“ஒரு சிற்பம் எப்படி இருக்கும் என்பதை இன்றுதான் என்னால் தொட்டு உணர்ந்து புரிந்துகொள்ள முடிந்தது. இதுவரை எனக்கு அதுபற்றி எந்த யோசனையுமே இருந்ததில்லை. இது எனக்கு வாழ்வில் மறக்க முடியாத புது அனுபவம்” — அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் உள்ள புகழ்பெற்ற “சண்டேச அனுக்கிரக மூர்த்தி’ சிற்பத்தின் மாதிரியைத் தொட்டு உணர்ந்தபோது, விழித்திறன் சவால் கொண்ட 11-ம் வகுப்பு மாணவி எஸ்.கார்த்திகாவின் குரலில் அத்தனை நெகிழ்ச்சி.
ஆயிரம் ஆண்டுக்கால சோழர் சிற்பக்கலையின் நுணுக்கத்தை, கண்களால் பார்க்க முடியாத பார்வைத்திறன் சவால்மிக்கவர்கள் தங்கள் விரல் நுனிகளால் வருடி உணர்ந்த அந்தத் தருணம், கல் நெஞ்சங்களையும் கரைய வைக்கும் விதமாக இருந்தது.

முதலாம் ராஜேந்திர சோழனால் (கி.பி. 1012–1044) கட்டப்பட்டு, யுனெஸ்கோவின் ‘பெருமைக்குரிய சோழர் கோயில்கள்’ பட்டியலில் இடம்பெற்றுள்ள கங்கைகொண்ட சோழபுரம் கோயிலில், இந்தியாவின் முதல் தொடு உணர்வு கலைக்கூடம் (Tactile Museum) அமைக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர், தூத்துக்குடி, புதுக்கோட்டை மற்றும் அரியலூர் மாவட்டங்களில் நடைபெற்ற ஒரு வார கால உலகப் பாரம்பர்ய வார விழாவின் நிறைவு நாளை (நவம்பர் 25) முன்னிட்டு, மத்திய அரசின் கீழ் செயல்படும் இந்தியத் தொல்லியல் துறை (ASI) திருச்சி வட்டத்தின் சார்பில் இந்தச் சிற்பத்தின் ‘தொட்டுணர் அனுபவ மாதிரி’ மக்கள் பயன்பாட்டிற்குத் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் திருச்சி புத்தூர் அரசினர் விழித்திறன் மாற்றுத்திறனாளிகள் மகளிர் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 47 மாணவிகள் பங்கேற்று, சிற்பத்தைக் கைகளால் வருடி உணர்ந்து உற்சாகத்தில் திளைத்தனர்.

அதோடு, இக்கோயில் குறித்த பிரெய்லி (Braille) கையேட்டையும் திருச்சி வட்டத் தொல்லியல் துறை வெளியிட்டது.
“அவர்களுக்கு இதுவொரு புதிய உலகம்!”
இந்த முன்னெடுப்பின் அனுபவங்கள் குறித்து மத்திய அரசின் இந்தியத் தொல்லியல் துறை (ASI) திருச்சி வட்டக் கண்காணிப்பாளர் (பொறுப்பு) பி. அறவாழியிடம் நாம் பேசினோம்.
“சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பு திருச்சி வானொலி நிலையத்தின் எஃப்.எம். நிகழ்ச்சியில் நான் கலந்துகொண்டு கோயில் சிற்பங்களின் சிறப்புகள் குறித்துப் பேசிக் கொண்டிருந்தேன்.
நேரடி நிகழ்ச்சியில் ஒருவர் கேட்ட கேள்வியே இந்தத் திட்டத்திற்கான விதையாக அமைந்தது. விழித்திறன் சவால் கொண்டவர்கள் ஒரு சிற்பத்தைத் தொட்டுப் பார்த்து அது யார் என்பதை அடையாளம் காண முடியுமா என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.