவப்பு விளக்குகள் ஒளிர்வதை நாம் பார்த்திருப்போம்.
இது வெறுமனே அழகுக்காக அமைக்கப்பட்டதல்ல, மனித உயிர்களைக் காக்கும் மிக முக்கியமான ஒரு பாதுகாப்பு ஏற்பாடு.
இந்த விளக்குகள் விமானப் போக்குவரத்து எச்சரிக்கை விளக்குகள் (Aviation Obstruction Lights) என்று அழைக்கப்படுகின்றன. சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பு மற்றும் பல நாடுகளின் விமானப் போக்குவரத்து விதிகளின்படி, குறிப்பிட்ட உயரத்திற்கு (பொதுவாக 45 மீட்டர் அல்லது 150 அடிக்கு) மேல் உள்ள எந்தவொரு கட்டுமானத்திலும் இந்த விளக்குகள் கட்டாயம் பொருத்தப்பட வேண்டும்.
இரவு நேரங்களிலும், மோசமான வானிலையிலும் தாழ்வாகப் பறக்கும் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் கட்டடத்தின் மீது மோதி விபத்துக்குள்ளாவதைத் தடுக்கவே இவை பயன்படுகின்றன.

சிவப்பு நிறம் ஏன்?
-
ஒளி நிறங்களிலேயே சிவப்பு நிறத்திற்கு அலைநீளம் அதிகம். இதனால் பனிமூட்டம், மழை, அல்லது அடர்ந்த புகை போன்ற பார்வைக்குத் தடையாக இருக்கும் சூழ்நிலைகளிலும் இந்த ஒளி சிதறலடையாமல் வெகு தொலைவில் உள்ள பைலட்டுகளின் கண்களுக்குத் தெளிவாகத் தெரியும்.
-
உலகளாவிய ரீதியில் சிவப்பு நிறம் என்பது `அபாயம்”, ‘எச்சரிக்கை’ என்பதற்கான குறியீடு.
-
வெள்ளை அல்லது நீல விளக்குகளைப் போல சிவப்பு விளக்குகள் பைலட்டுகளின் கண்களைக் கூசச் செய்வதில்லை.