கரும்புள்ளிகள் (Dark spots) போகனுமா? அப்போ இதுதான் சிறந்தது..! – Kumudam

Spread the love

சீனா மற்றும் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட இந்தத் தாவரம் தென்னிந்தியாவில் பரவலாக வளர்க்கப்படுகிறது. பூவின் நிறம் மற்றும் இதழ்களின் அமைப்பின் அடிப்படையில் பல வகைகள் காணப்படுகின்றன. செம்பருத்தியின் பூ, இலை, வேர் ஆகிய அனைத்துப் பகுதிகளும் மருத்துவக் குணங்கள் நிறைந்தவையாகக் கருதப்படுகின்றன.

உடல்நலத்திற்கு அரிய வரப்பிரசாதம்:

சித்த மருத்துவத்தில் செம்பரத்தை குளிர்ச்சித் தன்மை கொண்ட மூலிகையாக வகைப்படுத்தப்படுகிறது. இது உடல் வெப்பத்தைக் குறைத்து, வயிற்றுக் கோளாறுகளைச் சீராக்கி, மலச்சிக்கலைக் சுட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

இதன் சிவப்பு நிறத்துக்கு ஆந்தோசயனின் எனும் நிறமியே காரணம். இதனுடன் பல்வேறு பிளவனாய்டுகள் உடலுக்கு ஆக்சிஜனேற்ற எதிர்ப்பு சக்தியை வழங்குகின்றன.

செம்பரத்தை பூக்களில் தேநீர் தயாரித்து குடிப்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மேலும் இரத்த நாளங்களை விரிவடையச் செய்து இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் உதவும் என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கண் எரிச்சல், கண் நோய்கள், சுண் வீக்கம், கண்களில் நீர் வடிதல் போன்ற கண் சம்பந்தமான பிரச்னைகளுக்கு செம்பரத்தை நீர் குடிப்பது பலன் தரும் குறிப்பாக உடல் உஷ்ணத்தால் வரக்கூடிய கண் பிரச்னையை சரி செய்ய இது உதவும்.

செம்பரத்தை தேநீரில் உள்ள பீனால் கலவைகள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட் தன்மைகள் உடலின் செல்களை ஆக்சிடேட்டிவ் சேதத்திலிருந்து பாதுகாக்க உதவலாம் என்று ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

செம்பருத்தியில் உள்ள சாபோனின் மற்றும் பிற உயிர்ச்செயல் கொண்ட வேதிப்பொருட்கள், தேவையற்ற கொழுப்பு உறிஞ்சுதலைக் குறைத்து கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தலாம் என்று சொல்லப்படுகின்றது.

செம்பருத்தியின் ஆல்கலாய்டுகள் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை பலப்படுத்தி மனதுக்கு அமைதி அளிக்கும் பண்பு களைக் கொண்டவை.

இதில் இருக்கும் டானின், குயிர்சிடின், கெம்ஃபெரால், ஹிபிஸ்செட்டின் போன்ற வேதிப்பொருட்கள் உடலின் அழற்சியைக் குறைத்து கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகின்றன.

பெண்களின் உடல்நலத்தில்…

செம்பரத்தை பூவில் உள்ள டானின் என்னும் வேதிப்பொருள் கர்ப்பப்பை கோளாறுகளுக்கு தீர்வாக இருக்கும் மருந்துகளில் ஒன்று. மாதவிடாய் காலத்தில் அதிக ரத்தப்போக்கு இருக்கும் பெண்கள் செம்பரத்தை பூக்களின் இதழ்களை மட்டும் நிழலில் உலர்த்தி பொடியாக்கி காலை மற்றும் மாலை என ஏழு நாட்கள் சாப்பிட்டால் பலன் கிடைக்கும். வெள்ளைப் படுதல் பிரச்னை இருப்பவர்கள் செம்பருத்தி செடியின் இலையை நறுக்கி நீரில் சேர்த்து கொதிக்க வைத்து கஷாயமாக்கி குடித்துவந்தால் கட்டுப்படும். இதில் இருக்கும் துவர்ப்பு குணமான டானினின் நுண்ணுயிரிகளின் தொற்றை எதிர்த்துப் போராடும் திறனுடையது.

கூந்தல் வளர்ச்சிக்கு செம்பரத்தை:

சித்த மருத்துவத்திலும், ஆயுர்வேதத்திலும், இன்றைய ஹெர்பல் ஹேர் கேர் தயாரிப்புகளிலும் செம்பரத்தை அதிக பங்கு வகிக்கிறது. இதிலுள்ள பிளேவனாய்டுகள், ஆந்தோசயனின், அமினோ அமிலங்கள், வைட்டமின் சி மற்றும் குறிப்பாக மிசிலேஜ் என்ற வழவழப்பான திரவம் போன்றவை தலைமுடிக்கு நல்ல புத்துணர்ச்சியை தரும்.

