India
oi-Vignesh Selvaraj
பெங்களூர்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் நீர்வரத்து அதிகரித்த நிலையில் கர்நாடகா மாநிலம் கபினி அணையில் இருந்து விநாடிக்கு 10,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டுக்கு காவிரியில் இருந்து விநாடிக்கு 3,500 கனஅடி வீதம் 15 நாட்களுக்கு நீர் திறக்க வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. ஆனால் கர்நாடக அரசு, தண்ணீரை திறந்துவிடவில்லை. இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய போவதாகவும் கர்நாடகா தெரிவித்தது.

இந்நிலையில் நாளை நடைபெறவுள்ள கர்நாடகா அனைத்துக் கட்சிக் கூட்டத்தை முன்னிட்டு, பெங்களூரில் முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தலைமையில் நீர்வளத்துறை அமைச்சர் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதற்கிடையே கர்நாடகாவில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ணராஜ சாகர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், கர்நாடகாவில் உள்ள முக்கிய அணைகளான கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது. இதனால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இப்படியான சூழலில் இன்று செய்தியாளர்களை சந்தித்த கர்நாடகா முதலமைச்சர் டி.கே.சிவக்குமார், காவிரி நீர் தொடர்பாக கடையடைப்பு போராட்டத்தை கைவிட வேண்டும் என கேட்டுக் கொண்டார். கர்நாடகாவில் உள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன என்றும் தண்ணீரை நாம் கட்டுப்படுத்தி வைக்க நினைத்தால் நம்மை அது அடித்துச் சென்றுவிடும் என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில் கர்நாடகா முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்த சிறிது நேரத்திலேயே கர்நாடகா மாநிலம் கபினி அணைியில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படுள்ளது. கபினி அணையில் இருந்து 10,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
கபினி அணைக்கு தற்போது விநாடிக்கு 15,565 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், பாதுகாப்பு கருதி, விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த நீர் தமிழ்நாட்டில் எல்லைக்கு திங்கட்கிழமை (ஆகஸ்ட் 3) வந்துசேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.