Cricket
oi-Vigneshkumar
சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் சமீபத்திய செயல்பாடுகள் கடுமையான விமர்சனத்திற்குள்ளாகி வருகிறது. இதற்கிடையே டீமின் செயல்பாடுகள் குறித்தும் பயிற்சியாளர் டீம் குறித்தும் முக்கிய முடிவு எடுக்கப்படவுள்ளது. ஒயிட்-பால் போட்டிகள் குறித்து இதில் முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடர் முடிந்ததும், இந்திய கிரிக்கெட் அணியின் ஒயிட்-பால், அதாவது டி20 மற்றும் ஒருநாள் செயல்பாடுகள் குறித்து பிசிசிஐ முக்கிய ஆய்வு கூட்டம் நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கூட்டத்தில் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர், டி20 கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர், டெஸ்ட் மற்றும் ஒருநாள் கேப்டன் சுப்மன் கில், தேசிய கிரிக்கெட் அகாடமி தலைவர் வி.வி.எஸ். லக்ஷ்மண் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

இந்திய கிரிக்கெட்
மும்பையில் ஆகஸ்ட் முதல் வாரத்தில் நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில், சமீபத்திய வெளிநாட்டு தொடர்களில் இந்திய அணி சந்தித்த தொடர் தோல்விகள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட உள்ளது. குறிப்பாக, அயர்லாந்துக்கு எதிராக முழு பலம் கொண்ட இந்திய அணி 2-0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் ஆனது. அதேபோல இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் 4-0 என்ற கணக்கில் படுதோல்வி அடைந்தது. அதனை தொடர்ந்து ஒருநாள் தொடரிலும் 2-1 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தது. இந்த தொடர் தோல்விகள் பிசிசிஐ நிர்வாகத்தை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா கூறுகையில், “இங்கிலாந்து, அயர்லாந்து, ஜிம்பாப்வே தொடர்களின் செயல்பாடுகள் குறித்து ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் ஆய்வு நடத்தப்படும். அணியின் உதவி பயிற்சியாளர்களில் சிலரின் ஒப்பந்த காலமும் முடிவடைந்துள்ளது. எனவே அனைத்து விஷயங்களும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும். குறிப்பாக இங்கிலாந்து தொடரில் என்ன தவறு நடந்தது என்பதையும் ஆய்வு செய்வோம்” என்றார்.
வாய்ப்பில்லை
ஆனால் இந்த கூட்டத்திற்கு பிறகு உடனடியாக பெரிய மாற்றங்கள் இருக்க வாய்ப்பில்லை என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன. கம்பீர் மீது சமீப காலமாக கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. குறிப்பாக இங்கிலாந்து தொடரில் வீரர்கள் தேர்வு, வைபவ் சூர்யவன்ஷி மற்றும் சஞ்சு சாம்சனுக்கு அளிக்கப்பட்ட வாய்ப்புகள் குறித்து பல முன்னாள் வீரர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். இருப்பினும், கம்பீரின் ஒப்பந்தம் 2027 உலகக் கோப்பை வரை இருப்பதால், தற்போது அவரை மாற்றுவது அணிக்கு பாதகமாக அமையும் என்று பிசிசிஐ கருதுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேபோல், சூர்யகுமார் யாதவுக்கு பதிலாக டி20 கேப்டனாக பொறுப்பேற்ற ஷ்ரேயாஸ் ஐயரின் முதல் தொடர் தோல்வியில் முடிந்தாலும், அது அவரது முதல் முயற்சி என்பதால் அவருக்கு கூடுதல் வாய்ப்பு வழங்கப்படும் என்று என்பதில் சந்தேகம் இல்லை. சுமன் கில்லுக்கும் கூட இங்கிலாந்து தான் சமீபத்தில் ஏற்பட்ட முதல் தோல்வி என்பதால் அவருக்கும் எந்தவொரு சிக்கலும் வராது.
பயிற்சியாளர் டீம்
இதற்கிடையில் இந்திய அணியின் பயிற்சியாளர் டீமிலும் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உதவி பயிற்சியாளர் ரியான் டென் டோஷ்கேட் மற்றும் ஃபீல்டிங் பயிற்சியாளர் டி. திலீப் ஆகிய இருவருக்கும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான பொறுப்புகளே இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் ஒரே பணிக்காக இரண்டு சர்வதேச பயிற்சியாளர்கள் இருப்பது குறித்து பிசிசிஐ அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில் இந்திய அணியின் ஃபீல்டிங் கடுமையாக விமர்சிக்கப்பட்ட நிலையில், இந்த விவகாரத்துக்கும் தீர்வு காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக டென் டோஷ்கேட் அணியில் இருந்து விலகும் வாய்ப்பு அதிகம் என கூறப்படுகிறது. அதேநேரத்தில், பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் ஒப்பந்தம் குறித்தும் ஆலோசனை நடைபெற உள்ளது. இருப்பினும், 2027 உலகக் கோப்பை தென்னாப்பிரிக்காவில் நடைபெற உள்ளதால், அவரை தற்போது மாற்ற பிசிசிஐ விரும்பாது என தெரிகிறது.
பேட்டிங் பயிற்சியாளர்
அதேநேரம் பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷு கோடக் மற்றும் சுழற்பந்து பயிற்சியாளர் சாய்ராஜ் பஹுதுலே ஆகியோரின் பொறுப்புகளில் மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆகஸ்ட் மாதம் நடக்கும் இந்த ஆய்வு கூட்டத்தில் இந்திய அணியின் எதிர்கால திட்டங்கள், தேர்வு முறை, பயிற்சியாளர் குழு உள்ளிட்ட பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்பதால் இது கவனிக்க வைக்கும் மீட்டிங்காக மாறியுள்ளது.