அறுபடைவீடுகளில் திருத்தணிகை தவிர்த்த அனைத்து முருகன் ஆலயங்களிலும் சூரசம்ஹாரம் நடைபெறும். அவற்றுள் திருச்செந்தூரின் மகிமை அபரிமிதமானது. காரணம், அங்குதான் சூரனோடு முருகன் போர்புரிந்தார் என்பது புராண நம்பிக்கை. திருச்செந்தூருக்குக் கந்தமாதன பர்வதம் என்றும் பெயர் உண்டு. திருச்செந்தூர் தலபுராணம் சொல்லும் செய்தி ஒன்று முக்கியமானது. முருகப்பெருமான் யுத்தம் செய்த தலம் என்பதால் மட்டும் திருச்செந்தூர் முக்கியமான தலம் என்று அது சொல்லவில்லை. பூலோகத்தில் தான் கோயில்கொண்டு எழுந்தருள வேண்டும் என்று தீர்மானித்தபோது திருச்செந்தூரிலேயே தான் குடிகொள்ளப்போவதாக முருகப்பெருமானோ விரும்பிக் கோயில் அமைக்க சொன்னதாகச் சொல்கிறது தலபுராணம். இந்த மகிமை வேறு எந்தக் கோயிலுக்கும் கிடையாது. அதனால்தான் வாழ்வில் ஒருமுறையேனும் திருச்செந்தூர் வந்து வழிபட வேண்டும் என்கிறார்கள் பெரியோர்கள்.
கலியுகம் தொடங்கப்போகிறது. கலியுகத்தில் நல்லவர்கள் வாழ்வது நல்லவர்களாக வாழ்வது கடினம் என்று சாஸ்திரங்கள் சொல்லின. இதனால் கவலையுற்ற ரிஷிகள் வியாசரை சந்தித்துத் தம் மனக் கவலைகளைச் சொன்னார்கள். அப்போது வியாசர், ‘கலியுகத்தின் துன்பங்களை எல்லாம் அறுத்து எறியும் சக்தி கந்தனின் மகிமைகளுக்கு உண்டு’ என்றார். கலியுகத்துக்கான கடவுள் கந்தன் என்பது அவர் கருத்து. ஸ்காந்தபுராணம் என மாபெரும் புராணம் இயற்றிக் கந்தனின் மகிமையைப் பாடியவர் அல்லவா அந்த மகான்…

அது எவ்வளவு சத்தியம் என்பது கந்தனின் திருத்தலங்களை தரிசித்தவர்களுக்கு நன்கு தெரியும். அதிலும் திருச்செந்தூர் முருகன் ஓடிவந்து காப்பவன். திருச்செந்தூரில் தரும் விபூதி (பன்னீர் இலை விபூதி என்றால் மிகவும் விசேஷம்) நோய்களை நீக்கக் கூடியது. இதை இப்போதல்ல… ஆதிசங்கரர் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சொல்லிவிட்டார்.
ஆதிசங்கரர் பாரத தேசம் முழுமையும் நடந்து ஆன்மிக சீர்திருத்தம் செய்து ஷண்மத ஸ்பாதனங்களைச் செய்தவர். சங்கரரை வாதில் வெல்ல முடியாதவர்கள் சூதில் வெல்லலாம் என்று முடிவு செய்தனர். மந்திரங்கள் மூலம் அபிசாரப் பிரயோகங்கள் செய்து அவருக்கு வயிற்று வலி ஏற்படுத்தினர். தட்சிணாமூர்த்தியின் வடிவம் அல்லவா அவர்… அவர் நினைத்திருந்தால் ஒரு நொடியில் அதை உடைத்து குணம் பெற்றிருக்கலாம். ஆனால் அவர் அதை ஏற்றார். ஏன் தெரியுமா… நமக்கெல்லாம் வழிகாட்ட. தீராத நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என்ன செய்யவேண்டும் என்பதை செய்துகாட்ட.
திருச்செந்தூர் வந்தார். அங்கிருந்த முருகப்பெருமானை தரிசித்தார். அவரின் அருட்பிரசாதமான விபூதியை வாங்கிப் பூசிக்கொண்டார். அடுத்த கணம் அவர் நோய் நீங்கியது. ஆதி சங்கரர் இப்படிப்பாடுகிறார்.
அபஸ்மார குஷ்டக்ஷ்யார்ச ப்ரமேஹ
ஜ்வரோந்மாத குல்மாதிரோகா மஹாந் தஹ
பிசாசஸ்ச சர்வே பவத் பத்ரபூதிம்
விலோக்ய க்ஷணாத் தாரகாரே த்ரவந்தே
இதன் கருத்து பின்வருமாறு.
‘தாரகாசுரனை வதம் செய்தவனே! வலிப்பு, காசம், குஷ்டம், சுரம், மேகவெட்டை, குடல்புண், புற்றுநோய், பிசாசு மற்றும் மனப்பயம் எனும் நோய்களனைத்தும் பன்னீர் இலையில் வைத்துத் தரப்படும் உன் திருநீற்றைப் பார்த்த மாத்திரத்தில் பறந்தோடி மறைந்துவிடும்.’
திருநீற்றைப் பூசிக்கொண்டால் அல்ல பார்த்தாலே சகல நோய்களும் நீங்கிவிடும் என்று பாடுகிறார். இதைவிட திருச்செந்தூர் விபூதியின் மகிமையை என்ன வென்று சொல்வது? அடுத்து, திருச்செந்தூர் விபூதியை அவர் பத்ரபூதி என்பதை கவனிக்க வேண்டும். பத்ரம் என்றால் இலை.பூதி என்றால் விபூதி.

