திருப்பரங்குன்றத்தில் ஆகம முறைப்படி தீபம் ஏற்றப்பட்டதன் பின்னணியில் சட்டம் – ஒழுங்கு பாதுகாப்பு, நீதிமன்ற அவமதிப்பு என எதிரெதிர் வாதங்கள் அனல் பறக்கத் தொடங்கியிருக்கின்றன!
மதுரையை அடுத்துள்ள அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்றுவதில், அண்மைக்காலமாக சர்ச்சை நிலவி வருகிறது. இதுநாள் வரையில் மலையில் அமைந்துள்ள உச்சிப் பிள்ளையார் கோயில் அருகேயுள்ள தீப மண்டபத்தில் கார்த்திகை தீபத்திருநாளன்று தீபம் ஏற்றப்பட்டு வந்தது. அண்மைக்காலமாக இந்து அமைப்பினர், ‘மலை உச்சியில் சிக்கந்தர் தர்கா அருகிலுள்ள தீபத்தூணில்தான் தீபம் ஏற்றப்பட வேண்டும்’ என கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இது தொடர்பான வழக்கில், ‘தீபத்தூணில் தீபம் ஏற்றப்பட வேண்டும்’ என கடந்த வருடமே உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. ஆனாலும், ‘இது சட்டம் – ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தும்’ என்ற காரணத்தைச் சொல்லி நீதிமன்ற உத்தரவைப் புறக்கணித்தது கடந்த தி.மு.க அரசு. இதைத் தொடர்ந்து இவ்விவகாரம் உச்ச நீதிமன்றம் செல்ல, ‘24-11-2026 அன்று ஒருநாள் மட்டும் தீபத்தூணில் தீபம் ஏற்றலாம்’ என்றதோடு பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்து உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம்.
இந்த நிலையில், திருப்பரங்குன்றம் கோயில் தேவஸ்தானம் உச்ச நீதிமன்ற உத்தரவைப் புறந்தள்ளி, ஆகம விதிமுறைகள் மற்றும் மரபுப்படி தீப மண்டபத்திலேயே தீபம் ஏற்றியுள்ளது. இதைத் தொடர்ந்து இந்து அமைப்புகள் தமிழக அரசின் நிலைப்பாட்டைக் கண்டித்து போராடி வருகின்றன.
இதுகுறித்து நம்மிடம் பேசிய ‘இந்து முன்னணி’ அமைப்பின் மாநில செய்தித் தொடர்பாளர் இளங்கோவன்,
“உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவின்படி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில்தான் தீபம் ஏற்ற வேண்டும். இந்த உத்தரவை அமல்படுத்த வேண்டிய மாவட்ட கலெக்டர் நோடல் அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்தும், தமிழக அரசு அதை அமல்படுத்தவில்லை. மேலும், ‘தீபம் ஏற்றுவது ஏற்கெனவே உள்ள பாரம்பர்யமா, வழக்கமா என்பதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல், அடுத்தகட்ட இறுதித் தீர்ப்புக்கு உட்பட்டு உத்தரவை அமல்படுத்த வேண்டும்’ என்று நீதிமன்றம் தெளிவாகக் கூறியிருந்தது.
உயர் நீதிமன்றத்தின் தனி நீதிபதி, இரு நீதிபதிகள் அமர்வு, உச்ச நீதிமன்றம் என இதுவரை ஆறு நீதிபதிகள் தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கு ஆதரவாக உத்தரவிட்டும், தமிழக அரசு அதை அமல்படுத்தவில்லை.
சம்பவத்தன்று நடைபெற்ற வழக்கு விசாரணையின்போதுகூட, நீதிமன்றத்தில் ஆஜரான மாவட்ட கலெக்டர், காவல் ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள், ‘உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன; அதை அமல்படுத்துவோம்’ என்று உறுதியளித்திருந்தனர்.
ஆனால், வழக்கமாக மோட்ச தீபம் ஏற்றப்படும் மண்டபத்திலேயே தீபம் ஏற்றப்பட்டுள்ளது. தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கான எந்த ஏற்பாடும் செய்யப்படவில்லை. ஆக, நீதிபதிகளிடம் தவறான தகவல் தெரிவித்து, உச்ச நீதிமன்றத்தையும் உயர் நீதிமன்றத்தையும் தமிழக அரசு ஏமாற்றியுள்ளது. இது அரசியலமைப்புச் சட்ட மீறலாகும்.