கண்ட்ரோலை எடுத்த ராணுவ தளபதி முனீர்.. பாகிஸ்தானில் சத்தமின்றி ராணுவ ஆட்சி? மக்களாட்சி காலி | Pakistan Army Chief Asim Munir Gains Unprecedented Power, Raising Concerns Over Military Rule

Spread the love

International

oi-Vigneshkumar

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் கடந்த காலத்தில் பல முறை ராணுவ ஆட்சி ஏற்பட்டுள்ளது. இந்த முறை நேரடியாக மக்களாட்சி கவிழ்க்கப்பட்டு ராணுவம் ஆட்சிக்கு வரவில்லை என்றாலும் கூட ராணுவ தளபதியாக இருக்கும் அசிம் முனீரிடம் மெல்ல அதிகாரம் குவிந்து வருகிறது. இதனால் அங்கு மறைமுகமாக ஒரு ராணுவ ஆட்சி உருவாகியுள்ளது.

பாகிஸ்தானின் ராணுவ அமைப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள புதிய மாற்றங்கள், அந்நாட்டின் ராணுவ அதிகாரத்தை மேலும் ஒரே மையத்தில் குவித்துள்ளன. குறிப்பாக, பாகிஸ்தான் ராணுவத்தின் தலைமை தளபதியாக இருக்கும் ஃபீல்டு மார்ஷல் அசிம் முனீரின் அதிகாரம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Pakistan Army Chief Asim Munir s Daughter Mahnoor Weds Cousin in Low-Key Ceremony at Rawalpindi

பாகிஸ்தான் ராணுவம்

ஏற்கெனவே பாகிஸ்தானில் மிகவும் சக்திவாய்ந்த அமைப்பாக அந்நாட்டு ராணுவம் கருதப்படுகிறது. இதற்கிடையே அனைத்து அதிகாரங்களுமே தன்னிடம் இருக்கும் வகையில் முனீர் தனது அனைத்து முக்கியமான பதவிகளையும் ஒருங்கிணைத்துள்ளார். கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் தேசிய சட்டமன்றம் ராணுவத்திற்கு கூடுதல் அதிகாரத்தை தரும் இரண்டு சட்டங்களை நிறைவேற்றின. பின்னர் அதிபர் ஆசிப் அலி சர்தாரி அவற்றுக்கு ஒப்புதல் அளித்தார்.

அங்கு கடந்த 2025 நவம்பரில் நிறைவேற்றப்பட்ட 27வது அரசியலமைப்பு திருத்தத்தை தொடர்ந்து இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டது. அந்த திருத்தம் தலைமை தளபதி என்ற புதிய பதவியை உருவாக்கியது. அசிம் முனீர் இப்போது ராணுவத் தளபதி பதவியுடன் இந்த தலைமை தளபதி பதவியையும் வகிக்கிறார்.

ராணுவத்திற்கு அதிகாரம்

மேலும், புதிய சட்டத்தின் கீழ் பாகிஸ்தானின் ஆயுதப்படைகளுக்கான தலைமையகமும் தனியாக உருவாக்கப்பட்டுள்ளது. இதன் தலைவராக இருக்கும் முனீர், ராணுவ தலைமையகத்தை வழிநடத்துவதுடன், தேசிய பாதுகாப்பு, பாதுகாப்பு விவகாரங்கள் மற்றும் ஆயுதப்படைகள் தொடர்பான விஷயங்களில் பிரதமரின் முதன்மை ராணுவ ஆலோசகராகவும் செயல்படுவார்.

27வது திருத்தத்தின் மூலம் ராணுவ தளபதிக்கு என்ற கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதாவது முன்பு வரை பாகிஸ்தானில் ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படைக்கு அதிகாரம் பிரிந்து இருக்கும். ஆனால், அவை அனைத்தையும் ஒருங்கிணைக்கும் வகையில் அதிகாரம் முனீருக்கு கிடைத்துள்ளது. இதன் மூலம் அவர் பாகிஸ்தானின் முதல் முப்படை தலைமை தளபதியாக மாறியிருக்கிறார்.

பதவிக்காலம் நீடிப்பு

மேலும், இந்த அரசியலமைப்பு மாற்றம் அவரது பதவிக்காலத்தையும் நீட்டித்தது. முனீர் ராணுவத் தளபதியாக 2027ல் ஓய்வு பெற வேண்டிய நிலையில் இருந்தார். ஆனால் இப்போது அவருக்கு புதிய பதவி தரப்பட்டுள்ளதால் அவரது பதவிக்காலம் குறைந்தபட்சம் 2030 நவம்பர் வரை நீடிக்கும். அதேபோல பாகிஸ்தான் அணு ஆயுத அமைப்பிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதிய ராணுவ கட்டமைப்புக்கு ஏற்ப அது மாற்றப்பட்டுள்ளது.

இந்த சட்டங்கள் நாடாளுமன்றத்தில் அவசர அவசரமாக நிறைவேற்றப்பட்டதும் விமர்சனத்துக்கு உள்ளானது. பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் இரண்டு மசோதாக்களையும் தாக்கல் செய்தபோது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். ஆனால், அதை பற்றி எல்லாம் கண்டுகொள்ளாமல் இந்த சட்டத்தை நிறைவேற்றிவிட்டனர்.

மாறுபட்டது ஏன்?

பாகிஸ்தானில் பல முறை ராணுவம் நேரடியாக ஆட்சியை கைப்பற்றிய இருக்கிறது. அங்கு இதுவரை நான்கு முறை ராணுவ ஆட்சிக்கவிழ்ப்புகள் நடந்துள்ளது. ஆனால் இப்போது நடக்கும் மாற்றம் வேறுபட்டதாக பார்க்கப்படுகிறது. அதாவது மக்களாட்சியை காலி செய்துவிட்டு ராணுவம் வரவில்லை. மாறாக மக்களாட்சியில் இருந்தபடியே அரசியலமைப்பு மற்றும் நாடாளுமன்ற சட்டங்கள் மூலமாகவே ராணுவத்திற்கு அதிகாரம் மெல்ல மாற்றப்படுகிறது.

அங்கு கடந்த நவம்பரில் நிறைவேற்றப்பட்ட 27வது திருத்தத்தை விமர்சித்தவர்கள் அதை “constitutional coup” என்றே குறிப்பிட்டனர். மேலும், உயர்மட்ட ராணுவ தலைவர்களுக்கு வாழ்நாள் முழுக்க குற்றவியல் வழக்குகளில் இருந்து பாதுகாப்பு வழங்கப்பட்டதும் விமர்சனத்திற்குள்ளானது.

அங்கு நடக்கும் எல்லா விஷயங்களுமே முனீருக்கு அதிகாரத்தை அதிகரிக்கவே செய்யப்படுகிறது. இதனால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தொடர்ந்து செயல்பட்டாலும், நாட்டின் அதிகார மையமாக அந்நாட்டு ராணுவமும் அதன் தலைவர் முனீரும் உருவாகி வருகிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *