அவர் கையில் வைத்திருந்த ஃபைலை காவல்துறையினர் வாங்கி பரிசோதித்தனர். அதில், சி.பி.ஐ ஸ்பெஷல் ஆபீஷர், விஜிலன்ஸ், மத்திய போலீஸ், மத்திய உளவுப்பிரிவு, தேசிய மனித உரிமை ஆணையம், எல்ஐசி என 20-க்கும் அதிகமான போலி அடையாள அட்டைகளை வைத்திருந்தார். அத்துடன் போலியாக த.வெ.க அடையாள அட்டையையும் அவரது பெயரில் தயாரித்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆங்கிலம், இந்தி,தமிழ் என பல்வேறு மொழிகளில் அச்சிடப்பட்டிருந்த விதவிதமாக அடையாள அட்டைகளை பார்த்த போலீஸார் அதிர்ச்சியடைந்தனர்.

அவரிடம் விசாரித்தபோது, அவரது பெயர் வேல்முருகன் (38) என்பதும் நெல்லை மாவட்டம் கூந்தங்குளத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. பல வகையான அடையாள அட்டைகளை வைத்திருந்தது குறித்து அவரிடம் போலீசார் கேட்டபோது முன்னுக்குப் பின் முரணாக பதில் சொன்னார். அதையடுத்து அவரை பாளையங்கோட்டை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற போலீஸார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். இப்போது அவர் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர் என்பது தெரியவந்தது.

மத்திய மாநில அரசு அலுவலக சீலுடன் கூடிய போலியான அடையாள அட்டைகளைத் தயாரித்த அவர், அவற்றைப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டாரா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தினார்கள். அத்துடன் இந்த மோசடிக்குப் பின்னணியில் யாராவது துணையாக இருந்தார்களா என்பது குறித்தும் விசாரணை நடத்தினர். வேல்முருகன் மீது அரசு அதிகாரி போல நடித்து ஏமாற்றியதாக வழக்குப் பதிவுசெய்து போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.