கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் எம்.ஏ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். அவருடன் பக்கத்து ஊரான மூலச்சல் பகுதியைச் சேர்ந்த த.வெ.க பெண் நிர்வாகியும் படித்து வரும் நிலையில், இருவரும் ஒன்றாக கல்லூரிக்கு வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் கடந்த வாரம் புதன்கிழமை மாலை கல்லூரி முடிந்து இருவரும் வீட்டிற்குச் செல்ல பேருந்துக்காக கொட்டும் மழையில் காத்து நின்றனர். அப்போது அந்த வழியாக காரில் வந்த தக்கலை மருந்துக்கோட்டை பகுதியைச் சேர்ந்த த.வெ.க மத்திய மாவட்ட செயற்குழு உறுப்பினரான கிறிஸ்டோபர், காரை நிறுத்தி ஊருக்குச் செல்ல உதவுவதுபோல இருவரையும் தன்னுடைய காரில் அழைத்துச் சென்றுள்ளார். த.வெ.க பெண் நிர்வாகியான கல்லூரி மாணவியை மூலச்சல் பகுதியில் இறக்கிவிட்ட கிறிஸ்டோபர், குலசேகரம் பகுதியைச் சேர்ந்த மாணவியை வீட்டில் கொண்டு விடுவதாகக் கூறி தனியாக அழைத்துச் சென்றுள்ளார். மழை பெய்து கொண்டிருக்கும்போது திடீரென காரை நிறுத்திய கிறிஸ்டோபர், அந்த மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.

அந்த மாணவி சத்தம் போட்டு காரில் இருந்து குதித்து தப்ப முயன்றபோது, பேசி சமாதானப்படுத்திய கிறிஸ்டோபர், மாணவியை அவரது வீட்டு முன் இறக்கிவிட்டு விட்டு தப்பிச் சென்றார். வீட்டிற்குச் சென்ற கல்லூரி மாணவி பெற்றோரிடம் நடந்த சம்பவத்தைத் தெரிவித்ததோடு கொற்றிக்கோடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் மீதான விசாரணை தக்கலை காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்ட நிலையில், தக்கலை போலீஸார் கல்லூரி மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட கிறிஸ்டோபர் மீது வழக்குப் பதிவு செய்ததுடன், தலைமறைவாக இருந்த அவரைத் தேடிவந்தனர்.