கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோயில்: 7 கோபுரங்கள்… எண்ணிலடங்கா மகிமைகள்!

Spread the love

திருவோணம் பகவான் விஷ்ணுவின் நட்சத்திரம். இந்த நட்சத்திர தினத்தில்தான் பெருமாள், ஹயக்ரீவர், வாமனர், திருவேங்கடவன் எனப் பல்வேறு அவதாரங்களை எடுத்தார். எனவேதான் பெருமாளை வழிபட உகந்த நட்சத்திர தினமாக திருவோணம் திகழ்கிறது. அதிலும் ஆவணித் திருவோணம் மிகவும் விசேஷம். பெருமாள் வாமனராய் அவதரித்து மகாபலியை திரிவிக்ரமனாய் ஆட்கொண்டு அருளிய தினம் அது என்பதால் அதை திருவோணம் என்று போற்றுகிறார்கள். இந்த நாளில் பெருமாளை வாமனராக உலகளந்த பெருமாளாக வழிபடுவது சிறப்பு. வாருங்கள் பெருமாள் அவ்வாறு திரிவிக்ரமனாகக் காட்சிகொடுக்கும் தலமான திருக்கோவிலூரை தரிசனம் செய்வோம்.

விழுப்புரத்தில் இருந்து சுமார் 40 கி.மீ. தொலைவில் உள்ளது திருக்கோவிலூர்.

‘வையம் தகளியா…’ எனத் துவங்கி, நூறு பாசுரங்கள் பொய்கையாழ்வாரும்; ‘அன்பே தகளியா…’ என்று ஆரம்பித்து, நூறு பாசுரங்களால் பூதத்தாழ்வாரும் மொழி விளக்கேற்றிட, பெருமாளையும் தாயாரையும் தான் கண்ட காட்சியை ‘திருக் கண்டேன் பொன்மேனி கண்டேன்…’ எனத் துவங்கி (100 பாசுரங்கள்) பேயாழ்வாரும் பாடி அருளக் காரணமான தலம்.

திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோயில்

வாமன அவதாரத்தின்போது, பகவான் திரிவிக்கிரமராய் உலகளந்த தருணத்தில், எங்கோ தவம் செய்யப் போயிருந்தார் மிருகண்டு முனிவர். அவர் திரும்பி வந்ததும், பகவான் உலகளந்து அருள்புரிந்த கதையை சக முனிவர்கள் சிலாகித்துச் சொல்ல… நமக்கு அந்த விஸ்வரூப தரிசனம் கிடைக்காமல் போய்விட்டதே என்கிற ஆதங்கம் முனிவருக்கு. ‘கடும் தவம் இருந்து அந்த அற்புதக் கோலத்தை நானும் தரிசிப்பேன்’ என சங்கல்பித்துக் கொண்டார்.

நாரதரின் வழிகாட்டலால் பிரம்மனை நோக்கித் தவமிருந்தார். பிரம்மனின் காட்சி கிடைத்தது.

“கிருஷ்ணபத்ரா நதிக்கரையில் உள்ள ஶ்ரீகிருஷ்ண க்ஷேத்திரத்தில் (திருக்கோவிலூர்) தவம் செய்து வழிபட விரைவில் உமது விருப்பம் நிறைவேறும்’’ என்று அருளினார் பிரம்மன். அதன்படியே, தன் மனைவி மித்ரவதியுடன் இந்த தலத்துக்கு வந்து, பெருமாளை வழிபட்டார் முனிவர்.

ஒரு நாள், வயோதிக அந்தணர் கோலத்தில் மகாலட்சுமித் தாயாருடன் வந்த பெருமாள் ஓர் திருவிளையாடலை நிகழ்த்தி அவருக்கு உலகளந்த பெருமாளாகக் காட்சி கொடுத்தார் என்கிறது தலபுராணம். அத்துடன், மிருகண்டு முனிவருக்கும் அவர் மனைவிக்கும் எப்போதும் பகவானின் திருவடியில் இருக்கும் பேறும் கிடைத்தது!

திருக்கோவிலூரில் கிழக்கில் – பெரிய கோபுரம் 11 நிலைகளுடன் திகழ்கிறது. இதுதவிர கட்டை கோபுரம், கிழக்கு மற்றும் மேற்குப்புற ராஜ கோபுரங்கள், திருமங்கை மன்னன் கோபுரம், சொர்க்கவாசல் கோபுரம், கிளி கோபுரம்… என திரிவிக்ரமன் கோயிலுக்கு, மொத்தம் 7 கோபுரங்கள்.

உலகளந்த பெருமாள்

பெரிய கோபுரத்தின் அருகில் ஶ்ரீஅனுமன் சந்நிதி. கோபுர நுழைவு வாயிலில் ஶ்ரீமுனியப்பன், கோயிலின் எதிரில் கருட ஸ்தம்பத்தின் உச்சியில் கருடாழ்வார் ஆகியோரைத் தரிசிக்கலாம். கோயிலின் இடப் பக்கத்திலேயே ஶ்ரீஎம்பெருமானார் ஜீயர் மடம் உள்ளது.

கோயிலை வலம் வரும் போது ஶ்ரீபுஷ்ப வல்லி தாயார், ஶ்ரீசக்கரத்தாழ்வார், ஶ்ரீராமன், ஶ்ரீவரதராஜர்… உள் பிரகாரத்தில் ஶ்ரீலட்சுமி நாராயணர், ஶ்ரீலட்சுமி வராகர், ஶ்ரீஆண்டாள், உடையவர், ஶ்ரீலட்சுமி நரசிம்மர், சேனை முதல்வர், மணவாள மாமுனிகள் ஆகியோரும் அருள்கின்றனர். அனைவரையும் வழிபட்டு, திரிவிக்கிரமனைத் தரிசிக்கச் செல்லலாம்.

கருவறையில் – ஶ்ரீகர விமானத்தின் கீழ், இடக்காலை தரையில் ஊன்றி, வலது திருக்காலை உயரத் தூக்கி, அற்புதமாகக் காட்சி தருகிறார் ஶ்ரீஉலகளந்த பெருமாள். தூக்கிய திருவடியை பிரம்மன் ஆராதிக்க, இடது திருவடியில் அருகில் திருமகள், மகாபலி, அவருடைய மகன் நமச்சு மகாராஜா, சுக்ராச்சார்யர், மிருகண்டு முனிவர் – மித்ரவதி, கருடன் ஆகியோரும் உள்ளனர்.

தாரு (மரம்) திருமேனியராகத் திகழும் சுவாமிக்கு ஆயனார், இடைகழி ஆயன் எனும் சிறப்புப் பெயர்களும் உண்டு. இவரை தரிசித்தால், சகலவிதமான பாவங்களும் விலகும் என்பது ஐதிகம். பஞ்ச கிருஷ்ணாரண்ய தலங்களில் ஒன்று திருக்கோவிலூர்.

திருக்கோவிலூர் கோயிலில், சத்யபாமா- ருக்மிணி தேவியருடன் சாளக்கிராம மேனியராக அருள்கிறார் ஶ்ரீவேணுகோபாலன். இவரையே ஆதி க்ஷேத்திராதிபதியாகக் கருதுவதால், பெரும்பாலும் இவரை முதலில் தரிசித்துவிட்டே உலகளந்த பெருமாளைத் தரிசிக்கச் செல்கிறார்கள் பக்தர்கள்.

திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோயில்

இங்கே அர்த்தமண்டபத்தில் இடப் புறத்தில் தனிச் சந்நிதியில் ஶ்ரீவிஷ்ணு துர்கை அருள்கிறாள். இங்குள்ள க்ஷேத்திராதிபதி கண்ணனின் சிறப்பறிந்து, விந்திய மலை யிலிருந்து இங்கு வந்து அருள்பாலிக்கிறாளாம் ஸ்ரீதுர்கை. இதுகுறித்து… ‘கற்புடைய மடக்கன்னி காவல் பூண்ட…’ என திருநெடுந்தாண்டகத்தில் பாடுகிறார் திருமங்கையாழ்வார். செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் ராகு காலத்தில், இந்த தேவிக்கு விளக்கேற்றி வழிபடுகிறார்கள், பக்தர்கள். இவளைத் தரிசிக்க, நமது விருப்பங்கள் நிறைவேறும்.

திருக்கோவிலூர் கோயிலில் ஶ்ரீலட்சுமி நாராயணருக்கு இடப்புறம் ஶ்ரீவீர ஆஞ்சநேயர் சந்நிதி. இடக்கையை இடுப்பில் வைத்தும், வலக்கை உயர்த்தி அருளும் கோலத்தில் திகழும் வீர அனுமனை வியாழக் கிழமைகளில் வழிபட்டால், நினைத்தது நிறைவேறும். அடுத்து ஶ்ரீலட்சுமி வராகரையும், ஶ்ரீலட்சுமி நரசிம்மரையும் வழிபடுவது சிறப்பு.

இவர் சந்நிதியில் மச்ச- கூர்ம ரூபமாகவும் பெருமாளைத் தரிசிக்கலாம். தவிர, லட்சுமணன் சீதாதேவியுடன் ஶ்ரீராமன் விக்கிரகமும் உண்டு. இந்தக் கோயிலில் தசாவதாரங்களில் 7 அவதாரங்கள் உள்ளது சிறப்பு. நரசிம்மர் சந்நிதியை அடுத்து ஆண்டாள். மார்கழியில் விரதமிருந்து ஆண்டாளை வழிபட, கன்னிப் பெண்களுக்கு விரைவில் கல்யாணம் கைகூடும்!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *