“கலெக்டர் இங்க வரணும்”.. தீவிரமாக வெடித்த ‘ஜென் ஆல்ஃபா’ போராட்டம்.. சாலையில் திரண்ட பள்ளி மாணவர்கள்! | Gen Alpha Students Protest in Lucknow Over Teacher Shortage

Spread the love

India

oi-Vignesh Selvaraj

லக்னோ: பள்ளிகளில் நிலவி வரும் ஆசிரியர் பற்றாக்குறையை தீர்க்க வலியுறுத்தி, ஜென் ஆல்ஃபா மாணவர்கள் சுமார் 250 பேர் இன்று லக்னோவில் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்கள் பள்ளி வகுப்புகளைப் புறக்கணித்து நெடுஞ்சலையில் ஓடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அண்மையில், கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் நடத்திய போராட்டம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. நீட் தேர்வு முறைகேடுகளைக் கண்டித்து CJP நடத்திய போராட்டத்தை தொடர்ந்து, மத்திய கல்வி அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் பதவி விலகினார். இளைஞர்கள் தமது ஜந்தர் மந்தர் போராட்டத்தை முடித்துக் கொண்ட நான்கு நாட்களுக்குப் பிறகு,ஜென் ஆல்ஃபா போராட்டம் தொடங்கியுள்ளது.

Gen Alpha

ஜென் ஆல்ஃபா

ஜென் ஆல்பா தலைமுறை என்பவர்கள் 2010 ஆம் ஆண்டுக்குப் பிறகு பிறந்தவர்கள். இவர்கள் தற்போது பள்ளிகளில் படித்து வரும் மாணவர்கள். ஜென் ஆல்பா மாணவர்கள் பல்வேறு பகுதிகளில் கடந்த பதினைந்து நாட்களாக, வகுப்பறைகளை விட்டு வெளியேறி, அரசு அலுவலகங்களுக்குப் பேரணியாகச் சென்று, பள்ளி வாயில்களைப் பூட்டி, சாலைகளில் அமர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

தங்கள் வகுப்பறைகளில் மின்விசிறிகள், சுத்தமான குடிநீர், சுத்தமான கழிப்பறைகள், பாடங்களுக்கு உரிய ஆசிரியர்கள், சிறந்த உணவு, மேசைகள், நூலகங்கள் மற்றும் பள்ளிக்குச் செல்வதற்கு நல்ல சாலை ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்களில் இறங்கி உள்ளனர்.

பல்வேறு மாவட்டங்களிலும் மாணவர்கள் போராட்டம்

ஜென் ஆல்ஃபா போராட்டங்கள் என்று அழைக்கும் இவை, இதுவரை உத்தரப் பிரதேசம், பீகார், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் நடைபெற்றுள்ளன. ஆகஸ்ட் 11 அன்று, உத்தர பிரதேசத்தின் ஹமீர்பூர் மாவட்டத்தில் உள்ள சந்துபூர் கிராமப் பஞ்சாயத்தைச் சேர்ந்த மாணவர்களும் கிராம மக்களும், தங்கள் உள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தேசியக்கொடி ஏந்தி யாத்திரையாக சுமார் 5 கி.மீ. பயணம் செய்தனர் .

தங்கள் பள்ளிக்குச் செல்ல தார் சாலை அமைக்க வேண்டும் என அந்தக் குழந்தைகள் கோரிக்கை விடுத்தனர். குறிப்பாக மழைக்காலத்தில் தாங்கள் சேற்றில் நடக்க வேண்டியிருப்பதாகவும், சுதந்திரம் அடைந்து 80 ஆண்டுகள் கடந்தும் அப்பகுதியில் தார் சாலை எதுவும் அமைக்கப்படவில்லை என்றும் அவர்கள் கூறினர். அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் அமர்ந்து, தார் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்தனர். பின்னர் அதிகாரிகள் உறுதி அளித்ததைத் தொடர்ந்து போராட்டத்தைக் கைவிட்டனர்.

பள்ளியில் வசதிகளுக்காக போராட்டம்

உத்தரப் பிரதேசத்தின் ஃபதேபூர் மாவட்டத்தில் ஜூலை 28 அன்று கிஷன்பூர் நகரில் உள்ள சர்வோதயா இன்டர் காலேஜின் சுமார் 1,500 மாணவர்கள், பள்ளியின் வசதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வகுப்பறைகளைப் புறக்கணித்து போராட்டம் நடத்தினர். முறையான மேசைகள் மற்றும் நாற்காலிகள், கழிப்பறைகள், குடிநீர், மதிய உணவு, நூலகம் மற்றும் கணினி ஆய்வகம் போன்ற வசதிகள் இல்லாதது உள்ளிட்ட பல கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்தனர்.

பீகாரில், கயாவில் உள்ள சிமுவாரா நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த சுமார் 40-50 மாணவர்கள், துணை மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாகப் பேசுவதற்காக, கிட்டத்தட்ட நான்கு கி.மீ தூரம் நடந்தே சென்றனர். இந்தியா முழுவதும் உள்ள பள்ளி மாணவர்கள், ஜென் Z தலைமுறையினரைப் பின்பற்றி, தங்கள் குறைகளைத் தெரிவிக்க, போராட்டத்தைக் கையில் எடுப்பது அதிகரித்து வருகிறது.

சாலையில் ஓடிய ஜென் ஆல்பா மாணவர்கள்

அந்தவகையில், உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் இன்று மீண்டும் ஜென் ஆல்பா போராட்டம் வெடித்தது. ஜெய்பிரகாஷ் நாராயண் சர்வோதயா வித்யாலயா பள்ளியைச் சேர்ந்த சுமார் 250 மாணவ மாணவிகள் இன்று திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாணவர்கள் மோகன் சாலையிலிருந்து சுமார் 2.5 கி.மீ. தூரம் நடந்து சென்று துபக்கா-கான்பூர் புறவழிச்சாலையில் கூடினர். மாவட்ட ஆட்சியர் தங்களைப் பார்க்க வர வேண்டும் என்று கோரி, அவர்கள் கொட்டும் மழையில் சாலையில் அமர்ந்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

ஆசிரியர் பற்றாக்குறை

உடனடியாக, அப்பகுதி காவல் நிலையத்திலிருந்து போலீசார் வந்து மாணவர்களை சமாதானம் செய்ய முயன்றனர். அவர்கள் மாவட்ட ஆட்சியரை சந்திக்க வேண்டும் என உறுதியாக இருந்தனர். இதையடுத்து, மாணவர்கள் லக்னோ-ஹர்தோய் நெடுஞ்சாலையின் தவறான பக்கத்தில் ஓடத் தொடங்கினர்,

தங்கள் பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளதாகவும், கடந்த 6 மாதங்களாகவே இயற்பியல் பாடம் நடத்த ஆசிரியர் இல்லை என்றும் இன்னும் 5 மாதங்களில் முழு ஆண்டுத் தேர்வு வருகிறது என்றும் கூறினர். ஜென் ஆல்பா மாணவர்கள் தங்கள் குறைகளை கவனப்படுத்தும் வகையில் இப்படி போராட்டத்தில் ஈடுபட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *