இந்த நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர், தவெக எம்.எல்.ஏ சி. அருள் விக்னேஷ் மீது மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் (SP) முறையான புகார் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக அரசு மற்றும் மாவட்ட கலெக்டரின் கருத்துகளைக் கேட்டு நாளைக்குள் விளக்கம் அளிக்கும்படி அரசுத் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதி விசாரணை நாளை நடைபெறும் என நேற்று குறிப்பிட்டிருந்தார்.
அதன் அடிப்படையில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.ஜான் சத்யன் ஆஜராகி, பாதிக்கப்பட்ட பெண் ஐஏஎஸ் அதிகாரியுடன் தான் நடத்திய கலந்துரையாடல் குறித்த எழுத்துப்பூர்வமான குறிப்பை நீதிபதியிடம் சமர்ப்பித்தார்.
மேலும், அதிகாரியின் புகாரின் பேரில் தற்போது FIR பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார். இந்த நிலையில் எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது எந்தெந்த பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.
அதன்படி BNS 75, 78, 79 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாகத் தகவல் கசிந்திருக்கிறது.
பாலியல் நோக்கமுள்ள இரட்டை அர்த்தப் பேச்சுகள் அல்லது கருத்துகள் தெரிவிப்பது, பெண்ணின் விருப்பத்திற்கு எதிராக ஆபாசக் காட்சிகளைக் காட்டுதல், பெண் விருப்பமில்லை என்று தெளிவாகத் தெரிவித்த பிறகும் தொடர்ந்து பின்தொடர்வது, மீண்டும் மீண்டும் தொடர்புகொள்ள முயற்சிப்பது. இணையம், மின்னஞ்சல் அல்லது பிற மின்னணு தகவல் தொடர்புகளைத் தொடர்ந்து கண்காணிப்பது, பெண்ணை அவமதிக்கும் நோக்கத்துடன் வார்த்தைகளைப் பயன்படுத்துதல், பெண்ணின் தனிப்பட்ட உரிமை மற்றும் அந்தரங்கத்தில் அத்துமீறி நுழைதல் ஆகியவை இந்த பிரிவில் உள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுகள் உண்மையானால் எம்.எல்.ஏ அருள் விக்னேஷுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. அதேபோல BNS 75 ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவு என்பது குறிப்பிடத்தக்கது.!