கரூர் நெரிசல் உயிரிழப்பு: 32 குடும்பங்களுக்கு அரசு பணி வழங்க தடையில்லை… ஐகோர்ட் முக்கிய உத்தரவு – Kumudam

Spread the love

அதே நேரத்தில் இன்று வழங்கப்படும் அரசுப் பணி நியமன ஆணை தற்காலிகமானதாகவே இருக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதித்துள்ளது. கடந்த ஆண்டு செ 27 ஆம் தேதி தவெக தலைவர் விஜய் தலைமையில் நடந்த தேர்தல் பிரசாரத்தின் போது அதிகளவில் கூட்டம் கூடியதால் 41 பேர் உயிரிழந்தனர். அவர்களுக்கு அரசு சார்பிலும் கட்சி சார்பிலும் நிதியுதவி வழங்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் 32 பேருக்கு இன்று கரூர் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய் அரசுப் பணி ஆணை வழங்கவுள்ளார். இது குறித்து பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியது. இதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்ற  மதுரை அமர்வில் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு வந்த்து.அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் பலியானோரின் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் பணி நியமன ஆணை வழங்கத் தடையில்லை என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு இடைக்கால உத்தரவிட்டுள்ளது.

அதே நேரத்தில் கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 32 குடும்பங்களுக்கு வழங்க்க் கூடிய அரசு பணி ஆணை தற்காலிக பணி நியமன ஆணை என்றும் இந்த வழக்கு முடியும்வரை இப்படியே தொடர வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.  முதலமைச்சர் விஜய் தற்போது கரூர் நிகழ்ச்சிக்கு பயணத்தில் இருப்பதால் அதை ரத்து செய்ய முடியாது என்பதால் இப்போது தற்காலிக அரசுப் பணி வழங்கட்டும் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர். மேலும் அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது என்றும் தெரிவித்துள்ளனர்.

போட்டித் தேர்வர்களுக்கு இது பாதிப்பை உண்டாகும் என்று வாதம் முன்வைக்கப்பட்ட நிலையில் டிஎன்பிஎஸ்சியை எதிர்மனுதாரராக சேர்த்து ஜூலை 21 ஆம் தேதிக்கு வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. விசாரணையின் தொடக்கத்திலேயே, ‘கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டோருக்கு பொருளாதார உதவி தேவைதானே? அரசுப் பணி வழங்குவதில் என்ன தவறு இருக்கிறது?’ என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பிய நிலையில் மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர், “பாதிக்கப்பட்டோருக்கு அரசு சார்பிலும் கட்சி சார்பிலும் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும் அரசுப்பணி எதற்கு? என்பதற்கு உச்சநீதிமன்றத்தில் கரூர் நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையில் இருக்கும்போது அரசுப் பணி வழங்குவது சரியல்ல இது சாட்சியங்களை கலைக்கும் வாய்ப்பாக அமையும். 
கரூர் சம்பவங்கள் போன்ற எதிர்காலத்தில் நடைபெறும் நிகழ்வுகளிலும் இவ்வாறு நடந்தால் அரசுப்பணி கோர வாய்ப்புள்ளது.

ஏற்கனவே தமிழகத்தில் நடந்த கும்பகோணம் மகாமகம் நிகழ்வு, தருமபுரி பேருந்து எரிப்பு சம்பவம், ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு ஆகிய சம்பவங்களில் பாதிக்கப்பட்டோர் யாருக்கும் அரசுப் பணி வழங்கப்படவில்லை.

கருணை அடிப்படையில் பணி வழங்கும் விதிமுறைகள் எதுவும் இதில் பின்பற்றப்படவில்லை. இல்லையென்றால் இதுபோன்ற சம்பவங்களுக்கு புதிய விதிகளை உருவாக்க வேண்டும்” என்று வாதங்களை முன்வைத்தார்.

அப்போது ‘கரூரில் பாதிக்கப்பட்டோருக்கு அரசுப்பணி வழங்குவது குறித்து சட்டப்பேரவையில் அறிவிக்கப்படவில்லையா?’ என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த மனுதாரர், ‘சட்டப்பேரவையில் அறிவிப்பு இல்லை. அதுபோல இவர்களுக்கு அரசுப் பணி வழங்கினால் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வோர், டிஎன்பிஎஸ்சி போன்ற தேர்வுகளுக்கு முயற்சிக்கும் போட்டித் தேர்வர்களுக்கு ஏமாற்றமாக அமையும்’ என்றும் கூறினார்.

இதன்பின்னர் டிஎன்பிஎஸ்சியை எதிர்மனுதாரராக சேர்க்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *