வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்
“தாத்தா, எனக்கு இன்னைக்கு ஆஃபீஸ் லீவு. நியூஸ் பேப்பர் படிக்கவா? நாளைக்கெல்லாம் ரேடியோ-ல கேட்டுக்கோங்க நா ஆஃபீஸ் போறப்போ…”. கண்ணில் சொட்டு மருந்து ஊத்திக்கொண்டே கேட்டாள் இன்பா. சென்ற வாரம் கேட்டரேக்ட் சிகிச்சை செய்து கொண்டருந்தார் தாத்தா.
“சரி இன்பா”, என்ற தாத்தாவிற்கு அவரது மர நாற்காலியை பால்கனியில் கொண்டு போய் போட்டாள்.
சிகிச்சைக்குப் பின் கருணாநிதி போல் இருந்தார் தாத்தா…கருப்புக் கண்ணாடியோடு.
“மெதுவா, பாத்து வாங்க”, கையைப் பிடித்து வந்து பால்கனியில், அவரின் ஆஸ்தான நாற்காலியில் அமரச் செய்தாள்.
ஒரு வாரத்திற்குப் பின் அறையை விட்டு வெளியே வந்த தாத்தாவை, இரண்டாவது மாடியில் இருக்கும் அவர்கள் வீட்டு பால்கனியில், காற்று வருடி வரவேற்றது.
ஒரு குட்டி மோடாவில் இன்பாவும் அமர்ந்து காற்றில் பறக்காமல் இறுகப்பிடித்து இந்து நாளிதழ் செய்திகளைப் வாசிக்களானாள்.
“நீ பேசாம டி. வி. ல இங்கிலீஷ் நியூஸ் வாசிக்கலாம். அவ்ளோ அருமையா கேட்டுக்கிட்டே இருக்கணும் போல இருக்கு…”, என்று ரசித்துச் சொன்னார் தாத்தா. தொடர்ந்து செய்திகளை அசைபோட்டுக் கொண்டே அவ்வப்போது அரசியல் நிலவரத்திற்கான தன் சொந்த கருத்துக்களை இன்பாவுடன் பகிர்ந்து கொண்டார். தன் அறிவை அடுத்த தலைமுறைக்கு இயன்ற வரை கடத்திக்கொண்டே இருப்பது அவர் வழக்கம்.

படிப்பை சிதம்பரத்தில் பெற்றோருடனிருந்து முடித்து விட்டு, சென்னையில் வேலைக்கு சேர்ந்திருந்தாள் இன்பா. பாட்டி தவறி இரண்டு மாதங்கள்தான் இருக்கும். இப்போது இந்த மயிலாப்பூர் வீட்டில் தாத்தாவும் அவளும் தான்.
காலை மணி 6. “கண்ணாளனே… எனது கண்ணை நேற்றோடு காணவில்லை…”. சன் ம்யூசிக் சேனல். இது தான் இன்பாவின் திருப்பள்ளியெழுச்சிப் பாடல்!
கமகம காஃபி மனம் தூங்க விடாமல் எழுப்பியது. “தாத்தா, நா வந்து போடுவேன்ல…கண்ல புக படக்கூடாதுன்னு டாக்டர் சொல்லியிருக்கார்ல…”, என்று கோபித்துக் கொண்டே எழுந்தாள் இன்பா.
“உந்தன் கண் ஜாடை விழுந்ததில் நெஞ்சம் நெஞ்சம்…”, பாடலைப் பார்த்து ரசித்த வண்ணம் சொன்னாள்…”தாத்தா, நா எப்போ ஒரு ரொம்ப அழகான விஷயத்தப் பாத்தாலும்…கண்ணு தெரியாதவங்க இத பாக்க முடியாதுல்ல… ச்ச…என்ன கொடும! கடவுள், எனக்கு குடுத்த கண்ண எல்லாருக்கும் குடுத்ருக்கலாமே…கண்ணு இல்லாம இருக்குறது எவ்ளோ பெரிய கஷ்டம்னு தோணிட்டே இருக்கு தாத்தா. அந்த மொமென்ட் மனசு கனத்துருது…”, என்றவளின் குரல் தழுதழுத்தது.
குறும் புன்னகையை அவளிடம் வீசிவிட்டு… “சுக்கிரனுக்கு இன்னைக்கு ஸ்பெஷல் பூஜையாம். வெள்ளீஸ்வரர் கோயிலுக்குப் போய்ட்டு வர்றேன்”, என்று கிளம்பினார் தாத்தா.