பன்னீர் இலைகளில் வைத்துத் தரப்படும் விபூதியே அது. இது அந்தத் தலத்தின் சிறப்பு. திருச்செந்தூர் வேதத்தின் சாரமான விசாகன் குடிகொண்ட தலம் என்பதால் வேதங்களும் அங்கேயே வாசம் செய்ய விரும்பினவாம். அவையே பன்னீர் மரங்களாகி அங்கே நிலைத்தன என்கிறது தலவரலாறு.
பன்னீர் இலை விபூதியின் மகிமையை வாரியார் சுவாமி சொல்லும்போது, ‘பன்னீர் இலையில் 12 நரம்புகள் ஓடும். அது அந்த முருகப்பெருமானின் 12 திருக்கரங்களைக் குறிக்கும். முருகப்பெருமானே தன் பன்னிரு கரங்களால் விபூதியை பக்தர்களுக்கு வழங்குவதாக ஐதிகம்’ என்பார்.
இத்தனை சுவையான கருத்தை வாரியார் சுவாமியைத் தவிர வேறு யார் சொல்ல முடியும்?
திருச்செந்தூரில் அந்த ஜயந்தி நாதர் நிகழ்த்திய அற்புதங்கள் ஒன்றல்ல இரண்டல்ல… புராண காலத்தில் அல்ல… வரலாற்றுக்காலத்திலும் அவர் மகிமை சொல்லும் சம்பவங்கள் அநேகம் உண்டு.
பதினேழாம் நூற்றாண்டின் நடுப்பகுதி. மதுரை, நாயக்க மன்னர்கள் ஆட்சிக்கு உட்பட்ட காலம். அப்போது டச்சுக்கார வியாபாரிகள் திருச்செந்தூர் கோயிலில் புகுந்தார்கள். அங்கிருந்த பஞ்சலோகங்களால் செய்யப்பட்ட முருகனின் விக்கிரகத்தைப் பார்த்தார்கள். இந்த விக்கிரகத்தை ‘ஆறுமுக நயினார்’ என்பர்.
ஒளி விட்டுப் பிரகாசித்த அதை, தங்கம் என எண்ணிக் கொள்ளை அடித்துச் சென்றார்கள். பலம் வாய்ந்த கடற்படை இல்லாததால் நாயக்க மன்னர்களால் ஏதும் செய்ய முடிய வில்லை. பக்தர்களோ துயரத்தில் தவித்தார்கள்.
கடலில் டச்சுக்காரர்களின் கப்பல் பயணித்தது. சற்று தூரம் போவதற்குள்ளாக ஆறுமுகநயினார் ஆவேசத்தைக் காட்டத் தொடங்கினார்.
கடல் கொந்தளித்தது; கப்பல் தத்தளித்தது. ‘வைக்கக் கூடாத இடத்தில் கை வைத்து விட்டோம்!’ என்று பயந்த டச்சுக்காரர்கள், ஆறுமுக நயினார் விக்கிரகத்தை எடுத்துக் கடலில் எறிந்தார் கள். கடல் அடங்கி அமைதியானது. கப்பல் பிழைத்தது.
இந்த அற்புத நிகழ்ச்சி கி.பி. 1648-ல் நடந்தது. இதைச் சொன்னவர் ஒரு டச்சுக்கார மாலுமியே. எம்.ரென்னல் என்ற பிரெஞ்சு ஆசிரியர் எழுதி, ஜெர்மனியில் உள்ள பெர்லின் நகரில் இருந்து 1785-ல் வெளியான ‘சரித்திர இந்தியா’ என்ற நூலில் இந்தத் தகவல் உள்ளது.

ஐந்து ஆண்டுகள் ஆயின. திருச்செந்தூர் கோயிலில் ஆறுமுக நயினார் விக்கிரகம் இல்லாதது, திருமலை நாயக்கரின் காரியஸ்தரான வடமலையப்ப பிள்ளைக்கு வருத்தம் அளித்தது. அவர் வேறு விக்கிரகம் செய்ய முயன்றார்.
அவரது கனவில் ஆறுமுகக் கடவுள் தோன்றினார். ‘அன்பனே! நான் கடலுக்குள் இருக்கிறேன். நீ கடலில் சிறிது தூரம் பயணித்தால், ஓர் இடத்தில் எலுமிச்சம் பழம் மிதக்கும். அதற்கு மேலே ஆகாயத்தில் ஒரு கருடன் வட்டம் இடும். அந்த இடத்தில் நீ தண்ணீரில் இறங்கு! நான் கடலின் அடியில் இருந்து எழுந்து மேலெழும்பி உன் கையில் அகப்படுவேன்!’ என்றார்.
கனவு கலைந்தது. ஆறுமுகக் கடவுள் ஆணை யிட்டபடியே, வட மலையப்பபிள்ளை, சிலருடன் படகில் போய்க் குறிப்பிட்ட இடத் தில் கடலில் மூழ்கினார். வியக்கும்படியாக முதலில் ஒரு நடராஜ விக்கிரகம் கிடைத்தது. அதன்பிறகே ஆறுமுக நயினாரின் விக்கிரகம் அகப்பட்டது. ஆறுமுக நயினாரின் அந்த அருள் வடிவம் 1653-ம் ஆண்டில், மறுபடியும் கோயிலில் சேர்க்கப்பட்டதாக கல்வெட்டுகள் கூறுகின்றன.
இப்படி அவர் திருக்கருணையை விளக்கும் தகவல்கள் ஏராளம்… ஏராளம். வாருங்கள் தொடர்ந்து அவற்றை தரிசிப்போம்.