வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்
காலாண்டு பரிட்சை முடிந்து பள்ளிகளுக்கு விடுமுறை விட்டாச்சு.பாத்திமாவுக்கு ஒரே கவலையாக இருந்தது. இனி லீவு முடியுற வரை மகன் அஸாரையும் தன்னுடன் கூடவே கூட்டி வர வேண்டிய கட்டாய சூழ்நிலை. மூன்றாம் வகுப்பு தான் படிக்கிறான்.வேறு வழியில்லாத காரணத்தால் பாத்திமா மகனை கூடவே கூட்டிட்டு வந்துட்டா.காட்டூர் சர்ச் வாசலில் பஸ்விட்டு இறங்கினதும் “கண்ணா !
இந்த சர்ச் காம்பவுண்டு உள்ளாற அப்புறம் பஸ் ஸ்டேண்ட் மேடை இங்கேய விளையாடிட்டு இரு.
இந்தப்பையில பொரி உருண்டை,மிக்சர்,தண்ணி பாட்டில் இருக்கு. நான் ஒரு அரைமணி நேரத்துல வந்து கூட்டிட்டு போறேன் “ன்னு சொல்லிவிட்டு வெகு வேகமாகப் போனாள்.
பாத்திமாவுக்கு வீடுகளில் கூட்டித் துடைத்து பாத்திரம் கழுவும் வேலை. மதுக்கரை பக்கம் மரப்பாலம் ஏரியாவிலிருந்து தினமும் வந்துட்டுப்போறா. காட்டூரிலேயே அஞ்சு வீட்டில் வேலை எடுத்திருக்கிறா. இவளது சுறுசுறுப்பும் நேர்மையும் வேலைசெய்யும் நேர்ததியும் எல்லாருக்கும் பிடிச்சதாலே இவளது கஷ்டத்தை உணர்ந்து தேவைப்படும் சமயத்தில் உதவிகள் செய்வாங்க.

என்னசெய்வது? காதலித்து கல்யாணம் பண்ணி கிட்ட சம்சுதின் தான் இவளுக்கு துரோகம் பண்ணிட்டான். எதிர்த்த வீட்டு நிக்ஷா கூடத் தொடர்பு வச்சிட்டு இவளை ஏறத்தாழ ஒதுக்கியே விட்டான்னு சொல்லலாம். நல்லவேளையாக ஒரே பையன் அஸாருதீனுடன் நின்னுட்டதால பாத்திமாவுக்கு சுமை கொஞ்சம் குறைவு… புருக்ஷனை எதிர்பார்க்காம மகனுடன் காலத்தை ஓட்டுகிறாள்….
பார்க் வீதியில் காளியம்மாள் இல்லத்தின் கிரவுண்ட் புளோரில் இருந்த மூன்று கடைகளின் முன்பும் கூட்டித்தெளித்தாள். அங்கிருந்த டாய்லெட் முன்னாடி காளியம்மா பாட்டி தன்னோட காவி சேலைய சோப்பே போடாம தேச்சு கசக்கி தொவைச்சுட்டிருந்தாங்க. பாவம் சொத்தை எழுதி வாங்கற வரைக்கும், ஓட்டு வீட்டில இருந்தப்ப கூட மாமியாரை தலையில் வச்சுக் கொண்டாடிய மூணு மருமகள்களும் இப்ப கண்டுக்கறதே இல்ல..
கீழ்ப்பகுதியில் ஆளுக்கொரு கடையும், மூணுதளங்களில் இரண்டிரண்டு வீடுகளாகவும் கட்டிக்கொண்டனர். காம்பவுண்டில் காளியம்மாள் இல்லம் என்ற பெயர்ப்பலகை மின்னிக்கொண்டிருந்தாலும் காளியம்மாளுக்கோ எதிர்நீச்சல் நாகேஷ் போல் மாடிப்படிக்கு அடியில் தான் ஜாகை. இதைப் பார்க்கும்போது எல்லாம் பாத்திமாவுக்கு தன்னோட நிலைமை எவ்வளவோ பரவாயில்லை என்று தோன்றும்.
தொட்டராயன் கோவில் வீதியில் மலர் டீச்சர் வீட்டில் எல்லாருமே ஈச்சனாரிக்கு கல்யாணத்துக்கு போய் விட்டதாக அங்கிருந்த அலமேலு பாட்டி சொன்னதால் உடனே திரும்பி விட்டாள். வரும்வழியில் தனக்கும் அஸாருக்கும் ரோட்டுக்கடை கற்பகத்திடம் இட்லி கட்டி வாங்கிகிட்டு ஜெயில்ரோடுக்கு வந்தாள். பஸ் ஸ்டாண்டுல கூட்டமா இருந்துச்சு. மகனை தேடிப்பார்த்தா, இருக்கச் சொன்ன இடத்துல அவனக் காணோம். மறுபடியும் பதட்டத்துடன் சுத்தி சுத்திப்பார்த்தா.
திடீர்னு பழக்கப்பட்ட ஒரு குழந்தையின் சிரிப்பு சத்தம் கேட்டது. திரும்புனா ஹோட்டல் கருணாஸ் முன்னாடி அஸாருடன் சேர்ந்து நிலாபர் ( நிக்ஷாவின் மகள்) நின்னுட்டிருந்தா. இதைப் பார்த்த பாத்திமாவுக்கு வந்த கோபத்துக்கு அளவு சளவே இல்ல. ஓடிப்போய் மகனைப் பிடிச்சு இழுத்து நல்லா நாலு சாத்து (அடி) கொடுத்தா… காரணம் தெரியாமலும் வலி பொறுக்க முடியாமலும் அஸார் சத்தமாக அழுதான். ஏதும் புரியாத நிலாபரும் சேர்ந்து அழுதாள்.பஸ் ஸ்டாண்டில் நின்னவங்க எல்லாம் வேடிக்கை பார்க்க,பாத்திமா சர்ச் காம்பவுண்டுக்குள் வந்துட்டா. நெஞ்சு படபடப்புஅதிகமானது.
அழுகை வந்தது.
குழந்தைகளும் உடனே பின்னாடியே வந்து அழுதபடியே காலைக் கட்டிக்கொண்டனர். “அம்மா நா ஒரு தப்பும் செய்யலம்மா ,என்னை ஏம்மா எல்லார் முன்னாடியும் அடிச்சே?” தேம்பியபடியே அஸார் கேட்டான். “உனக்கு புரியாதுடா, அந்த கேடு கெட்டவ, நம்ம குடும்பத்துல குழப்பம் உண்டாக்கி நாசப்படுத்துனவ, உங்கப்பன நம்மகிட்ட இருந்து பிரிச்ச அந்த சிறுக்கியோட புள்ளகூட உனக்கென்ன வெளையாட்டு?அம்மா படற கஷ்டம் உனக்குதெரியலையாடா கண்ணா,பஸ்ல வர்றப்ப நாம ரெண்டுபேருந்தான வந்தோம். பின்ன இவ எப்படி இங்க வந்தா?”பேசிக்கொண்டே பாத்திமாவும் அழுதாள்.

” அத்தே! நான் தனியாத்தான் வந்தேன்.எங்க அம்மாவும் அஸார் அப்பாவும் வண்டியிலே கிளம்பி எங்கயோ போனாங்க. எனக்கு வீட்டுல தனியா இருக்க பயமா இருந்துச்சு. அப்பதா உங்க கூட அஸார் வந்தது ஞாபகத்துக்கு வந்துச்சு. நானும் பஸ் ஏறி இங்க வந்து இறங்கிட்டேன் .அஸார் சர்ச் வாசல்லே இருந்ததை பார்த்து சந்தோக்ஷமாயி அவன் கூட விளையாடினேன்..” என்றாள். பாத்திமா திட்டியதன் காரணம் புரியாவிட்டாலும் தன்னால தான் அஸார் அடிவாங்கினான் என்பதை அவளது முகபாவனை தெளிவாக உணர்த்தியது.
“என்ன பொறுப்பில்லாத ஜன்மங்க இதுக,ஒரு அறியாப் பொம்பளைப்புள்ளய தனியா விட்டுட்டு எங்க போய்த் தொலஞ்சாங்க சனியனுங்க,?” என்று முணுமுணுத்த பாத்திமாவ,”அத்தை!பசிக்குது அத்தை!தண்ணி கொஞ்சம் குடுக்கிறீங்களா அத்தை! என்ற நிலாபரின் குரல் திரும்பிப் பார்க்க வச்சுது. அஸாரும் பரிதாபமாகப் பார்த்தபடி நின்றான். அந்த நொடியில் அவளோட கோபமும் எதிர் மறை எண்ணமும் மெழுகாய் உருகி கரைய, சர்ச்சின் பக்கவாட்டு வாசலுக்கு இருவரையும் கூட்டிட்டு வந்து உட்கார வைத்தாள். வாங்கிட்டு வந்த இட்லியை ரெண்டு பேருக்கும் குடுத்து சாப்பிடச் சொன்னா. “அம்மா உனக்கு ?” என்றான் அஸார்.
“சாப்பிட்டுட்டு இருங்க நான் வர்றேன் “, னு எந்திரிச்ச பாத்திமா. “ஆமா உங்களுக்கு புரோட்டா வேணுமா இல்ல ரோஸ்ட் வேணுமா” ன்னு கேட்டாள். உடனே குக்ஷியான ரெண்டுபேரும் ஒருமித்த குரலில் இன்னைக்கு புரோட்டா, நாளைக்கு ஆனியன் ரோஸ்ட்” என்று சத்தமாக சொன்னார்கள்.. வாய்விட்டு சிரிச்சவ உடனே கருணாஸ் ஓட்டலுக்குள போய் புரோட்டா வாங்கி வந்தாள். குழந்தைக திருப்தியா சாப்பிட்டாங்க. மனசு நெறைஞ்ச பாத்திமா குழந்தைக சாப்பிட்டு மிச்சம் வச்சதை சாப்பிட்டு முடித்து தண்ணி குடிச்சா. லஆனாலும் ஒரு டீ குடிச்சா நல்லாருக்கும் னு மனசுக்கு பட்டுச்சு.
“டேய் கண்ணா இங்கேய இருங்க, நான் போய் சக்தி ஆஸ்பத்திரி கிட்ட போய் மோகனலட்சுமி பேக்கரில ஒரு டீ குடிச்சுட்டு இன்னும் ரெண்டு வீட்ல வேலை இருக்கு. முடிச்சுட்டு வந்துடறேன். அப்புறம் வீட்டுக்கு போலாம்”, என்றாள். “பேக்கரிக்கு போறியாம்மா? நானும் வர்றேம்மா. ஒரு பத்து ரூபா குடும்மா, அம்மா ப்ளீஸ் மா” ,என்று கெஞ்சினான் அஸார்.. “எதுக்குடா? எங்கிட்ட இப்ப காசு இல்ல, சும்மா இரு, கோபத்தை வரவைக்காதே,தள்ளு ,
மறுபடியும் சொல்றேன் சர்ச் கேட்டுக்கு உள்ளேயே இருங்க, வெளியே வந்துறாதீங்க,”என்று சொல்லியபடி கிளம்பினாள்.
“அம்மாம்மா! ப்ளீஸ்மா! இன்னைக்கு நிலாபருக்கு பெர்த் டேம்மா! அதான் ரெண்டு அஞ்சு ரூபா dairy milk வாங்கி ரெண்டு பேரும் சாப்பிடறோம்மா”, என்று கெஞ்சியபடி பின்னாடியே வந்தான்.
ஏதும் பேசாமல் கிளம்பிய பாத்திமா செல்லப்பன் வீதியில் சரசம்மா வீட்டில வேலைய முடிச்சுட்டு,ரங்கன் தெருவுல வாத்தியார் வீட்டுக்கு வந்தாள். வாத்தியார் வீட்டுக்கு மகள் தேன்மொழியோட குடும்பம் வெளிநாட்டில் இருந்து வந்திருந்தாங்க. அதனால நாளைக்கு வரச்சொல்லிவிட்டு வெளிநாட்டு சாக்லேட்டுகள்,
கூடவே இனிப்புகள் அப்படீன்னு கொஞ்சம் கொடுத்தாஙக . வாங்கிக்கொண்டு ரோட்டுக்கு வந்து பேக்கரில டீ குடிச்சுட்டு , சின்னதா ஒரு கேக்கும் வாங்கிட்டு சர்ச்சுக்கு வந்தா. குழந்தைக ஓடி வந்தாங்க. கேக்கை நிலாபர் கையில் குடுத்து வாழ்த்து சொன்னாள்.. சாக்லேட், இனிப்புகளை ரெண்டுபேருக்கும் பங்கு போட்டு தந்தாள்..
அழகான நிலாபர் முகம் இதனால மேலும் பிரகாசமா அழகா மாறிடுச்சு…. சந்தோக்ஷத்துடன் ஓடி வந்த அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டாள் பாத்திமா. அந்த அணைப்பில் ஒரு பாதுகாப்பை உணர்ந்தது அந்த சின்ன பிஞ்சுமனம்.. அஸாரும் வந்து அம்மாவை பாசத்துடன் கட்டிக்கொண்டான். மூவரும் வெளியே வந்தபோது பஸ் ஸ்டாண்டுக்கு பின்னாடி சர்ச் காம்பவுண்டு சுவரில் கூண்டில் அமைந்திருந்த மேரி மாதாவின் சிலை சிரித்தபடி பாத்திமாவைப் பார்த்து “என்றென்றும் எங்கும் தூய்மையான உன் தாய்மையே வெல்லும் ,”என்று வாஞ்சையுடன் வாழ்த்துவதுபோலிருந்தது ……!
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது.
இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..!
இந்த வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப்பில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே…!
Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!