தென் மாவட்டங்களில் திருமணம் ஆகியும் குழந்தை பாக்கியம் இல்லை என்கிற கவலைப்படுபவர்களிடம் பெரியவர்கள், வெள்ளிமலை பாலமுருகனை தரிசித்துவாருங்கள். அந்த முருகனே உங்களுக்குக் குழந்தையாகப் பிறப்பான் என்பார்கள். அப்படிப்பட்ட அற்புதமான தலம் குறித்து அறிந்துகொள்வோம் வாருங்கள்.

கன்னியாகுமரி மாவட்டமே இயற்கை எழில் கொஞ்சும் பகுதிதான். அதுவும் வெள்ளிமலை மிகவும் அழகான சூழலில் அமைந்திருப்பது. நாகர்கோவிலிலிருந்து மேற்கே சுமார் 17 கி.மீ. தொலைவில் உள்ளது வெள்ளி மலை. கந்தக்கடவுள் பாலமுருகனாய் அருளும் மலைக்கோயில்; வேண்டும் வரமருளும் சுவாமி இவர். கந்தக்கடவுள் இங்கே பாலமுருகனாக அருள்வதால், திருக்கல்யாண வைபவம் நடைபெறுவது இல்லை. அதேவேளையில் இங்குவந்து பிள்ளைவரம் வேண்டிக்கொள்ளும் தம்பதிகளுக்கு விரைவிலேயே குழந்தை பாக்கியமும் சுகப்பிரசவமும் கிடைக்கிறது என்கிறார்கள் பக்தர்கள்.
இந்த மலையில் அதிகமாகக் காணப்படுகிறது காக்கைப் பொன் எனப்படும் `அப்ரகம்’. சூரிய ஒளி பட்டு வெள்ளிபோல் மின்னுவதால் இந்த மலைக்கு வெள்ளிமலை என்று பெயர் வந்ததாகச் சொல்கிறார்கள் பக்தர்கள். இந்த மலை அமைந்திருக்கும் பகுதி அடர்ந்த வனமாகத் திகழ்வதால், முற்காலத்தில் இந்தக் கோயிலுக்கு வெள்ளிக் கிழமைகளில் மட்டுமே பக்தர்கள் வருவதுண்டு. அதனாலும் இந்த மலைக்கு `வெள்ளிக்கிழமை மலை’ என்ற பெயரும் உண்டாம்.
ஆனால் இன்று அனைத்து நாள்களும் கோயில் திறந்திருக்கிறது. வெள்ளிமலை கோயிலுக்குச் செல்ல கிழக்குப்பக்கம் 90 படிகள் அமைந்துள்ளன.

இத்தல முருகப் பெருமானை தரிசித்தால் நவகிரக தோஷங்கள் யாவும் விலகும் என்பது ஐதிகம். சித்திரை பத்தாம் உதயம் அன்று காலைப் பொழுதில், சூரியக் கிரணங்கள் நீளமான மண்டபத்தைக் கடந்து வந்து முருகனின் திருப்பாதங்களைத் தழுவி வணங்குவது கண்கொள்ளாக் காட்சியாகும். அன்று முருகப் பெருமானை தரிசித்தால் நவகிரக தோஷங்கள் யாவும் விலகும் என்பது ஐதிகம். வெள்ளி மலையில் எழுந்தருளும் கந்தனை வழிபட்டால் குழந்தைப் பேறு கிட்டும், திருமண வரம் கிடைக்கும், நினைத்தவை அனைத்தும் நிறைவேறும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.
குன்றின் மீது அழகான கோயில், பளிச்சென்று காணப்படுகிறது. ஸித்தி விநாயகர், தர்மசாஸ்தா, சிவபெருமான் (ஆனந்த சிவன் என்பது திருநாமம்), நவகிரகங்கள் ஆகியோர் தனிச் சந்நிதிகளில் வீற்றிருந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள்.
மூலவர் ஸ்ரீபாலசுப்ரமண்ய ஸ்வாமி கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். இங்கிருந்து 28 கி.மீ. தொலைவில் உள்ள சுசீந்திரத்தில் கோயில்கொண்டுள்ள ஸ்ரீதாணுமாலயனை (சிவபெருமான்) நோக்கியபடி இவர் அருள்வதாகக் குறிப்பிடுகிறார்கள். குன்றின் உச்சியில் நந்திப் பாதம், முருகர் பாதம் காணப்படுகிறது.
ஒவ்வொரு தமிழ் மாதமும் கடைசி வெள்ளிக்கிழமை இங்கு மிகவும் விசேஷம். அன்றைய தினம் பக்தர்களுக்கு பகவத் பிரசாதமாகக் கஞ்சி வழங்கப்படுகிறது. வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஆலய முன்னேற்ற சங்கத்தினர் பக்தர்களுக்கு அன்னதானம் செய்கின்றனர்.
கந்த சஷ்டி விழா இங்கு சிறப்பாக நடத்தப்படுகிறது. தைப்பூசத்தில் பக்தர்கள் காவடி எடுத்து விசேஷமாகக் கொண்டாடுகிறார்கள். ஒவ்வொரு மாதமும் கடைசி வெள்ளிக்கிழமையன்றும் இரணியலில் இருந்து ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்துக் கால்நடையாக ஊர்வலம் வந்து ஸ்ரீபாலசுப்ரமண்யரை வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். வைகாசி விசாகத் திருவிழா மிகவும் புகழ்பெற்ற திருவிழாவாக இங்கே கொண்டாடப்படுகிறது.
மூலவருக்குப் பூஜை, தீபாராதனை நடத்தப்படுகிறது. சுவாமிக்கு பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி கொண்டு அபிஷேகம் நடத்துகிறார்கள் . அரவண பாயசம், நெய்ப் பாயசம் நைவேத்தியமாகப் படைக்கப்படுகிறது. இந்த பாலசுப்ரமண்ய ஸ்வாமியை வழிபட்டால், தேக ஆரோக்கியத்தோடு கூடிய வலிமையான குழந்தைகள் பிறக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
வாய்ப்பிருக்கும் அன்பர்கள் வெள்ளிமலை சென்று பாலசுப்பிரமண்யரை தரிசனம் செய்துவருவோம். வாழ்க்கை வளமாகும்;நலமாகும்.