வாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட கட்டத்தை அடைந்தவுடன், “எனக்கு வயசாகிடுச்சு, இனிமேல் புதிதாக என்ன சாதிக்கப் போகிறேன்?” என்ற எண்ணம் நம்மில் பலருக்கும் தோன்றுவதுண்டு. ஆனால், உடலுக்குத் தான் வயதாகிறதே தவிர, உள்ளத்திலிருக்கும் தேடலுக்கும், உத்வேகத்திற்கும் ஒருபோதும் வயதாவதில்லை என்பதை நினைவூட்டும் அற்புதமான பொன்மொழியைக் கூறுகிறார் பிரபல எழுத்தாளர் சி.எஸ். லூயிஸ்.
(You are never too old to set another goal or to dream a new dream)
“புதிய இலக்கை நிர்ணயிக்கவோ அல்லது புதிய கனவு காணவோ உங்களுக்கு ஒருபோதும் வயதாகிவிடவில்லை.”

இதற்கு ஒரு அழகான நிஜ வாழ்க்கை போன்ற கதையை ஒப்பிட்டுப் பார்க்கலாம். 75 வயதான கமலா பாட்டி, தன் பேரப்பிள்ளைகள் விளையாடுவதைப் பார்த்துக்கொண்டே அமர்ந்திருப்பார்.
அவருக்கு சிறு வயதிலிருந்தே பள்ளிக்கூடம் சென்று படிக்க வேண்டும், தன் பெயரைத் தானே கையெழுத்திட வேண்டும் என்ற ஆசை. ஆனால் இளமைக் காலத்தில் வறுமை, பிறகு குடும்பப் பொறுப்புகள் என வாழ்க்கை அவரை வேறு திசையில் இழுத்துச் சென்றுவிட்டது.
பேரப்பிள்ளைகள் கல்லூரி செல்லும் வயதை எட்டியபோது, கமலாவின் உள்ளே உறங்கிக் கொண்டிருந்த அந்த “கல்வி’ கனவு மீண்டும் விழித்துக்கொண்டது. ஊரில் புதிதாகத் தொடங்கப்பட்ட முதியோர் கல்வி மையத்தில் தயங்கித் தயங்கிப் போய் நின்றார்.
“இந்தத் தள்ளாடுற வயசுல இதெல்லாம் தேவையா?” என்று ஊர்க்காரர்கள் சிலர் சிரித்தார்கள். ஆனால் அவர் அதைச் சட்டை செய்யவில்லை. கண்களில் தடிமனான கண்ணாடி அணிந்து கொண்டு, சிறு குழந்தையைப் போல சிலேட்டில் எழுத்துக்களை எழுதப் பழகினார்.