கழிவறையில் ரூ.500 நோட்டுகள்.. அயோத்தி ராமர் சிலையின் தங்க, வெள்ளி நகைகளையும்.. அள்ளி சென்ற கும்பல் | Ayodhya Ram Mandir Donation Scam: Rs 7.5 Crore Embezzled by Temple Staff, Trust Members Resign

Spread the love

India

oi-Vigneshkumar

அயோத்தி: அயோத்தியில் கட்டப்பட்ட ராமர் கோயிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் பல லட்சம் பேர் வருகை தருகிறார்கள். ராமர் பிறந்த இடமாகக் கருதப்படும் அயோத்தியில் அமைந்துள்ள இந்த கோயிலை இந்துக்கள் மிகவும் புனிதமான கோயிலாகக் கருதுகிறார்கள். அப்படிப்பட்ட புனிதமான கோயிலில் அரங்கேறியுள்ள பிரம்மாண்ட திருட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“ராமருக்கு பக்தர்கள் காணிக்கையாகக் கொடுத்த பணத்தில் கோடிக்கணக்கில் கையாடல்!” என்பதே ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கும் சம்பவமாக இருக்கிறது. அயோத்தி ராமர் கோயிலில் உண்டியல் பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்களே, திட்டமிட்டுப் பல கோடி ரூபாயை திருடிய விபரம் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் முதற்கட்ட விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

Ayodhya Ram Mandir Donation Scam Ayodhya Ram Mandir

ரூ.500 நோட்டுகள்

இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததைத் தொடர்ந்து, ராமர் கோயில் அறக்கட்டளையின் முக்கிய நிர்வாகிகளான சம்பத் ராய் மற்றும் அனில் மிஸ்ரா ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். வழக்கமான தணிக்கையின் போது, ஒவ்வொரு உண்டியலிலும் தலா 6 முதல் 7 லட்சம் ரூபாய் வரை இருக்க வேண்டிய நிலையில், கடந்த சில வாரங்களாக 500 ரூபாய் நோட்டுக் கட்டுகள் குறைவாகவே இருந்ததை அதிகாரிகள் கவனித்துள்ளனர்.

சந்தேகம் வலுத்ததைத் தொடர்ந்து, பணம் எண்ணும் அறையில் ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டன. அதன் வீடியோக்களை ஆய்வு செய்தபோதுதான் அந்தப் பகீர் திருட்டு வெளிவந்தது. அதாவது இந்த ரகிசய கேமராவுக்கு முன்பே அங்கு வழக்கமான சிசிடிவி கேமராக்கள் வைக்கப்பட்டு இருந்தது. ஆனால், அவை எங்கே உள்ளன என்பது ஊழியர்களுக்குத் தெரியும். பணம் எண்ணும் போது ஒரு ஊழியர் வேண்டுமென்றே சிசிடிவி கேமராவின் முன்னால் மறைத்து நின்றுகொள்வார். அந்தச் சமயம் பார்த்து, மற்றொரு ஊழியர் பணக்கட்டுகளிலிருந்து நோட்டுகளைச் சுருட்டித் தனது ஆடைகளுக்குள் மறைத்து வைப்பார்.

கழிவறையில் பணம்

இதுமட்டுமன்றி, ஒவ்வொரு பணக்கட்டிலும் கூடுதல் நோட்டுகளை வைப்பார்கள். அதிகாரிகள் கட்டுகளின் எண்ணிக்கையை மட்டுமே சரிபார்த்து வவுச்சர் தயாரிப்பார்கள். பின்னர், அந்தப் பணத்தை வங்கிகளுக்குக் கொண்டு செல்லும்போது, இடையில் அந்த உபரி நோட்டுகளை ஊழியர்கள் உருவிவிடுவார்கள். இதனால் வவுச்சர் கணக்கில் பிரச்சினை வராது. அதேநேரம் இவர்களுக்கும் பணம் கிடைக்கும். இப்படித் திருடப்பட்ட கோடிக்கணக்கான பணம், முதலில் கோயில் வளாகத்திற்குள் இருக்கும் கழிவறைகளில் ரகசியமாகப் பதுக்கி வைக்கப்பட்டது. பின்னர், சமயம் பார்த்து அங்கிருந்து வெளியே கடத்தப்பட்டு, கூட்டாளிகளிடையே பிரித்துக் கொள்ளப்பட்டுள்ளது.

