படம் அவுட்டு… பாட்டு ஹிட்டு! – வி.ராம்ஜி
காலை மாலை என்பதெல்லாம் நமக்கு வெறும் பொழுகள்தான். கூட்டை விட்டு சூரிய உதயத்தின் போது பொருளீட்டச் சென்றுவிட்டு, அந்திசாயும் நேரத்தில், சூரியன் மறைகிற தருணத்தில் வீடு எனும் கூட்டுக்குள் வந்தடைகிறவர்கள்தானே நாம்! ஆனால் கவிஞர்களுக்கு காலை, மதியம், உச்சிவெயில், மாலை, இரவு, நள்ளிரவு என எல்லாப் பொழுதுகளிலும் கவிதைப்பூக்கள் மலர்ந்து கொண்டேதான் இருக்கும்; மணம் பரப்பிக்கொண்டேதான் இருக்கும்.
மாலை நேரம் வந்துவிட்டால் ஒரு மயக்கமும் ரிலாக்ஸும் தேவைதான் எல்லோருக்கும். எட்டுமணி நேர வேலைக்குப் பிறகு கிடைக்கிற ஓய்வு உன்னதம்தான்! அந்த மாலை நேரம் தொடங்கிய பிறகு ஒருத்திக்குள் காம சிந்தனைகளும் தொடங்கிவிட்டால் என்ன செய்வாள்? ‘இது மாலை நேரத்து மயக்கம்’ என்று பாடத்தான் செய்வாள்!
1970ஆம் ஆண்டு ‘தரிசனம்’ என்றொரு படம் வந்தது. ஏவிஎம் ராஜனும் அவரின் மனைவி புஷ்பலதாவும் ஜோடி போட்டு நடித்த படம். தவிர, அன்றைக்கு யாரெல்லாம் முக்கியமான நடிகர்கள் என்று நாம் நினைத்தோமோ அவர்களில் பலரும் நடித்த படம் என்ற பெருமையும் ‘தரிசனம்’ படத்துக்கு உண்டு.
காரைக்குடியில் இருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள கோட்டையூர்தான் என் தாத்தாவின் ஊர். ‘இவன் தான் அரசு. வி.டி.அரசு. என் தோஸ்த்து’ என்று அவரை தாத்தா எனக்கு அறிமுகம் செய்து வைத்தார் என்பது மங்கலாக நினைவிருக்கிறது. இந்த வி.டி.அரசு பார்ட்னராக இருந்தும், தனியாகவும் என பல படங்களைத் தயாரித்திருக்கிறார். ‘பிள்ளையார்’ என்ற படத்தையும் தயாரித்தார். ‘தரிசனம்’ படத்தின் தயாரிப்பாளரும் இவர்தான்! என் தாத்தா வழி உறவான சூலமங்கலம் சகோதரிகளில் ஒருவரான சூலமங்கலம் ராஜலட்சுமிதான் இந்தப் படத்துக்கு இசையமைத்தார்.
ஆனால் ‘தரிசனம்’ படத்தை தரிசிக்க ரசிகர்கள் வரவே இல்லை என்பதுதான் சோகம். ‘தரிசனம்’ என்று படத்துக்கு தலைப்பு வைத்திருந்ததால் ஆன்மிகப்படம், பக்திப்படம் என்று நினைத்துவிட்டார்களா? அல்லது பக்திப்படமாக இருக்கும் என்று நினைத்துப் போனால், ‘மாலை நேரத்து மயக்கம்’ என்றெல்லாம் பாட்டு வைத்தால் என்னய்யா அர்த்தம்? என்று நினைத்துவிட்டார்களா… தெரியவில்லை. ‘இலவச தரிசனம்’ செய்யக்கூட எவரும் ஆர்வம் காட்டவில்லை. ஆனால் பாட்டு…? பாட்டு? பாட்டு? அந்தப் பாட்டுதான் 56 ஆண்டுகள் கடந்தும் கூட இந்தப் படத்தைப் பற்றி நினைவூட்டிக்கொண்டே இருக்கிறது.
கவியரசு கண்ணதாசன் பாடல்களை எழுதினார். சூலமங்கலம் ராஜலட்சுமி இசையமைத்தார். ஏவிஎம் ராஜப், ‘காமமாவது கண்றாவியாவது’ என்று நொந்து, தத்துவம் பேசி, வாழ்க்கையையே புறக்கணிப்பார். அவர், இயல்பு நிலைக்குத் திரும்புவதற்காகவும் ’தொடர்பு எல்லைக்கு அப்பால்’ இல்லாமல் ‘நெட்’ எனும் செக்ஸ் வலையில் விழவைப்பதற்காகவுமாக விரகத்துடனும் தாபத்துடனும் விரக தாபத்துடனும் பாடி அழைப்பாள் ஒருத்தி!
சாதாரண சிச்சுவேஷன் என்றாலே சித்தாந்தங்களைக் கொட்டுகிற கவியரசருக்கு இப்படியொரு காட்சிக்குப் பாடல் எழுதவேண்டும் என்றால் எப்படியிருக்கும்?
இது மாலை நேரத்து மயக்கம்
பூமாலை போல் உடல் மணக்கும்
இதழ் மேலே இதழ் மோதும்
அந்த இன்பம் தோன்றுது எனக்கும்
என்று பெண் குரல் பாடும். இப்படியான பாடல் வரிகள் போதைதான்.அந்த போதையை ராஜபோதையாக்குகிற வித்தை, எல் ஆர். ஈஸ்வரியின் குரலுக்குள்ளேயே குடித்தனம் செய்யும்போது, இந்தப் பாடலை அவருக்குத் தந்ததில் வியப்பென்ன?
இது காலதேவனின் கலக்கம்
இதை காதல் என்பது பழக்கம்
ஒரு ஆணும் ஒரு பெண்னும்
பெறப் போகும் துன்பத்தின் துவக்கம்
டி. எம். செளந்தர்ராஜன் பாடினாலே, அது நமக்குப் பாடம்தான். அப்பா சொல்லுவது போல் இருக்கும். மாமா அட்வைஸ் சொல்லுவது போல் இருக்கும். இது நண்பன் சொல்லுவது போல இருக்கும். ‘இதழ் மேலே இதழ் மோதும் அந்த இன்பம் தோன்றுது எனக்கும்’ என்று நாயகி பாடுகிறாள். ஆனால் நாயகனோ, ‘ஒரு ஆணும் ஒரு பெண்ணும் பெறப்போகும் துன்பத்தின் துவக்கம்’ என்று புறக்கணிக்கிறான். நகைத்து கேலியும் செய்கிறான்.
பனியும் நிலவும் பொழியும் நேரம்
மடியில் சாய்ந்தாலென்ன பசும் பாலைப் போல
மேனி எங்கும் பழகிப் பார்த்தாலென்ன
பனி சரி. நிலவு பொழியுது. அதுவும் புரியுது. பசும்பாலைப் போல மேனி எங்கும் பழகிப் பார்த்தாலென்ன… என்பது என்ன? எதைச் சொல்லுகிறார் கவியரசர்? அதாவது கடவுள் திருமேனிக்கு பாலபிஷேகம் செய்வார்கள் அல்லவா. அப்போது சிலையில் பாலபிஷேகம் செய்ததும் இறைவனின் திருமேனி முழுவதுமாக, பளீரென நிர்மால்யமாகத் தெரியும்தானே! அப்படி, ‘பசும்பாலைப் போல மேனியெங்கும் பழகிப் பார்த்தாலென்ன?’ என்கிறார். அப்படி என்னை நிர்வாணமாகப் பாருடா… என்கிறார் நாயகி. இதைக் கேட்டு கொந்தளிப்பாகிறார் நாயகன்.
உடலும் உடலும் சேரும் வாழ்வை
உலகம் மறந்தாலென்ன
தினம் ஓடியாடி ஓயுமுன்னே
உன்மை உணர்ந்தாலென்ன
‘என்னடா நீங்க? என்னம்மா நீங்க? இப்படி உடலும் உடலும் சேரணும் சேரணும்னு ஏன் தவிக்கிறீங்க? இதுதான் சுகம்னு ஏன் நினைக்கிறீங்க? இது வாழ்க்கை இல்லை. இது உண்மை இல்லை’ என்று டிஎம்எஸ் பேரானந்த செக்ஸை, அதையும் தாண்டிய பேரமைதித் தத்துவத்தின் சொல்லாகச் சொல்லி உணர்த்துகிறார்.
உறவுக்கு மேலே சுகம் கிடையாது
அணைக்கவே தயக்கமென்ன
என்று அவள் விடாப்பிடியாக இருக்கிறாள். இவனோ, பிடிவாதமாக மறுக்கிறான். அதுவும் எப்படி?
இது ஓட்டை வீடு ஒன்பது வாசல்
இதற்குள்ளே ஆசையென்ன
என்று சொல்லிவிட்டு, ஒரு அசட்டுத்தனமாக, வெறுமையுடன் ஒரு சிரிப்பைச் சிரிப்பார் அந்த மதுரைக்கார பாடகர். ஆனால் எல் ஆர் ஈஸ்வரியம்மாவின் குரலுக்கு நாமெல்லாம் எம்மாத்திரம்? மகுடிக்குக் கட்டுப்பட்ட பாம்பு என்பார்கள். ஆனால் அந்த மகுடியை வாசிக்கும் பாம்பாட்டியே இந்தக் குரலில் சிக்கிப்போவான்; சொக்கிப்போவான்!
முனிவன் மனமும் மயங்கும் பூமி
மோக வாசல் தானே
தினம் மூடி மூடிஒடினாலும்
தேடும் வாசல்தானே
இதற்கு மேல் கண்ணதாசனாலும் பொறுத்துக் கொள்ளமுடியவில்லை போல! செக்ஸ் செக்ஸ் செக்ஸ்… இதுதான் பெரிய பிரச்னையா இங்கே? இதுதான் பெரிய ஆசையும் கனவுமா இங்கே? என்று தன் பேனாவை இன்னும் கூர்தீட்டுகிறார் கவிஞர்.
பாயில் படுத்து நோயில் விழுந்தால்
காதல் கானல் நீரே
இது மேடு பள்ளம் தேடும் உள்ளம்
போகும் ஞானத்தேரே
இல்லறம் கேட்டால் துறவறம்
பேசும் இதயமே மாறி விடு என்று ஈஸ்வரியம்மா கெஞ்சுகிறார்.
இது ஆடி ஓடி சாய்ந்த தென்னை
உன்னை நீ மாற்றி விடு
என்று சொல்லிவிட்டு, பாடலை முடிக்கும் வாய்ப்பை, நாயகனுக்கு வழங்கி உத்தரவிடுகிறார் இயக்குநர். ‘அப்படியே ஆகட்டும்’ என்று கவிஞர் முடிக்க, மாலை நேரத்தின் மயக்கத்தை விரட்டி, காலதேவனின் கலக்கம் என்றாக்கி, ‘போம்மா போ…’ என்று ‘ஜெயம்’ படத்தின் சதா போல், வாசல் காட்டி வழியனுப்பிவைக்கிறார், அந்தப் பெண்ணையும் காமத்தையும்!
இது காலதேவனின் கலக்கம்
இதை காதல் என்பது பழக்கம்.
ஒரு ஆணும் ஒரு பெண்னும்
பெறப் போகும் துன்பத்தின் துவக்கம்
இந்தப் பாடலை பல முறை கேட்டிருக்கிறேன். இந்த முறை டிஎம்எஸ் குரல் சொல்லும் சேதியைக் கேட்க வேண்டும் என மனசுக்குள் சங்கல்பம் செய்துகொண்டு பாடலைக் கேட்பேன். ‘காதலாவது கத்தரிக்காயாவது, காமமாவது புண்ணாக்காவது’ என்று தோன்றும். இந்த முறை எல்ஆர் ஈஸ்வரியின் குரலுக்காக, வரிகளுக்காகக் கேட்க வேண்டும் என மனசை ‘க்ளீன் ஸ்லேட்’டாக வைத்துக்கொண்டு, கேட்பேன். திருவள்ளுவர் எழுதிய காமத்துப்பாலும் கண்ணதாசனுடன் சேர்ந்து வந்து, பாரதிராஜா படத்து கோரஸ் பெண்கள் போல், சுற்றிச்சுற்றிவந்து காதலையும் காமத்தையும் சொல்லிச் செல்வார்கள்.
இதில் எதுதான் உசத்தி? பட்டிமன்றங்களில் சில தருணங்களில், இந்தப் பக்கம் அந்தப் பக்கம் என்றில்லாமல், நடுவிருந்து ஒரு தீர்ப்பு சொல்லப்படுவது போல்தான், ‘இது மாலை நேரத்து மயக்கம்’ பாடலும்!
‘மாலை நேரத்து மயக்கமா? – ஆமாம்.
‘காலதேவனின் கலக்கமா?’ – ஆமாம்பா ஆமாம்!