அடுத்த சில மாதங்களில் இன்பாவிற்குத் திருமணம் நடந்தது. இனி தாத்தா தனியாக இருக்க வேண்டாமே என்று, தன் நான்கு மகன்கள் வீட்டிலும் டைம் டேபிள் போட்டு வலம் வந்து கொண்டிருந்தார்.
இன்பா திருமணத்திற்குப் பிறகு சென்னையிலேயே குடியேறி, 2 வயதில் ஒரு மகன்.
காலங்கள் உருண்டோடின. இன்பா தன் வேலையை விட வேண்டிய குடும்ப சூழல். மகன் கொஞ்சம் பெருசானதும், இன்பா பார்வையற்றோருக்கு உதவியாக பரீட்சை எழுதும் ஸ்கிரைப் வேலையை, தன்னால் இயன்ற ஒரு சிறு சேவையாய் பலமுறை விரும்பி செய்து மகிழ்ந்தாள். வீட்டு வேலைகளை முடித்து விட்டு, பஸ்ஸோ, ஷேர் ஆட்டோவோ ஏறிச் சென்று, தன்னால் இயன்ற வரை
அவர்களுக்கு உதவுவாள். அவர்களுடன் அவசியம் சற்று நேரம் ஆறுதலாகவும், ஊக்கமளிக்கும் வகையிலும் பேசுவாள். நிறைந்த மனதுடன் வீடு திரும்புவாள்.
சில இடங்களில், பார்வையற்ற அம்மாணவர்கள், அவர்கள் விரும்பும் ஸ்கிரைபை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு அளிக்கப்படும். அப்படி அடிக்கடி இன்பாவை தேர்ந்தெடுப்பாள் சூர்யா.
மீனாட்சி கல்லூரியில் இளநிலை பட்டம் படிப்பவள். பிறந்து சில வருடங்களில் கண் பார்வை இழந்தவள்.
சூர்யா நல்ல புத்திசாலி. தனக்குள்ள குறையைப் பற்றிய வேதனை இருந்தாலும், எதையாவது சாதித்துவிட வேண்டும் என்ற வெறியுடன் இருப்பாள்.
“என்ன சூர்யா 99%-ஆ இந்த வாட்டியும்? ஒன்னுமே படிக்கலம்ப. ஆனா, பஃஸ்ட் மார்க் வாங்கிடுவ!”, என்று பார்வையிருந்த பல மாணவிகள் சூர்யாவிடம் சொல்வதைக் கேட்டு வியந்தும் மகிழ்ந்தும் இருக்கிறாள் இன்பா.
ஒருநாள் இரவு எட்டு மணி. “இன்பா…ப்ளீஸ் அழாம கேளு…”, பயமும் சோகமும் கலந்த தொணியில் அம்மா.
“சொல்லும்மா…”
“தாத்தா இப்போ கோயில்ல அன்னாபிஷேகம் பாத்துட்ட பஸ்ல மாமா வீட்டுக்கு வர்ற வழில…”.
“என்னம்மா ஆச்சு?”, பதறினாள் இன்பா.
“பாட்டி கிட்ட போய்ட்டாங்க டீ…”, என்று அழுதாள் அம்மா.
மறுமுனையில் அமைதி. “இன்பா…இன்பா..”, என்று அவள் இரண்டாம் முறை அழைத்த போதே லையன் கட் ஆகிவிட்டிருந்தது!
10 நிமிடம் உறைந்து போனவள், பின் கறைந்து கதறினாள். மாமா வீட்டிற்கு விரைந்து, தாத்தாவைப் பார்த்த நொடி “ஓஓஓ” வென்று அழுது தீர்த்தாள்!
இயற்கை மரணத்தை உறுதி செய்த ஆஸ்பத்திரியிலிருந்து இருவர் வந்து மாமாவுடன் பேசிக் கொண்டிருந்தனர்.
இன்பா தாத்தாவை விட்டு விலகவே இல்லை. அவளால் அந்தப் பெரும் இழப்பை ஜீரணிக்க முடியவில்லை. தாத்தாவை இடுகாட்டிற்குத் தூக்கிச் செல்லும் நொடி வரை அவள் அவர் அருகிலேயே இருந்தாள், அவருடனான அன்பு நாட்களை அசைபோட்டபடி.

பின்னர் தொடர்ந்து ஸ்கிரைபாக இருந்து வந்தாள். பார்வையற்ற சூர்யாவின் பார்வை எப்போதும் உயர்ந்ததாகவே இருக்கும். சூர்யாவின் அப்படிப்பட்ட வாட்ஸ் ஆப் ஸ்டேடஸை இன்பா எப்போதும் ரசிப்பாள். ‘டெக்ஸ்ட் டு ஸ்பீச்’ கூகுள் சாதனை பார்வையற்றோருக்குப் பெரிதும் உபயோகம். அதை அற்புதமாய் ப்ரயோகித்து ஸ்டேடஸ் போடுவாள் சூர்யா. “நீ உன்னைப் போன்ற பலருக்கும் முன்னோடி சூர்யா!”, என்று மனதார வாய்ஸ் நோட் அனுப்பி பாராட்டுவாள் இன்பா.
இரண்டொரு வாரமாக சூர்யா ஸ்டேடஸ் எதுவும் வைக்கவே இல்லை. இன்பாவின் ஒலிப்பதிவிற்கும் பதிளில்லை. இன்பாவும் மகனின் பரீட்சையில் பிசியாகி விட்டாள்.
பரீட்சை முடிந்ததும் மகனுடன் பீச்சுற்கு சென்றிருந்தாள் இன்பா.
“பயப்படாத மா. ஒண்ணும் ஆகாது. இன்னும் கொஞ்சம் முன்னாடி போலாம்”, என்று அம்மாவின் கையைப் பிடித்து இழுத்தான் அப்பு. அலை வந்த வேகத்தில், பதறியடித்துக்கொண்டு கரையை நோக்கி ஓடிய அம்மாவைப் பார்த்து கை கொட்டி சிரித்தான்!
இந்த விநோதமான அம்மா-மகனை சற்று தூரத்திலிருந்து ரசித்துக் கொண்டிருந்தது ஒரு புதுமண ஜோடி!
“அம்மா, எனக்கு சோளக்கருது வேணும்”, என்றான் அப்பு.
“சரி, நீ பேக்-அ பாத்துக்கோ. நா வாங்கிட்டு வர்றேன். யார் கூப்டாலும் போக கூடாது. ஓ. கே. வா?”
“ஓ. கே. நா பாத்துக்குறேன். மசாலா, லெமன் எக்ஸ்ட்ரா போட்டு…”
சோளம் சுடும் கடையில், பௌர்ணமி இரவில், இளஞ்சிவப்பாய், காற்றில் மெல்ல அசைந்து நடனமாடிய தீப்பொறியை ரசித்துக் கொண்டே, “அக்கா, மாசாலா தூக்கலா ஒண்ணு. எவ்ளோ க்கா?”
“எனக்கு லெமன் போடாம ரெண்டு”, என்றாள் பின்புறம் நின்ற அந்தப் புதுப்பெண். இந்தக் குரலை எங்கோ கேட்டது போல் இருந்தது இன்பாவிற்கு. திரும்பியவளுக்கு ஆச்சர்யம். “ஹே! சூர்யா…”, என்றதும் அந்தப் புது பெண்ணிற்கு ஒன்றும் விளங்கவில்லை! இந்த அம்மா எப்டி நம்ம பேர கரெக்டா சொல்றாங்க?!”
“எப்டி இருக்க? இப்போல்லாம் வாட்ஸ் ஆப் ஸ்டேடஸே போட்றதில்ல!”, என்று முடிக்கும் முன் இருவரும் சுதாரித்தனர்.
“இன்பா அக்கா தானே நீங்க?”, என்று குரலை அடையாளம் கண்ட சூர்யாவும், “உனக்கு எப்டி பார்வ…?”, என்று இன்பாவும்… இருவரின் முகத்திலும் குழப்பம்!!
பத்து விநாடி அமைதிக்குப் பின்… சூர்யா, “அக்கா, எனக்கு போன மாசம் கண்ணு சர்ஜரி நடந்துச்சு. கண் தானமாக் கெடச்சுது. நீங்க சொல்லிட்டே, வாழ்த்திட்டே இருப்பீங்க. அதே மாதிரி கண்ணு கிடச்சிருச்சுக்கா. அதான் ஃபோன்லாம் அப்போ பாக்க முடில. நீங்க எப்டிக்கா இருக்கீங்க? உங்க பையனா? நானும் என் வீட்டுக்காரரும் உங்க ரெண்டு பேரையும் தான் பாத்து ரசிச்சுட்டு இருந்தோம்”.

