கந்த சஷ்டி விரதம் : சிக்கலில் வேல்வாங்கி செந்தூரில் சம்ஹாரம்… ‘திருச்செந்தூரின் கடலோரத்தில் – 7’ | glory of kanda sasti viratham

Spread the love

முருகப்பெருமானுக்கு சக்திதரன் என்கிற திருநாமம் உண்டு. அக்னியால் அந்தக் கந்தனை உண்டாக்கியவன் ஆதி சிவன் என்றால் அவருக்கு வேலாகத் தன் சக்தியைக்கொடுத்து அசுர சம்ஹாரமூர்த்தி ஆக்கியவள் ஆதி சக்தி.

சூரசம்ஹாரத்துக்கு முன் பார்வதி முருகப்பெருமானும் வேல் கொடுத்து அருளினார். அந்த வேல்கொண்டே முருகனும் சூரனை வதம் செய்தார்.

உண்மையில் சூரபத்மனை முருகப்பெருமான் வதமா செய்தார்… இல்லையே தடுத்தாட்கொண்டு அல்லவா அருளினார். இருகூறாகப் பிளந்து சேவலும் மயிலுமாக்கித் தன்னோடே சேர்ந்துக்கொண்டார். இதைவிட பாக்கியம் யாருக்குக் கிடைக்கும். இதற்குக் காரணம் அன்னையே. அது எப்படி என்கிறீர்களா…

அன்னை சகல உயிர்களின் தாய்… யமன் தன் கடமையைச் செய்யவந்தான். மார்க்கண்டேயனுக்கு 16 வயதுதான் ஆயுள். அவன் அபயம் வேண்டி ஈசனிடம் தஞ்சம்புகுந்தான். திருக்கடவூர் திருத்தலத்தில் லிங்கரூபமாக விளங்கிய ஈசனைக் கட்டிக்கொண்டான்.

அப்போது அங்குவந்த யமன் கடமை உணர்வில் தன் பாசக்கயிற்றை வீச அது லிங்கத்தையும் சேர்த்துப் பிணைத்தது. ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்சோதியான தன்னையே காலபாசத்தால் கட்டமுனைந்த தண்டிக்க ஈசன் காலசம்ஹார மூர்த்தியாக எழுந்தருளினார். யமன் நடுங்கினான்.

 திருச்செந்தூர் கந்த சஷ்டித் திருவிழா - சூரசம்ஹாரம்

திருச்செந்தூர் கந்த சஷ்டித் திருவிழா – சூரசம்ஹாரம்

ஒரு குடும்பத்தில் அப்பாவின் தண்டனை கடுமையானதாக இருக்கும். அம்மா குழந்தைகளைக் காப்பாற்ற முயல்வாள். தந்தையின் கோபம் பிள்ளைகளைத் தாக்கும் முன் தான் கோபப்படுபவள்போல் நடித்து அந்தக் குழந்தையைக் காத்தருள்வாள். அப்படித்தான் திருக்கடவூரில் ஈசனின் தாக்குதலால் காலன் சம்ஹாரம் செய்யப்பட்டுவிட்டால் பின் யார் இந்த உலகில் அந்தப்பணியைச் செய்வது? ஈசனின் இடபாகத்தில் அமர்ந்திருப்பவள் அம்பிகை. ஈசன் காலன் மீது கோபம் கொள்ள நினைப்பதற்கு முன்பாகத் தனக்குரியதான இடபாகத்தால் யமனை எட்டி உதைத்தாள் அம்பிகை.

வலதுகாலால் ஈசன் யமனைத் தாக்கியிருந்தால் என்ன வாகியிருக்கும்… நடமாடும் பெருமானின் திருவடிகளில் அகப்பட்ட முயலகன் அவர் திருவடியிலேயே இருக்கும் பேறு பெற்றாலும் மீண்டெழ இயவில்லை அல்லவா… அசுர சக்திகளுக்கு அது சக்தி. ஆனால் அன்றாடம் ஈசனையும் அம்பிகையையும் வழிபடும் யமனுக்கு அது சரியாக வருமா… மேலும் அவன் கால தேவன் அல்லவா… அவன் தன் கடமையைச் சரியாகச் எய்யவில்லை என்றால் மூவுலகும் சமனநிலையோடு வாழ்வது எப்படி? அதனால்தான் அம்பிகை இடபாகம் கொண்டு ஈசன் யமனை உதைக்கச் செய்தாள். அந்த நேரத்தில் தண்டனையை அடைந்தாலும் தன் தவற்றை உணர்ந்த யமனுக்கு மீண்டும் வாழ்வை அருளினார் ஈசன்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *