கன்னி மூலையில் கணபதி சந்நிதி, வடமேற்கு மூலையில் பார்வதி தேவி சந்நிதி ஆகியன அமைந்துள்ளன. இங்கு பார்வதி தேவி நின்றகோலத்தில் ஒரு கையில் தாமரையும், மறு கையில் அபய முத்திரையும் காட்டி அருள்கிறாள். வடக்குப்பகுதியில் மேற்கூரை இல்லாத சந்நிதியில் சண்டிகேஸ்வரரும், பக்கத்தில் சிறிய சந்நிதியில் பீடத்தின் வடிவில் சனீஸ்வரர் சந்நிதியும் அமைந்துள்ளன.
கேரள பாணியில் வட்ட வடிவத்தில் கருவறை வடிவமைக்கப்பட்டுள்ளது. கூம்பு வடிவத் தட்டு விமானக் கோபுரம் அற்புதம். இதன் கீழ் அடுக்குப்பகுதி கருங்கல்லாலும், மேலடுக்குப் பகுதி மரத்தாலும் வட்டவடிவில் நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளன.
இரண்டு அடுக்குகளாக தேக்குமரத்தில் கூரை அமைக்கப்பட்டு, அதில் செப்புத்தகடுகள் வேயப்பட்டுள்ளன. இரண்டு அடுக்கிலும் தொங்கு மேற்கூரை அமைக்கப்பட்டு, கருவறையின் மேற்பகுதியில் கலசமும் அமைக்கப்பட்டுள்ளது.

விமானக் கோபுரத்தில் கிழக்குப்பகுதியில் வெள்ளை யானையில் இந்திரனும், தெற்குப் பக்கம் தட்சிணாமூர்த்தியும், மேற்குப்பகுதியில் நரசிம்மரும், வடக்கில் பிரம்மாவும் வீற்றிருக்கின்றனர். இந்த நான்கு திருமேனிகளும் மரத்தாலானவை.
கருவறையில் ஈசன், லிங்கரூபமாகக் காட்சி அருள்கிறார். தரிசனம் செய்யும்போதே மனதில் ஈசனின் அருள் நிறைவதை உணரமுடியும். முகிலனால் வெட்டப்பட்ட தழும்புகளை ஈசனின் திருமேனியில் இன்றும் காணமுடியும். தினமும் காலை 6 மணிக்கு நடைபெறும் நிர்மால்ய தரிசனத்தின்போது பக்தர்கள் அந்தத் தழும்புகளைத் தரிசிக்கலாம்.
`இங்கு சுவாமியின் திருநாமம் பக்தவத் சலேஸ்வரர். அதற்கேற்ப பக்தர்களைத் தன்பால் ஈர்த்து அருள் செய்பவர் இந்த ஈசன். இங்குள்ள 3 கல்வெட்டுகளின் அடிப் படையில் தற்போதுள்ள இந்தக் கோயில் 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனத் தெரிய வந்துள்ளது.
இங்கு ஆகம விதிப்படி தினமும் காலையிலும் மாலையிலும் பூஜைகள் நடக்கின்றன. கார்த்திகை மாதம் அஷ்டமி தினத்தில் 10-ம் திருவிழா நடைபெறும் வகையில் திருக்கொடி ஏற்றப்பட்டு திருவிழா நடைபெறும். ஆடி மாதம் அனைத்து செவ்வாய் கிழமைகளிலும் பார்வதிதேவி சந்நிதியில் சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன. கார்த்திகை 1-ம் தேதி தொடங்கி மண்டலபூஜை வரை ஐயப்பன் சந்நிதியில் சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன.
மகேஸ்வருக்கு நிவேத்தியமாக பால் பாயசம், தேங்காய் சேர்க்கப்பட்ட சர்க்கரைப் பாயசம், வெள்ளை சாதம் ஆகியவை நைவேத்யமாகப் படைக்கப்படுகின்றன. தோல் சம்பந்தப்பட்ட வியாதிகள் நீங்க பக்தர்கள் ஜலதாரை, இளநீர் தாரை, நெய்தாரை செய்து வழிபடுகின்றனர்.
மேலும், வில்வம், துளசி இலைகளை அர்ச்சனை செய்து பிரசாதமாகப் பெற்றுச் செல்கிறார்கள் பக்தர்கள். அந்த இலைகளைத் தண்ணீரில் கொதிக்க வைத்து குடித்தால் தோல் சம்பந்தப்பட்ட நோய் தீருவதாக நம்பப்படுகிறது. திருமணம் கைகூட, திங்கள்கிழமைகளில் இங்கு சுயம்வர பார்வதி அர்ச்சனை செய்து வழிபடுகின்றனர்.
வாய்ப்பிருக்கும் அன்பர்கள் ஒருமுறை இந்த அற்புதமான கோயிலுக்குச் சென்று வாருங்கள். வாழ்க்கை வளமாகும் நலமாகும்.