கர்நாடக காங்கிரஸ் அரசில் கடந்த சில வாரங்களாக நீடித்து வந்த தலைமை மாற்றத்திற்கான அதிகாரப் போட்டி தற்போது ஒரு தீர்க்கமான கட்டத்தை எட்டியுள்ளது.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் டெல்லி இந்திரா பவனில் காங்கிரஸ் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த முக்கியக் கூட்டத்தில் கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், ராகுல் காந்தி, கர்நாடக காங்கிரஸ் பொறுப்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா மற்றும் கே.சி.வேணுகோபால் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, சித்தராமையாவிடம், “அடுத்தவருக்கு நீங்கள் வாய்ப்பளிக்க வேண்டும்” என்று மிகத் தெளிவாகவும், கனிவாகவும் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதற்குப் பதிலளித்த சித்தராமையா, கட்சியின் முடிவுக்குத் தான் கட்டுப்படுவதாகக் கூறியதுடன், முறைப்படி தனது ராஜினாமா கடிதத்தைச் சமர்ப்பிப்பதற்கு ஒன்று அல்லது இரண்டு நாட்கள் அவகாசம் கேட்டுள்ளதாகத் தெரிகிறது.
அதன் அடிப்படையில் கர்நாடக முதல்வர் சித்தராமையா நாளை (28-ம் தேதி) தனது பதவியை ராஜினாமா செய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
கட்சிக்கூட்டணிக்குள் எழுந்துள்ள அழுத்தங்கள் மற்றும் துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் முதல்வர் நாற்காலியைக் கைப்பற்ற தீவிரம் காட்டி வரும் நிலையில், புதிய முகத்திற்கு வழிவிடுமாறு சித்தராமையாவை காங்கிரஸ் தலைமை கேட்டுக்கொண்டுள்ளதாகத் கூறப்படுகிறது.