தாணுமாலயன் கோயிலுக்கு வெளியே அமைந்துள்ளது முன்னுதித்த நங்கை கோயில். இங்கு அன்னை மஹிஷாசுர மர்த்தினியாக இருக்கிறாள். தட்சனின் யாகத்துக்குச் சென்று வந்த தாட்சாயினியை ஈசன் விலக்கி வைத்ததால், தெப்பக்குளத்துக்கு வடக்கே குடியேறினாள். அவளை `முன்னுதித்தவள் நீயே’ என தேவர்கள் வழிபட்டதால் முந்நூற்று நங்கை என்ற பெயர் கொண்டு இவ்வூர் காவல் தேவியாக விளங்கி வருகிறாள்.
இங்கு உள்ள பெருமைமிக்க ஆஞ்சநேயர் சந்நிதி உலகப் புகழ்பெற்றது. சகல நோய்களையும் தோஷங்களையும் நீக்கவல்ல இந்த ஆஞ்சநேயர் சிலை 18 அடி உயரம் கொண்டது.
சுசீந்திரம் ஆலயத்துக்கு மேலக்கோபுர வாயிலுக்கான நிலத்தைத் தோண்டும்போது இந்த அனுமன் சிலை கிடைத்தது. 1929-ம் ஆண்டில் ராமபிரானின் கருவறைக்கு எதிரில் இந்தத் திருமேனி நிறுவப்பட்டது.
விஸ்வரூப ஆஞ்சநேயர் என்று அழைக்கப்படும் இவருக்கு வெற்றிலை மாலை சாத்தி வழிபட்டால் காரிய ஸித்தி கிடைக்கும் என்பர். தலைக்கு மேல் அமைந்துள்ள இவரது வாலுக்கே முதல் விசேஷம் என்கிறார்கள்.
ஆஞ்சநேயருக்கு நல்லெண்ணெய், மஞ்சள், அரிசி மாவு, நெய், இளநீர், பன்னீர், பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம், கரும்புச்சாறு, எலுமிச்சைச் சாறு, விபூதி, குங்குமம், களபம், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான பொருள்களால் அபிஷேகம் செய்து வழிபட்டால் ஒவ்வொரு அபிஷேகத்துக்கும் உண்டான விசேஷ பலன்களைப் பெறுவார்கள் என்கிறது தல வரலாறு.
பல நூறு ஆண்டுகள் பழைமையான இந்த ஆஞ்சநேயர் திருமேனி 1740-ம் ஆண்டு அந்நியர்களின் படையெடுப்பின் போது இக்கோயில் சிலைகளைக் காப்பாற்றும் பொருட்டு மண்ணில் புதைக்கப்பட்டிருந்தது என்றும் அது மீண்டும் சுமார் 200 ஆண்டுகள் கழித்து பிரதிஷ்டை செய்யப்பட்டது என்றும் கூறுகிறார்கள்.
வாய்ப்பிருக்கும் அன்பர்கள் ஒருமுறை சுசீந்திரம் சென்று தாணுமாலயனையும் விஸ்வரூப ஆஞ்சநேயரையும் தரிசனம் செய்துவாருங்கள். வாழ்க்கை வளமாகும் நலமாகும்.