கல்யாண வரம் தரும் வாழை மலர் பூஜை… வீட்டிலேயே செய்ய எளிய வழிபாடு!|Banana Blossom Worship for the Blessing of Marriage… A Simple Ritual to Perform at Home!

Spread the love

எப்படி வழிபட வேண்டும்:

பூஜையறையில், நுனி பாகம் கிழக்கு அல்லது வடக்கு நோக்கி இருக்கும்படி நுனிவாழை இலை விரித்துப்போட வேண்டும். அதில் பச்சரிசி பரப்பி வைத்து, அதன் மீது மோதிரவிரலால் ஸ்வஸ்திகம் அல்லது திருநாமம் வரையவும்.

பிறகு, பஞ்சவர்ண நூல் சுற்றிய (3 லிட்டர் கொள்ளளவு கொண்ட) மண் கலசத்தை தீர்த்தத்தால் நிரப்பி, மஞ்சள் பொடி, ஏலக்காய், பச்சை கற்பூரம் தூள் இட்டு, கலசத்தின் மீது முற்றிய வாழை மலரை இதழ்கள் விரிந்து இருக்கும்படி வைக்கவேண்டும். அதற்கும் வாசனை மலர், சந்தன-குங்குமத் திலகமிட வேண்டும். பிறகு, கலசத்துக்கு எதிரில் பசுஞ்சாணத்தில் பிள்ளையார் பிடித்துவைத்து, அவருக்கு அருகம்புல் சமர்ப்பித்து ஒரு வெற்றிலையின் மீது வைக்கவும்.

தொடர்ந்து, பெரிய தட்டு ஒன்றின் மீது 16 தென்னங்குச்சிகளில் பஞ்சு அல்லது திரிவிலையை சுற்றிவைத்து, நெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் ஆகிய மூன்று எண்ணெய் கலவையில் அவற்றை நனைத்து தீபம் ஏற்றத் தயாராக வைக்கவேண்டும். அல்லது 5 முகக் குத்துவிளக்கை இரண்டு பக்கங்களிலும் ஏற்றிவைக்கலாம். இனி, பூஜையை ஆரம்பிக்கலாம்.

முதலில், வழக்கம்போல் விநாயகர் பூஜை.

ஆனை முகத்தவனே அருகம்புல் நாயகனே

வீணை சரஸ்வதிக்கு வித்தகனாய் வந்தவனே

வாழை மலர் முன்பு வாசமுடன் அமர்ந்தோனே

வாழ்வை பெறும் பூசை வெற்றிதர அருள்வாயே

என்றபடி மலர்கள் சமர்ப்பித்து, விநாயகரைத் தியானித்து வணங்க வேண்டும். திருமணத் தடையுள்ள ஆண்-பெண் அமர்ந்து இதைச் செய்தல் அவசியம். அடுத்ததாக அன்றைய திதி, வாரம், நட்சத்திர விவரங்களைச் சொல்லி, கையில் மலர் மற்றும் மஞ்சள் அரிசியை எடுத்துக்கொண்டு, மம அதிசீக்கிர விவாக பராப்தியர்த்தம் களத்திர தோஷ நிவாரணார்த்தம் என்று பெயரைச் சொல்லி சங்கல்பம் செய்யவேண்டும்.

பிறகு ஶ்ரீதுர்காதேவி துதி, ஶ்ரீலட்சுமி துதி, ஶ்ரீமகாவிஷ்ணு துதி, ஶ்ரீஸ்வயம்வர கலாதேவியின் துதி ஆகியவற்றை பாராயணம் செய்ய வேண்டும்.

மேலும் திருச்செந்தூர் முருகனைப் போற்றும் கீழ்க்காணும் துதியை 7 முறை சொல்லலாம்.

விறல் மாறன் ஐந்து மலர்வானி சிந்த

மிகவானில் இந்து வெயில் காய

மிதவாடை வந்து தழல் போல ஒன்ற

வினை மாதர் தத்தம் வசை கூறக்

குறவாணர் குன்றில் உறை பேதை கொண்ட

கொடிதான துன்ப மயல் தீரக்

குளிமாலையின் கண் அணிமாலை தந்து

குறைதீர வந்து குறுகாயோ

தொடர்ந்து கீழ்க்காணும் பாடலை 5 முறை சொல்லி வணங்கலாம்.

பலரும் பரவப் படுவாய் சடைமேல்

மலரும் பிறையோன் நுடையாய் மருகல்

புலருந்த் தனையும் துயிலான் புடைபோத்

தலரும் படுமோ அடியானிவனே

பின்னர், ஆத்ம பிரதட்சிணம் செய்து, தேங்காய் மற்றும் மூவகை கனிகளை தாம்பூலத்துடன் படைத்து, குலதெய்வம், குரு, பித்ருக் களை நினைத்து மலரிட்டு வணங்கிய பிறகு, ‘ஓம் சர்வ மங்கள மாங்கல்யே சிவே சர்வார்த்த சாதகே சரண்யே திரியம்பிகே தேவி நாராயணி நமோஸ்துதே’ என்று சொல்லி தீபக்குச்சிகள் 16-யும் ஏற்றுக. பிறகு, கற்பூர ஆரத்தி காட்டி மஞ்சள்- குங்குமம் பிரசாதமாக எடுத்துக்கொள்ள வேண்டும். அடுத்ததாக, கலசநீரை வீடு முழுவதும் தெளிக்கலாம்.

பின்னர், வீட்டுப் பெரியவர்களை வணங்கி அவர்களின் ஆசியைப் பெறலாம். இந்த வழிபாட்டால் கிடைக்கும் இறையருளாலும் பெரியோர் ஆசியாலும் விரைவில் கல்யாணம் கூடி வரும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *