‘கழுத்தை நெரிக்கும் இணைய கூலிப்படைகள்!’ – கடிவாளம் போடுமா கட்சிகள்? |“Online Troll Armies Tightening the Noose!” – Will Political Parties Rein Them In?

Spread the love

திமுக மீது மாற்றுக்கருத்துகளை முன்வைக்கும் யாரும் சமூகநீதிக்கு எதிரானவர்கள் என கூண்டில் ஏற்றுவார்கள். எந்த அடையாளத்தையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் ஒரு கூட்டம் கருத்துக் கூறுபவர் மீது பாயும். திமுக அரசின் தோல்விக்கு நியாயமான விமர்சனங்களுக்கு கூட காது கொடுக்காமல், தமிழகம் சொர்க்கப்புரியாக மாறிவிட்டது என்கிற மாயப்பிம்பத்தை தங்களது இணைய கூலிப்படைகள் மூலம் உண்டாக்கியதும் முக்கிய காரணம். களத்தின் எண்ணம் வேறாக இருந்தது. மக்களின் தீர்ப்பு வேறாக இருந்தது.

‘மாற்றம்….மாற்றம்…’ எனக் கூவி ஆட்சிக்கு வந்த தவெகவின் ஆட்சியிலும் இணைய படைகளின் அட்டூழியம் தொடர்வதுதான் பெரும் சோகம். விஜய் சேதுபதி போன்ற பிரபலமான அவருக்கென ரசிகர் வட்டமும் செல்வாக்கும் கொண்ட நபரையே இவர்களின் இணைய வழி தாக்குதலால் நிலை குலையச் செய்ய முடிகிறது.

மற்றக் கட்சிகளைப் போல இவர்களும் விமர்சிக்கும் விஜய் சேதுபதியின் மீது முத்திரை குத்துகிறார்கள். ‘விஜய் சேதுபதி ஒரு 200 ரூபாய் உ.பி, கொத்தடிமை…’ என அத்தனை வசை மொழிகள்.

விஜய் சேதுபதி திமுகக்காரராகவே இருந்தால்தான் என்ன? முன்வைக்கும் கருத்துக்கு எதிர்க்கருத்தை பேசுங்கள், உரையாடுங்கள். தவெகக்காரர்கள் மட்டும்தான் தவெக அரசை நோக்கி கேள்வி கேட்க வேண்டுமென்றால், இங்கே தவெகவை ஆதரித்து வாக்களித்தவர்களை விட எதிராக வாக்களித்தவர்கள்தான் அதிகம்.

தவெகக்காரர்கள் மட்டும்தான் தவெக அரசை நோக்கி கேள்விகளை கேட்க வேண்டுமென்பது ஜனநாயக விழுமியங்களுக்கு மதிப்பே இல்லாமல் செய்துவிடும். கேள்வி கேட்கும் நபர் யார் இவரின் பின்னணி என்னவென்று முத்திரை குத்துவதற்கு ஏற்ற பாய்ண்டுகள் கிடைக்கும் வரை அகழ்வாராய்ச்சி செய்வதை விட்டு, கேள்விகளுக்கு உரிய பதிலையும் வாதத்துக்கு உரிய எதிர்வாதத்தையும் வைப்பது எளிதான வேலையே. ஆனால், வெகுஜன அரசியல் கட்சிகளின் இணையக் கூலிப்படைகளுக்கு அந்த ஜனநாயகத்தன்மை கற்றுக்கொடுக்கப்படவே இல்லை.

இணையத்தில் விமர்சிக்கும் மக்களின் வாயை அடைக்கலாம். குரல்வளையை நெரிக்கலாம். ஆனால், களத்தில் எப்போதும் அதை செய்ய முடியாது. எதிர்க்குரல்கள் அடக்கப்பட அடக்கப்பட அந்தக் குரல்களுக்கு ஆதரவாக மக்களின் எண்ணமும் கருத்தாக்கமும் திரண்டு நிற்கும். வாய்ப்பு வரும்போது சரியான பதில் அடியை மக்கள் கொடுப்பார்கள்.

ஆக, தங்களின் இணைய கூலிப்படைகளுக்கு கடிவாளம் போட வேண்டியது அரசியல் கட்சிகளின் கடமை. தறிக்கெட்டு போக அனுமதித்தால் தக்கப் பதிலடியை மக்களே கொடுப்பர் என்பதே காலம் நமக்கு சொல்லி வரும் பாடம்.!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *