கட்டை விரலில் ஏற்பட்ட காயம்.. பயிற்சியில் சுப்மன் கில்லுக்கு நேர்ந்த சோகம்.. கடுப்பான கம்பீர்! | Shubman Gill: Indian Captain Shubman Gill Suffers Thumb Injury, Adds to Team’s Mounting Injury Woes

Spread the love

Cricket

oi-Yogeshwaran Moorthi

கொழும்பு: இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்லின் கட்டை விரலில் காயம் ஏற்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. ஏற்கனவே பும்ரா, நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், ஹர்சித் ராணா மற்றும் சாய் சுதர்சன் ஆகியோர் காயம் அடைந்த நிலையில், தற்போது சுப்மன் கில்லும் காயம் அடைந்திருக்கிறார்.

இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 15ஆம் தேதி தொடங்க உள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி முன்னேற வேண்டுமென்றால் இலங்கை மற்றும் நியூசிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடர்களை வெல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதில் கேப்டன் சுப்மன் கில் தீவிரமாக இருக்கிறார்.

Shubman Gill

அதேபோல் பயிற்சியாளர் கவுதம் கம்பீரும் சொந்த மண்ணில் 2 டெஸ்ட் தொடர்களை இழந்திருப்பதால், அவரின் தலைக்கு மேலும் கத்தி தொங்கி கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் இருவருக்குமே அக்னி பரீட்சையாக பார்க்கப்படுகிறது. இப்படியான சூழலில் இந்திய அணி வீரர்கள் அடுத்தடுத்து காயம் அடைந்து வருகின்றனர்.

ஏற்கனவே நிதிஷ் குமார் ரெட்டி, ஹர்சித் ராணா, வாஷிங்டன் சுந்தர், பும்ரா உள்ளிட்டோர் காயம் அடைந்தனர். அதிலும் பும்ரா கடைசி நேரத்தில் விலகியது இந்திய அணிக்கு பின்னடைவாக மாறி இருக்கிறது. நாளை இந்திய அணி பயிற்சி ஆட்டத்தில் களமிறங்க தயாராகி வருகிறது. இலங்கை அணி வீரர்களுக்கு எதிராக விளையாடுவதால், இந்த பயிற்சிப் போட்டி இந்திய வீரர்களுக்கு நல்ல அனுபவமாக இருக்கும் என்று பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் கட்டை விரலில் காயம் ஏற்பட்டுள்ளது. இன்றைய வலைப்பயிற்சிக்கு முன்பாக சுப்மன் கில் விரலில் சிகிச்சை எடுத்து கொண்டே பேட்டிங் ஆடினார். இதனால் நாளைய ஆட்டத்தில் சுப்மன் கில் களமிறங்குவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. சாய் சுதர்சனும் இன்னும் காயத்தில் இருந்து முழுமையாக குணமடையவில்லை.

இன்னும் அவர் இலங்கைக்கு பயணிக்கவில்லை. பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் தான் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். தற்போது சுப்மன் கில்லும் காயம் அடைந்திருப்பது இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக மாறியுள்ளது. இதனால் கம்பீருக்கு தலைவலி ஏற்பட்டுள்ளதாகவே பார்க்கப்படுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *