கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நடுத்தேரி பிலாவிலையைச் சேர்ந்தவர் ஷாலினி (37). இவரது கணவர் ஜோசப் மெசியா தாஸ். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
ஜோசப் மெசியா தாஸ் தற்போது வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். கடந்த 2023-ம் ஆண்டு கணவன், மனைவிக்குள் தகராறு ஏற்பட்டு கருங்கல் காவல் நிலையத்திற்குப் புகார் அளிப்பதற்காக ஷாலினி சென்றுள்ளார்.
அப்போது தனிப்பிரிவு ஏட்டாக இருந்த சாம்சன் (45), ஷாலினியின் போன் நம்பரைப் பெற்றுக்கொண்டு எதுவாக இருந்தாலும் நான் பார்த்துக் கொள்கிறேன் எனக் கூறி அவருக்கு ஆதரவாக இருப்பதுபோன்று நடித்துள்ளார். இதையடுத்து அன்று இரவே வாட்ஸ்அப் காலில் போன் செய்த சாம்சன், கனிவாகப் பேசியுள்ளார்.
அப்போது அவர்களுக்குள் நட்பு ஏற்பட்டுள்ளது. தனக்கு திருமணம் ஆகவில்லை என ஷாலினியிடம் கூறிய ஏட்டு சாம்சன் பலமுறை அவருடன் திருமணம் மீறிய உறவில் ஈடுபட்டுள்ளார். மேலும் ஷாலினியின் வீட்டிலேயே தங்கி அவருடன் சேர்ந்து வாழ்ந்துள்ளார். இதில் ஷாலினி கர்ப்பமாகியுள்ளார்.
கர்ப்பமான தகவலை சாம்சன் அறிந்ததும், ஷாலினியிடம் அவரது கணவரை வெளிநாட்டில் இருந்து வீட்டிற்கு வரவழைக்கும்படி கூறியுள்ளார். ஷாலினியின் கணவரும் வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வந்து ஒரு மாதம் இருந்து விட்டு மீண்டும் வெளிநாட்டிற்குச் சென்றுள்ளார்.

கர்ப்பமாக இருந்த ஷாலினியை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்கு உதவியுள்ளார் சாம்சன். அதன் பிறகு ஷாலினிக்கு குழந்தை பிறந்துள்ளது. இனியாவது திருமணம் செய்துகொள்ளும்படி சாம்சனிடம் ஷாலினி கேட்டுள்ளார். ஆனால், ஷாலினியைத் திருமணம் செய்ய முடியாது எனவும், தனக்கு ஏற்கனவே திருமணம் ஆகி உள்ளது எனவும் சாம்சன் கூறியுள்ளார்.