மயிர்க் கால்களை வலுவாக வைத் திருக்கவும் நரைமுடியை தடுக்கவும் இது பயனுள்ளதாக இருக்கிறது. செம்பருத்தியில் இருந்து தயாரிக்கப்படும் ஹேர் ஆயிலை பயன்படுத்துவதன் மூலம் கூந்தல் சார்ந்த பல பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும்.

செம்பருத்தி பூக்களை உலர விட்டு அதை சீகைக்காய் உடன் சேர்த்து அரைத்து தலைக்கு குளிக்கும்போது கூந்தல் ஆரோக்கியமாக இருக்கும். இயற்கையாக தலைமுடியை பள பளப்பாக வைத்திருக்கும்.

தேங்காய் எண்ணெய் சூடாக்கி, செம்பருத்தி பூ, செம்பரத்தை இலை நறுக்கி சேர்த்து பாட்டிலில் சேமிக்கவும். வாரத்துக்கு 2-3 முறை தடவி வந்தால் கூந்தல் வலுப்பெறும். இதிலுள்ள அமினோ அமிலம் முடியின் வேர்க்காலுக்கு ரத்த ஓட்டத்தை அதிகரித்து, முடி உதிர்வைக் குறைக்கிறது.

செம்பருத்தி இலையுடன் தயிர் சேர்த்து அரைத்து கூந்தல் முழுவதும் தடவி 20 நிமிடங்கள் கழித்து கூந்தலை அலசினால் முடி இயற்கையாகவே பளபளப்பாகும். இதன் நுண்ணுயிர் எதிர்ப்பு திறன் பொடுகு, உச்சந்தலை அரிப்பு, பேன் போன்றவை வராமல் தடுக்கும்.

இளநரை இருப்பவர்கள் கரிசலாங்கண்ணியுடன் செம்பருத்தி சேர்த்து பயன்படுத்தினால் இளநரையை தள்ளிப்போடலாம்.

சருமத்துக்கு செம்பரத்தை:

செம்பரத்தை இதழ்கள் 10-15 எடுத்து காய்ச்சாத பசும்பால் சிறிது சேர்த்து அரைத்தெடுக்கவும். அதில் சிறிதளவு அரிசி மாவு சேர்த்து குழைத்து ஃபேஸ் பேக் போட்டால் முகம் பளபளப்பாக இருக்கும். சுரும்புள்ளிகள் மந்தமாகி முகம் பளபளப்பாக இருக்கும். இதன் இதழை உலர வைத்து அதனுடன் தயிர் சேர்த்து நன்றாகக் கலந்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் முகம் கழுவினால் மந்தமான சருமம் பளபளப்பாக இருக்கும்.

செம்பரத்தை இதழை உலர வைத்து அதனுடன் சமஅளவு ஆவாரம்பூ, கறிவேப்பிலை இலை, இரண்டில் ஒரு பங்கு பாசிப்பயறு போன்றவற்றை சேர்த்துப் பொடியாக்கி பாட்டிலில் வைத்துக்கொள்ளவும். தினமும் குளிக்கும்போது சோப்புக்கு மாற்றாக இந்த தூளை நீரில் குழைத்து உடம்பில் தேய்த்துக் குளித்தால் தோல் நோய்கள் வராமல் தடுக்கலாம். வியர்வை நாற்றமும் வராது.

அரை லிட்டர் நல்லெண்ணெயை கொதிக்க வைத்து அதில் உலர்ந்த 30 செம்பருத்தி பூக்களைப் போட்டு மிதமான தீயில் காய்ச்சி இறக்கி ஒருநாள் கழித்து வடிகட்டவும். பூக்களை மிக்ஸியில் அரைத்து வடிகட்டி எண்ணெயுடன் சேர்க்கவும். இதை தினமும் தடவி வநதால் சருமத்தில் இருக்கும் சுருக்கங்கள் கட்டுப்படும்.

செம்பருத்தி என்ற பெயரில் பரவலாக அறியப்பட்டாலும், செம்பரத்தை என்பதே அதன் பாரம்பரிய தமிழ் பெயர் எனக் கூறப்படுகிறது. ஆரோக்கியம், அழகு மற்றும் பாரம்பரிய மருத்துவம் ஆகிய துறைகளில் பல்வேறு பயன்களை வழங்கும் இந்த மலர், இயற்கை மருத்துவத்தில் முக்கிய இடம் வகிக்கும் மூலிகைகளில் ஒன்றாகத் திகழ்கிறது.

– சித்த மருத்துவர் டி. பாஸ்கரன்

 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *