கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், மின்னாம்பள்ளி கிராமம், சங்கரம்பாளையம் என்ற முகவரியைச் சேர்ந்த துரைசாமி – ருக்குமணி தம்பதியரின் மகன் சிவசந்துரு(வயது: 32). இவர், கடந்த 7 -ம் தேதியன்று ஏற்பட்ட சாலை விபத்தில் படுகாயம் அடைந்து, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி மூளைச்சாவு அடைந்தார். சாலை விபத்தில் இறந்தவருக்கு வினோதினி என்ற மனைவியும் (25) மற்றும் யாழினி ( 2) என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில், அவரது குடும்பத்தினரின் சம்மதத்துடன் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன. உயிரிழந்தவரின் உடல் உறுப்புகள் மருத்துவ விதிமுறைகளின்படி தானமாகப் பெறப்பட்டு, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காகக் காத்திருந்த மூன்று நோயாளிகளுக்கு மறுவாழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு இரண்டு சிறுநீரகம் திருச்சியிலுள்ள தனியார் மருத்துவமனைக்கும், கல்லீரல் கோயம்புத்தூரிலுள்ள தனியார் மருத்துவமனைக்கும் தானமாக அளிக்கப்பட்டது. விபத்தில் இறந்தபின் அவரது உடல் உறுப்புகளை தானம் வழங்குபவர்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பாக அரசு மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், சிவசந்துருவின் இறுதி சடங்கு மண்மங்கலம் வட்டம், மின்னாம்பள்ளி கிராமம், சங்கரன்பாளையம் ஊர் மயானத்தில் நடைபெற்றது. இந்த இறுதிச் சடங்கில் தமிழ்நாடு அரசு சார்பில் கரூர் சார் ஆட்சியர் கார்த்திகேயன் மற்றும் மண்மங்கலம் வட்டாட்சியர் உள்ளிட்ட வருவாய்துறை அரசு அதிகாரிகள் இறுதி மரியாதை செலுத்தினர்.

அதோடு, இந்த நெகிழ்வான சம்பவம் குறித்து, “இந்த துயரமான சூழ்நிலையிலும் மனிதநேயத்துடன் செயல்பட்டு, தங்களது குடும்ப உறுப்பினரின் உடல் உறுப்புகளைத் தானமாக வழங்க முன்வந்த குடும்பத்தினரின் செயல் பாராட்டுக்குரியது. அன்னாரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், ஒருவரின் உயிரிழப்பு பலரின் வாழ்க்கையில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது’ என்று கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரசன்னா ராமசாமி தனது இரங்கல் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார். இளம் வயதில் மூளைச் சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்பு தானம் செய்ய முன்வந்த குடும்பத்தினரின் மனிதநேயமிக்க செயல் அப்பகுதி மக்களிடையே நெகிழ்வை ஏற்படுத்தியிருக்கிறது.