திருட்டு அம்பலம்

2024ல் கோயில் திறக்கப்பட்டதில் இருந்தே இந்த மாபெரும் மோசடி கும்பல் செயல்பட்டு வந்துள்ளது. இந்த ஆண்டு ஏப்ரல் 27 முதல் ஜூன் 5 வரையிலான காலகட்டத்தில் மட்டுமே, சுமார் 70 திருட்டு சம்பவங்கள் கேமராவில் பதிவாகியுள்ளன. பணம் எண்ணும் பணியில் இருந்த ஊழியர்கள் தினமும் வேலை முடிந்து வெளியேறும்போது, அவர்களை அதிகாரிகள் எவ்வித சோதனைக்கும் செய்வதில்லை. இந்த அலட்சியமே திருடர்களுக்குப் பெரும் துணிச்சலைத் தந்துள்ளது. மேலும், திருடப்பட்ட பணத்தை அவிநாஷ் சுக்லா என்ற ஊழியர் நேரடியாகத் தனது வங்கிக் கணக்கிலேயே டெபாசிட் செய்துள்ளார்.

பணம் மட்டுமல்லாமல், ராமர் சிலைக்குப் பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்திய கம்மல், மூக்குத்தி, கொலுசு மற்றும் வளையல் போன்ற தங்க, வெள்ளி நகைகளையும் இந்த கும்பல் அள்ளிச் சென்றுள்ளது. இந்த மெகா மோசடிக்குக் காரணமான 8 ஊழியர்களை SIT அதிகாரிகள் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாஸ்டர் மைண்ட்

அவினாஷ் சுக்லா, அனுகல்ப் மிஸ்ரா, லவ்குஷ் மிஸ்ரா, மனிஷ் குமார் யாதவ், கருணேஷ் பாண்டே, ரமாசங்கர் மிஸ்ரா, சுபாஷ் ஸ்ரீவஸ்தவா மற்றும் ரம்ஷங்கர் யாதவ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் அனுகல்ப் மிஸ்ராவின் வீட்டிலிருந்து ஏற்கனவே 10 லட்சம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தின்னு யாதவ் மற்றும் சுபாஷ் ஸ்ரீவஸ்தவா ஆகிய இருவரும்தான் இந்தத் திருட்டு நெட்வொர்க்கின் முக்கிய மாஸ்டர்மைண்ட்கள். தின்னு யாதவ், அறக்கட்டளை நிர்வாகி சம்பத் ராயின் ஓட்டுநராகப் பணிபுரிந்து, தன் செல்வாக்கைப் பயன்படுத்தித் தனது உறவினரான மனிஷ் யாதவுக்கு வேலை வாங்கித் தந்துள்ளார். அதேபோல் அனுகல்ப் மிஸ்ரா தன் மைத்துனர் லவ்குஷை இந்த டீமில் சேர்த்துள்ளார். இப்படி சிபாரிசு மூலம் சேர்ந்தவர்களே இந்த கூட்டுத் திருட்டில் ஈடுபட்டுள்ளனர்.

கோடி கணக்கில் கொள்ளை

கோயிலிலிருந்து சுமார் 7 முதல் 7.5 கோடி ரூபாய் வரை திருடப்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளன. இருப்பினும், அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை. தற்போது வரை 70 லட்சம் ரூபாய் ரொக்கம் மீட்கப்பட்டு எண்ணப்பட்டு வருகிறது. மேலும், சில வங்கி அதிகாரிகள் மற்றும் அரசு ஊழியர்களுக்கும் இந்த மோசடியில் தொடர்பிருக்கலாம் என்பதால் அயோத்தி விவகாரம் இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *