
தேர்தல் காலத்தில் கட்சிகளின் பிரசாரம், விளம்பரங்கள், பொதுக்கூட்டங்கள், வேட்பாளர்களுக்கான செலவுகள் உள்ளிட்டவை தனித்தனியாக கணக்கிடப்பட்டுள்ளன. வேட்பாளர்களுக்கான செலவுக்கு தேர்தல் ஆணையம் தனி உச்சவரம்பை நிர்ணயித்திருந்தாலும், கட்சிகளின் ஒட்டுமொத்த பிரசாரச் செலவுகள் தனியாக கணக்கிடப்பட்டு தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்யப்படுகின்றன.
திமுக – ரூ.197.85 கோடி
திமுக தாக்கல் செய்துள்ள அறிக்கையின்படி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி தேர்தலுக்காக மொத்தம் ரூ.197.85 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. இதில் சுமார் ரூ.149.90 கோடி கட்சியின் பொதுப் பிரசாரம் மற்றும் விளம்பரங்களுக்காகவும், ரூ.47.95 கோடி வேட்பாளர்களுடன் தொடர்புடைய செலவுகளுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
பத்திரிகை, தொலைக்காட்சி மற்றும் சமூக வலைதள விளம்பரங்களுக்காக மட்டும் சுமார் ரூ.70 கோடி செலவிடப்பட்டுள்ளதாக திமுக கணக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்தல் காலத்தில் கட்சிக்கு ரூ.126.27 கோடி வருவாய் கிடைத்ததாகவும், தேர்தல் முடிவில் சுமார் ரூ.319.40 கோடி கையிருப்பு இருந்ததாகவும் அறிக்கை கூறுகிறது.
அதிமுக – ரூ.112.40 கோடி
அதிமுக தாக்கல் செய்துள்ள கணக்கில் மொத்த தேர்தல் செலவு ரூ.112.40 கோடியாக உள்ளது. இதில் பொதுப் பிரசாரத்துக்காக சுமார் ரூ.109.61 கோடியும், வேட்பாளர்கள் தொடர்பான செலவுகளுக்காக ரூ.2.78 கோடியும் செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுகவின் பிரசாரச் செலவில் ஊடகம் மற்றும் விளம்பரங்களுக்கு மிகப்பெரிய தொகை சென்றுள்ளது. சமூக வலைதளங்கள், தொலைக்காட்சி மற்றும் இணையதள விளம்பரங்களுக்காக பிரமாண்யா ஸ்ட்ராட்டஜி கன்சல்டிங் நிறுவனத்துக்கு மட்டும் ரூ.103.98 கோடி வழங்கப்பட்டதாக அந்தக் கட்சியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாஜக – தமிழ்நாட்டில் ரூ.51.56 கோடி
2026-ல் தமிழ்நாடு உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்ற நிலையில், பாஜக தனது செலவு கணக்குகளை மாநில வாரியாக தாக்கல் செய்துள்ளது. தமிழ்நாட்டில் தேர்தலுக்காக மட்டும் ரூ.51.56 கோடி செலவு செய்துள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் கணக்கு
காங்கிரஸ் ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் செலவை ஒருங்கிணைந்த அறிக்கையாக தாக்கல் செய்துள்ளது. தமிழ்நாட்டுக்கான கணக்கில் மொத்தமாக சுமார் ரூ.22.25 கோடி செலவு செய்யப்பட்டதாகவும், இதில் ரூ.7 கோடி வேட்பாளர்களுக்கான செலவாக இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீமானின் நாம் தமிழர் கட்சி
நாம் தமிழர் கட்சியின் தேர்தல் செலவு மற்ற முக்கிய கட்சிகளுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவாக உள்ளது. அக்கட்சி தாக்கல் செய்த கணக்கின்படி, மொத்தமாக சுமார் ரூ.1.37 கோடி செலவிடப்பட்டுள்ளது. பிரசாரம், நட்சத்திரப் பேச்சாளர்கள், பயணம் மற்றும் விளம்பரம் உள்ளிட்ட செலவுகள் இதில் அடங்குகின்றன.
ஆனால்… தவெக கணக்கு எங்கே?
இந்த தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து ஆட்சி அமைத்த தவெக, இதுவரை தனது தேர்தல் செலவு அறிக்கையை தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்ததாக தகவல் வெளியாகவில்லை. இதனால், மற்ற கட்சிகளின் செலவு கணக்குகள் வெளியாகியுள்ள நிலையில், தவெக தேர்தல் களத்தில் எவ்வளவு செலவு செய்தது என்ற கேள்வி தொடர்கிறது.
தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து ஆட்சி அமைப்பு ஒருபுறம் கவனம் பெற்ற நிலையில், தற்போது கட்சிகள் தாக்கல் செய்துள்ள இந்த செலவுக் கணக்குகள் தேர்தல் பிரசாரத்துக்குப் பின்னால் இருந்த நிதி விவரங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளன.