இயற்கையின் மாபெரும் சக்திகளில் ஒன்றான ஆறுகள், சில சமயங்களில் தங்களின் வழக்கமான பாதையை விட்டு விலகி, திடீரென ஒரு புதிய வழியில் பயணிக்கத் தொடங்கும். புவியியலில் இந்த நிகழ்வு “அவல்ஷன்’ (Avulsion) என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு பகுதியின் நில அமைப்பையே குறுகிய காலத்தில் மாற்றி எழுதும் திறன் கொண்டது.
இப்போது நேபாளத்தில் நடந்ததும் இது தான். ஒரு பனிப்பாறை சரிவு… அதனை தொடர்ந்து பெரு வெள்ளம். கரைகளை உடைத்து உயிர்களையும் அவர்களின் உடமைகளையும் அடித்துச் சென்றிருக்கிறது.
வெள்ளப் பெருக்கைத் தடுக்கக் கட்டப்பட்ட பிரம்மாண்டமான கரைகள் ஒருபோதும் உடையாது என்று நேபாள மற்றும் இந்திய மக்களும், அரசாங்கங்களும் எளிமையாக நம்பினர். ஆனால், இரு நாடுகளிலும் ஆற்றுக்கரைகள் உடைந்து பேரழிவை ஏற்படுத்தியதற்கான நீண்ட, சோகமான வரலாறு ஏற்கெனவே இருந்தது.
இது, இயற்கையை அடக்க நினைத்த மனிதனின் முயற்சி, விபரீதத்தில் முடிந்ததன் வரலாறு.
காலனி ஆதிக்கத்திற்கு முந்தைய வட இந்தியாவில், விவசாயிகள் மற்றும் ஜமீன்தார்கள் அவ்வப்போது தற்காலிக மண் கரைகளை (‘பந்த்ஸ்’) அமைப்பது வழக்கம். இது சிறிய நிலப்பரப்பை குறிப்பிட்ட காலத்திற்கு வெள்ளத்திலிருந்து பாதுகாக்க மட்டுமே பயன்பட்டது.
ஆனால், வெள்ளத்தை முழுமையாகத் தடுப்பது அவர்களின் நோக்கமாக இருக்கவில்லை. மாறாக, அவ்வப்போது ஏற்படும் வெள்ளப்பெருக்கு, மலைப்பகுதிகளிலிருந்து வண்டல் மண்ணையும் கரிமப் பொருட்களையும் கொண்டுவந்து வயல்களை வளப்படுத்தியதால், ரசாயன உரங்கள் இல்லாத அக்காலத்தில் விவசாயிகள் அதை நம்பியிருந்தனர். வெள்ளம் சில நேரங்களில் கிராமங்களுக்குள் புகுந்தாலும், அதன் வேகம் குறைவாக இருந்ததால் பாதிப்புகள் குறைவாகவே இருந்தன.
ஆனால், தெற்காசியாவில் நிரந்தரமாக வெள்ளத்தைத் தடுக்கும் நோக்கில் பெரிய அளவிலான கரைகளை முதலில் கட்டியவர்கள் ஆங்கிலேயர்கள்தான். ஏழை விவசாயிகளுக்குப் பயனளிக்கும் என்று அவர்கள் கூறினாலும், அதன் பின்னணியில் அவர்களின் சுயநலமும் இருந்தது. ஒரிசாவின் மகாநதி டெல்டாவில், சொத்துக்களைத் தெளிவாக வரையறுக்கவும், வரி வசூலிக்கும் அதிகாரத்தை வலுப்படுத்தவும் ஆங்கிலேயர்கள் இந்தத் திட்டத்தைப் பயன்படுத்தினர். மேலும், தங்களது ரயில்வே போன்ற உள்கட்டமைப்புகளைப் பாதுகாக்கவே கரைகளைக் கட்டினர்.
1850-களில், கல்கத்தாவிற்கு மேற்கே தாமோதர் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டது அவர்களின் மிக முக்கியமான திட்டங்களில் ஒன்று.