மகிழ்ச்சியில் வாயடைத்துப்போன இன்பாவிற்கு அடுத்த சந்தேகம்.
“இந்தாம்மா பிடி. மசாலா, லெமன் போட்டது”, என்று கடைக்கார பெண் கொடுக்க, “அக்கா நா பே பண்றேன். நீங்க போய் பையன்ட்ட குடுங்க. நா வாங்கிட்டு வர்றேன்”, என்றாள் சூர்யா.
“ம்ம்…”, என்று சென்று அப்புவிடம் கொடுத்தாள். “டேய் அப்பு, நா அடிக்கடி சொல்லுவேன்ல சூர்யா ன்னு”.
“யாரும்மா?”
அதற்குள் அங்கு வந்த சூர்யா, “அக்கா, இது என் ஹஸ்பண்ட். லவ் மேரேஜ் கா. எனக்கு கண்ணு கிடைக்கிறதுக்கு முன்னாடில இருந்தே நாலு வருஷமா லவ் பண்றோம்.” இருட்டில் அவர் முகம் சரியாகத் தெரியவில்லை இன்பாவிற்கு.
“கல்யாணம் ரொம்ப சிம்பிளா கோயில்ல வச்சதால உங்கள எல்லாம் கூப்ட முடில…எங்கள ஆசீர்வாதம் பண்ணுங்கக்கா”, என்று சொல்லிக்கொண்டே கணவரின் கையை மெல்லப் பிடித்து இன்பாவின் காலருகே கொண்டு சென்றாள் சூர்யா.
தூக்கிவாரிப் போட்டது இன்பாவிற்கு! அவர் பார்வையற்றவர் என்று உணர்ந்ததும், காலைத் தொட வந்தவரை கையால் தடுத்து ஆசீர்வதித்தாள் இன்பா.
அடுத்த ஒரு வாரத்தில் சூர்யா பழையபடி வாட்ஸ் ஆப் ஸ்டேடஸ் வைக்கத் துவங்கினாள். காத்திருந்த இன்பா, பெரும் ஆர்வத்துடன் அதை ஓபன் செய்தாள்.
“எனக்கு கண் தானம் செய்தவர்”, என்று டைப் செய்து வலது பக்க அம்புக்குறி போட்டிருந்தது முதல் பேஜில்.
“அம்மா, தோச ஊத்துறியா? சாப்டு ஹோம் வர்க் எழுதணும்”, என்றான் அப்பு. “இருடா ஒரு நிமிஷம்”, என்று ஃபோன் திரையை க்ளிக் செய்தாள், அடுத்த பக்கத்தைப் பார்க்க. “லோடிங்…”, என்று சுத்திக் கொண்டே இருந்தது.
“நா தா சொன்னேல்ல. நெட் ஸ்லோவா இருக்கு. தோசைய ஊத்தும்மா…”
கிச்சனுக்கு சென்று முதல் தோசையை ஊற்றிவிட்டு, மொபைல் டேட்டாவை விரைவாக ஆன் செய்தாள். சில விநாடிகளில் சுற்றுவது நின்று, படம் தெரிந்தது.
திகைப்பின் உச்சத்தில் இன்பா!!! சில நிமிடங்களுக்கு கை கால் ஓடவில்லை. படத்திற்கு கீழ் சூர்யா டைப் செய்திருந்தாள்…”என் வாழ்விற்கு ஒளி தந்த வள்ளல் மாணிக்கம் ஐயாவிற்கு நன்றி”.
உறைந்து போனாள் இன்பா. அடுத்த விநாடி தன் மாமாவிற்கு போன் செய்தாள்.
“ஆமாம்மா, தாத்தா கண் தானத்துக்கு எழுதி வச்சிருந்தாங்க. இறந்த அன்னிக்கு ஆஸ்பத்திரல இருந்து நன்றி சொல்ல வந்தாங்களே…நீ எங்க…அழுதுட்டேல இருந்த..!”
இனி சூர்யாவிற்கு ஸ்கிரைப் தேவைப்படவில்லை. இருந்தும் இன்பா, அவளை அடிக்கடி சந்தித்தாள்.
யாரின் ‘கண் பார்வை’யில் வாழ்ந்திட நினைத்தாலோ…அது நிறைவேறியது!
ஏனெனில், சூர்யா பார்ப்பதற்கும்… இன்பா பார்க்கப்படுவதற்கும்…காரணம்…
அந்தக் கண்ணாளனே..!
– அலமேலு இராமநாதன்,
கெருகம்பாக்கம்,
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.